செய்திகள்

இலங்கையில் இலட்சாதிபதிகளை உருவாக்கும் இலஞ்சம்

தாயகன்

இலங்கையில் ஆட்சிபீடம் ஏறும் ஒவ்வொரு அரசுகளும் நாட்டிலிருந்து இலஞ்ச, ஊழல் மோசடிகளை ஒழிக்கப் போவதாக சூளுரைப்பதும் வீரவசனங்கள் பேசுவதும் பின்னர் அந்த இலஞ்ச, ஊழல் மோசடி வலைகளில் தாமே சிக்கிக்கொள்வதுதான் வரலாறாகவுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சியில் கடந்த ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரின் புதல்வர்கள், சகோதரர்கள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்கள், அரச திணைக்கங்களின் தலைவர்கள் எனப்பலர் இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுமுன் ஆஜராகி வருவதையும் ஊழல், இலஞ்சம் தொடர்பில் புதுப்புதுக் கதைகள் தினமும் வெளிவந்து கொண்டிருப்பதையும் காணமுடிகின்றது.

இந்நிலையில் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலஞ்சம், ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய ஐ. ம. சு. கூ. வின் மகிந்த ஆதரவு அணி எம். பி. யான ரஞ்சித் டி. சொய்சா 2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இடம்பெற்ற இலஞ்ச, ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டோரின் பெயர் விபரங்களை முறைப்பாட்டு இலக்கங்களுடன் சபைக்கு சமர்ப்பித்தார்.

அந்த இலஞ்ச, ஊழல் மோசடியில் ஈடுபட்டோர் பட்டியலில் தற்போயை நல்லாட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்ட தற்போதையை அரசில் அமைச்சர்களாகவுள்ள பலரின் பெயர்கள் உள்ளன.  இதுதான் இலங்கை.

நாடு முழுவதும் இலஞ்சப்பேய் தலைவிரித்தாடுகிறது எனஅரசியல் தலைவர்கள்,ஊழலில்ஊறித்திளைத்தவர்கள்எனமுத்திரை குத்தப்பட்டவர்கள் உட்பட அனைவரும் முழங்குகின்றனர்.  ஒவ்வொருவரும், தான் மிகவும் நேர்மையானவன் என்றும், சுத்தமானவன் என்றும், மற்றவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள் என்றும்  கூப்பாடுபோடுகின்றனர்

இலஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம்’ என,அரசு சட்டம் இயற்றி, அக்குற்றத்திற்கான தண்டனைகளை யும் வரையறுத்திருக்கிறது. ஆனால் இலஞ்ச ஊழலோ இந்த சட்டங்களால் அணைபோட்டு தடுக்க முடியாத பெருவெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது.  ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் இலஞ்சம் கை மாறிக்கொண்டேயிருக்கிறது.

national march 2013_double spreadஉலகில் நான்கில் ஒருவர் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என்று உலக அளவில் நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. ஜெர்மனியின் பெர்லின் நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது.

உலகில் இலஞ்ச சூழ்நிலை மோசமடைந்துவருவதாக பரவலான கருத்து நிலவுவதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. செல்வந்த நாடுகளில் ஒருவர் இலஞ்சம் கொடுக்கவேண்டி வருகின்ற தருணங்களைப்போல் இரண்டு மடங்கு அதிகமான தருணங்களில் ஏழை நாடுகளில் ஒருவர் இலஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது எனவும் இந்த ஆய்வு காட்டுகிறது.

107 நாடுகளிலிருந்து 1,14,000 பேரிடம் கலந்துரையாடல் நடத்தி இந்த ஆய்வின் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் பின்னர் உலக அளவில் ஊழல் அதிகரித்துள்ளது என்றும் உழலுக்கு எதிராக அதிகாரிகள் எடுத்துவரும் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன என்ற பார்வை மக்களிடம் பரவலாகத் தென்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

எந்தெந்த துறையினர் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறார்கள் என்பது பற்றி இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனலைச் சேர்ந்த கோபஸ் த ஷ்வார்ட்  தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கூறுகையில்;

”நாங்கள் இந்த ஆய்வை நடத்தியதில் பாதியளவான நாடுகளில் அந்தந்த நாடுகளின் அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும்தான் இலஞ்ச ஊழலின் ஊற்றாக இருக்கிறார்கள் என்று அந்தந்த நாடுகளின் மக்கள் கருதுகின்றனர்.  இரண்டாவதாக பொலிஸார் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறார்கள் என இதில் பங்குகொண்ட நாடுகளில் முப்பது சதவீதமான நாடுகளின் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.  இருபது சதவீதமானவர்கள் ஆம் என்று சொல்ல மூன்றாவது இடத்தில் நீதித்துறை ஊழல் மிகுந்த கட்டமைப்பாக வந்துள்ளது என்றார்.

இலங்கையில் 51 சதவீதம் பேர்அரசியல்வாதிகளை ஊழல் நிறைந்தவர்களாகப் பார்க்கின்றனர் என இந்த ஆய்வு காட்டுகிறது. பொலிஸாருக்கு தாங்கள் இலஞ்சம் கொடுக்க வேண்டி வந்ததாக இலங்கையில் 43 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர் என்று இந்த ஆய்வறிக்கை சொல்கிறது.

இதேவேளை 2015 ஆம் ஆண்டிற்கான உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில் இலங்கை 83 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சீனா, கொலம்பியா, பெனின், லைபீரியா ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இலங்கைக்கு இணையான இடத்தைப் பிடித்துள்ளன.

2014 ஆம் ஆண்டைப் போலவே 2015 ஆம் ஆண்டிலும் டென்மார்க், ஊழலற்ற நாடாக முதலிடத்தில் உள்ளது. சோமாலியாவும், வட கொரியாவும் ஊழல் மலிந்து காணப்படும் நாடுகளாக கடைசிநிலையான 167 ஆவது இடத்தில் உள்ளன.

2015 ஆண்டின் உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின்  தரவரிசைப் பட்டியலை, டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது.

மொத்தம் 168 நாடுகள் கொண்ட இந்தத் தரநிலைப் பட்டியலில் ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வறானதொரு நிலையில்தான் இலங்கையில் தற்போது அமுலில் உள்ள ஊழல் இலஞ்ச ஒழிப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்.  சந்தேகத்துக்குரிய சம்பவங்களை ஆராய்வதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.  எனவே சட்டத் திருத்தம் உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதம நீதியரசரான சரத் என் சில்வா வலியுறுத்தியுள்ளார்.

முன்னால் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இதுகுறித்து மேலும் கூறுகையில்;

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற சமூகத்தை உருவாக்குவதற்கு ஐ. நா. வின் ஊழலுக்கு எதிரான ஒப்பந்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.  இந்த ஒப்பந்தத்தில் இலங்கை 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திட்டது.  இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டாவது நாடு இலங்கை ஆகும். எனவே அதனை முனைப்பாக செயல்படுத்த வேண்டிய சர்வதேச கடப்பாடு எமக்கு இருக்கிறது.

தற்போது அமுலில் உள்ள ஊழல் இலஞ்ச ஒழிப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்.  சந்தேகத்துக்குரிய சம்பவங்களை ஆராய்வதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.  இப்போதைய நிலையில் முறைப்பாடு வந்தால் மட்டுமே ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவால் விசாரணை மேற்கொள்ள முடியும்.  இது சட்டத்தில் காணப்படும் ஒரு குறைபாடாகும். மேலும் தற்போதைய சட்டத்தின் பிரகாரம், ஒருவர் உண்மைக்கு மாறாக முறைப்பாடு செய்கிறார் என்றால், அவருக்கு பத்து வருட கால தண்டனை விதிக்கப்பட முடியும்.  இவ்வாறான விதிகளின் காரணங்களால் முறைபாடு செய்வதற்கு எவரும் தயக்கம் காட்டும் நிலை இருக்கிறது என்றார்.

இதனை நிரூபிப்பது போலவே நாட்டில் திடீரென 3000 பேர் செல்வந்தர்களாகியுள்ளனர் என இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இத்தொகையில் அரசியல்வாதிகளும் மற்றும் அரசஉயர்அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தகவல்களின் பிரகாரம் அரச உயரதிகாரிகள் 250 பேரும் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைத்துள்ள முறைப்பாடுகளில் பெரும்பான்மையானவை கல்வி, பொலிஸ், மோட்டார் வாகனப் போக்குவரத்து உட்பட பல்வேறு பிரிவுகள் தொடர்பாகவே கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 1,000 பில்லியன் டொலர்கள் இலஞ்சம் கொடுக்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அதே போல இலஞ்சம் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியி 17 சதவீதத்தை சுருட்டி விடுகிறது என்று ஆசிய வளர்ச்சி வங்கியும் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இலஞ்சத்தை ஒழிக்க ஐ. நா சபையின் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் ஜனநாயக ஆட்சிமுறை பிரிவு உலகளாவிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  ஊழலும் இலஞ்சமும் ஒரு நாட்டின் சட்ட திட்டங்களை உருக்குலைய வைக்கின்றன.  ஜனநாயக அமைப்புகளை சிதைக்கின்றன.

ஏழைகளுக்கும் பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் சம உரிமைகளும் வேலைவாய்ப்புகளும் தரப்படுவதை இலஞ்சமும் ஊழலும் தடுக்கின்றன என்கிறது ஐ. நா.  சபை. இதனால் தான் 2005 ஆம் ஆண்டில் ஊழலுக்கு எதிரான ஐ. நா.  மாநாடே நடத்தப்பட்டது.  அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாக வைத்து ஐ. நா.  பொதுக் கவுன்சிலின் சட்டமே திருத்தப்பட்டது.

சர்வதேச அளவில் ஊழலையும் இலஞ்சத்தையும் எதிர்க்கும் கருவியாக இந்த சட்டம் உள்ளது.  ஒரு நாட்டின் வளம் இலஞ்சம்  ஊழல் மூலம் சுரண்டப்பட்டால் அந்த நாட்டில் பள்ளிகள் கட்டவோ, மருத்துவமனைகள் கட்டவோ, வீதிகள் அமைக்கவோ, குடிநீர் வழங்கவோ போதிய பணம் இருக்காது.  வெளிநாட்டு உதவிகளும் சுருட்டப்பட்டால் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சிகள் ஸ்தம்பிக்கும் என்கிறது இந்தத் தீர்மானம்.

இந்த இலஞ்ச ஊழலில் ஈடுபடுபவர்கள் யார் என்பது தான் விடையளிக்க இயலாத கேள்வி.

ஆகவே, எல்லாரும் இலஞ்சத்தை எதிர்க்கின்றனர் என்ற தோற்றம் உண்மை அல்ல.  முன்பெல்லாம் இலஞ்ச ஊழலே இல்லையா என்ற கேள்விக்கு பதில், ‘இருந்தது’ என்பது தான்.  ஆனால், அச்சப்பட்டுக் கொண்டே, வெட்கப்பட்டுக் கொண்டே, யாருக்கும் தெரியாமல், தன் மனைவி பிள்ளைகளுக்கு கூட அறியாமல் ஒரு சிலர் தான் இலஞ்சம் வாங்கிக் கொண்டிருந்தனர்.

பின்னர், ‘இலஞ்சம்’ என்ற கீழ்த்தரமான செயலுக்கு அரிதாரம் பூசி, மாறுவேடமிட்டு ‘அன்பளிப்பு’ என்ற புதிய நாமகரணம் சூட்டி விட்டனர்.  அதை எங்கும் கௌரவமாக பவனி வரச் செய்ததுடன், அது ஒரு சமூக அவலம், தேசத்துரோக செயல் என்ற எண்ணத்தையே, மக்கள் மனதிலிருந்து மறக்கடிக்க செய்த பெருமை, இன்றைய அரசியல்வாதிகளையே சாரும். இன்று இறைவனுக்கு அடுத்ததாக, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது இலஞ்சம் மட்டுமே.

நம்மில் எத்தனை பேர் எக்காரணம் கொண்டும், எதற்காகவும் இலஞ்சம் கொடுக்க மாட்டோம் என்று தீர்மானமாக முடிவெடுத்திருக்கிறோம் என்ற கேள்விக்கு, நிச்சயமாக திருப்தியான பதில் இல்லை.  எப்படியாவது வேலை முடிந்தால் சரி என்பதோடு, நம்மில் பலர் சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்ய இலஞ்சம் கொடுக்க தயங்குவதில்லை என்பது தான் யதார்த்தம்.

அரசியல் என்பது, ‘மக்கள் பணி’ என்பது போய், ‘செல்வம் கொழிக்கும் தொழில்’ என்ற கோட்பாடு வேரூன்றி நீண்டகாலமாகிறது.  பல கோடிகளை செலவு செய்து பதவிக்கு வரும் அரசியல்வாதிகள், போட்ட தொகையைவிட பலமடங்கு வருமானம் பார்க்க முடியும் என்பதனால் தான், அவர்களுடைய இலக்கை எளிதாக அடைய எல்லா வழிகளையும் பின்பற்றுகின்றனர்.  அதில் முக்கியமான ஒன்றுதான் அதிகாரிகளை இலஞ்சம் வாங்க தூண்டி, அதில் பெரும்பங்கை தாங்கள் பெற்று கொள்வதும்.

எங்கும் எதிலும் இலஞ்சம் புகுந்து விளையாடுவதால் அது சமுதாயத்தின் அஸ்திபாரத்தையே அசைத்துவிடும் அபாயம் இருக்கிறது.  ஒருவரை விசேஷமாக ‘கவனிக்க’வில்லை என்றால் எந்தக் காரியமுமே நடக்காது.  பரீட்சையில் பாஸாக வேண்டுமா? டிரைவிங் லைசன்ஸ் வேண்டுமா? வியாபார ஒப்பந்தம் வேண்டுமா? நீதிமன்றில் வழக்கு ஜெயிக்க வேண்டுமா? கவலையே வேண்டாம், சரியான ஆளை ‘நன்றாக கவனித்தால்’ போதும், நினைத்தபடியே காரியம் கைகூடும்.  இலஞ்ச ஊழல், எங்கும் காணப்படும் தூய்மைக்கேடு போன்றது.  அது ஜனங்களை மனச்சோர்வடையச் செய்கிறது என்கிறார் அரினோ மான்ட்பர் என்ற பாரீஸ் சட்டத்தரணி

குறிப்பாக சொல்லப்போனால், வியாபார உலகில் இந்த இலஞ்ச ஊழல் அதிகமாக சுற்றி சுழன்று வருகிறது.

சில கம்பனிகள் இலாபத்தில் மூன்றில் ஒரு பங்கை ஊழல் பேர்வழிகளுக்கென்றே ஒதுக்கி வைக்கின்றன.  ஒவ்வொரு வருடமும் சர்வதேச ஆயுத வியாபாரத்தில் செலவிடப்பட்ட 1,07,500 கோடி ரூபாவில் சுமார் 10 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு இலஞ்சமாக கொடுக்கப்படுகிறது என தி எகானமிஸ்ட் என்ற பிரிட்டிஷ் பத்திரிகை குறிப்பிடுகிறது.

இப்படிப்பட்ட இலஞ்ச ஊழலாலும் அதனால் ஏற்படும் பொருளாதார சீரழிவாலும் பெருமளவில் பாதிக்கப்படுவோர் ஏழை மக்களே.  ஏனென்றால் இவர்கள்தான் யாருக்குமே இலஞ்சம் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.  ‘இலஞ்சம் என்பது ஏழைகளை ஒடுக்குவதற்கான ஒருவழி’ என தி எக்கானமிஸ்ட் சுருக்கமாக குறிப்பிடுகிறது.  இப்படிப்பட்ட ஒடுக்குமுறையை ஒழிக்க முடியுமா? அல்லது இலஞ்சம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றா? இக்கேள்விக்கு விடை காண முதலில் இலஞ்சத்துக்கான சில அடிப்படை காரணங்களை நாம் கண்டுணர வேண்டும்.

மக்கள் நேர்வழியில் செல்வதைவிட குறுக்கு வழியையே, அதாவது இலஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிப்பதையே விரும்புகிறார்கள், அது ஏன்? விரும்புவதை விரும்பிய நேரத்தில் பெறுவதற்கு இதுவே சுலபமான வழி அல்லது இதுதான் ஒரே வழி என்பதாக தோன்றலாம். அரசியல்வாதிகளே, பொலிஸ்காரர்களே, நீதிபதிகளே இலஞ்சம் வாங்குவதை கண்டுகொள்ளாமல் இருக்கும்போது அல்லது அவர்களே அப்படி செய்யும்போது, அதை கவனிப்பவர்களும் அதே வழியைத்தான் பின்பற்றுகிறார்கள். இலஞ்சம் வாங்குகிறவர்களாக இருந்தாலும்சரி ஏதாவது சலுகை பெற இலஞ்சம் கொடுப்பவர்களாக இருந்தாலும்சரி, இப்படிப்பட்டவர்கள் தண்டிக்கப்படாமல் போவதால் பெரும்பாலானோர் அதை எதிர்க்க தயாராக இல்லை

இலஞ்சத்தை ஒழிக்க முடியுமா?முடியாதா?இந்தக் கேள்வியை ஒவ்வொரு  குடிமகன்களிடம் கேட்டால், ”முடியும்.ஆனால் முடியாது. ” என்று ஒரு திரைப்பட வசனத்தைப் போன்றே பதில் சொல்வார்கள்.

இப்போது இருக்கும் விலைவாசி உயர்வுக்கேற்ற சம்பளம் இல்லை.  அதனால் வேறு வழியில்லை. குடும்பத்தை நடத்த வேண்டுமே?. பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டுமே?. என்று அரசு துறைகளில் வேலை செய்பவர்கள் இலஞ்சம் வாங்குவதற்கான காரணத்தைச் சொல்கின்றனர். என்னதான் அவர்கள் இப்படி ஒரு காரணத்தைச் சொன்னாலும், இலஞ்சம் வாங்குவதும். . . கொடுப்பதும் குற்றம்தான்” என்பதுஅவர்களது மனசாட்சிக்குத் தெரியும் ”.

இதேவேளை இலங்கையில் இலஞ்சம் பணமாக மட்டுமன்றி பாலியலாகவும் கேட்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணியில் தாங்கள் நிரந்தர இடத்தைப் பிடிப்பதற்கும் தங்கள் நிலையை தொடராக அணியில் தக்க வைப்பதற்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களுக்கு பாலியல் இலஞ்சம் கொடுக்கபடுகிறதாம். இது கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய விடயம். இதேபோன்றே பாடசாலையில் முதலாம் தரத்தில் பிள்ளையை சேர்க்கவும் பாலியல் இலஞ்சம் கேட்ட சம்பவமும் நடந்தது.

இவ்வறான நிலையில்தான் பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக பெற்றோர் இலஞ்சம் வழங்கக் கூடாது என இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர வேறு எந்தவொரு கட்டணத்தையும் பெற்றோர் தரம் ஒன்றில் மாணவர்களை சேர்ப்பதற்காக செலுத்தக் கூடாது எனவும்  அதிபர்கள் இவ்வாறு இலஞ்சம் பெற்றுக் கொள்வதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்காக பெற்றோர் இலஞ்சம் கொடுக்க முயற்சிப்பதாகவும், பிள்ளைகளை அனுமதிக்க சில அதிபர்கள் பாலியல் இலஞ்சம்  கோருவதாகவும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் பெற்றோரும் அதிபர்களும் இது குறித்து தமக்கு அறிவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

n10