செய்திகள்

அங்கவீன வாக்காளர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் விசேட ஏற்பாடு

அங்கவீனமடைந்தவர்களுக்கும், முதியோர்களுக்கும் வாக்களிப்பை இலகுபடுத்தும் தேசிய வேலைத்திட்டத்தினை எதிர்வரும் தேர்தலில் இருந்து நடைமுறைப்படுத்துவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வெகுசன ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் தொடர்பில் தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்:

  நமது நாட்டில் வாக்களிப்பு நிலையங்களாக பொது பிரதேசங்களான பாடசாலை , ஆலயங்கள் வாசிகசாலைகள் மற்றும் சமூக நிலையங்களே தேர்ந்தெடுக்கப்பட்டு வாக்களிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் சில இடங்கள் வாசலில் இருந்து வாக்களிப்பு தளங்களுக்கு அதிக தூரம் நடக்க வேண்டியதாக அமைந்திருக்கும்.

 சில பிரதேசங்கள் குறிப்பாக பாடசாலைகள் மாடிப்படிகளினூடாக ஏறி வாக்களிப்பு தளங்களுக்கு போக வேண்டியதாகவிருக்கும். இந்நிலையில் பல விசேட தேவையுடைய மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று அங்கு வாக்களிப்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக வயது வந்தவர்கள், விசேட தேவையுடையோர்கள் மற்றும் ஏதேனும் நோய் காரணமாக சக்கரநாற்காலியில் அமர்ந்துள்ளவர்கள், இவ்வாறானவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு அவர்களுக்கான விசேட வழிவகைகளை செய்யும் பொருட்டு அனைத்து வாக்குச்சாவடிகள் குறித்தும் ஆய்வொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

கிராம உத்தியோகத்தர்கள் மூலம் இந்நாட்டில் அங்கவீனம் மற்றும் பலவீனமான நபர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்படுகின்றன. படிகள் வாயிலாக ஏறிச் சென்று வாக்களிப்பு நிலையங்களுக்கு மாற்றீடாக குறித்த வாக்கெடுப்பு நிலையத்தின் நுழைவாயிலில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் எனவும் எதிர்காலத்தில் அவ்வாறு தடைகள் ஏதும் இன்றி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் வாக்களிப்பு நிலையங்களின் நுழைவாயிலில் இருந்து வாக்களிக்கும் இடத்துக்கு அனுமதி வழங்கப்படுகின்ற தனியார் வாகனங்களுக்கு இடமளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களின் நுழைவாயிலிருந்து வாக்களிக்கும் இடத்துக்கு செல்வதற்கு அரசாங்கத்தின் செலவில் முச்சக்கரவண்டி ஒன்றை பாவிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 15% மானவர்கள் அதாவது சுமார் 10 இலட்சம் வாக்காளர்கள் அங்கவீனர்களாகவும் முதியோர்களாகவும் காணப்படுவதாக தெரிவித்த ஆணையாளர், 2030 ஆம் ஆண்டளவில் இத்தொகை 25% ஆக அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.

இதுவரையில் ஊவா மாகாணத்தில் காணப்படுகின்ற அனைத்து வாக்களிப்பு நிலையங்களும் அங்கவீனர்களுக்கும் முதியோர்களுக்கும் செல்வதற்கு இலகுவான முறையில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களில் விசேட தேவையுடையவர்கள் இலகுவில் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்கள் தெரிவு செய்யப்படும் . அத்துடன் பிரதேசங்கள் மட்டுமன்றி அவர்களுக்குரிய பல விசேட வசதிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த ஆணையாளர், எதிர்வரும் காலங்களில் விசேட தேவையுடையோர்கள் வாக்களிப்பு நிலையங்களில் வந்து வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில் வாக்களிக்க வசதிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஊடக அமைச்சின் செயலாளர் கருனாரத்ன பரனவிதாரனவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.