செய்திகள்

அகதிகளை திருப்பி அனுப்புவதில் இலங்கை அரசுடன் இந்தியா இணைந்து செயற்படும்

இந்தியாவிலிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக புதுடில்லி தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து சுமார் ஒரு இலட்சம் அகதிகள் தமது தாயகத்துக்குச் செல்வதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருப்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

“இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு வருகைதந்திருந்த போது அகதிகள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும் திரும்பிச் செல்வது தொடர்பான கலந்துரையாடல்களை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். ஜனவரி 30 இல் இது தொடர்பாக இரு தரப்புப் பேச்சுவார்த்தையொன்றை ஏற்கனவே மேற்கொண்டிருந்தோம்” என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் 65 ஆயிரம் அகதிகள் 109 முகாம்களில் வாழ்கின்றனர். ஏனைய 37 ஆயிரம் பேர் மாநிலத்தின் இதர இடங்களில் வசிக்கின்றனர். யுத்தத்துக்குப் பின்னர் நல்லிணக்கம் தொடர்பாக இப்போது இலங்கையின் புதிய அரசாங்கம் கவனம் செலுத்துவதாகக் கூறியிருப்பதாகவும் இலங்கையுடன் அதிகளவு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பாக நல்லிணக்க விவகாரம் குறித்து பேசி வருவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாங்கள் ஊக்குவிக்க விரும்புகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.