செய்திகள்

அஜித்துக்கு கிடைத்த அழகிய தங்கை

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து வீரம் இயக்குனர் சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அஜித்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் தான் சென்னையில் நடந்து முடிந்தது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக முதல் முறையாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்க படத்தை தயாரிக்கிறார் ஏ.எம்.ரத்னம். ‘வீரம்’ படத்தில் அண்ணன்-தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுத்த ‘சிறுத்தை’ சிவா இந்தப் படத்தில் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து இயக்கவிருக்கிறாராம்.

இதற்காக அஜித்துக்கு தங்கை கேரக்டரில் நடிக்கும் நடிகை தேர்வு கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வந்தது. முதலில் இந்த கேரக்டரில் நடிப்பது குறித்து பிந்து மாதவியிடம் பேசப்பட்டது. ஆனால் அவர் தனது தரப்பிலிருந்து மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. பிறகு ஸ்ரீதிவ்யா, நித்யா மேனன் ஆகியோர் பெயர்களும் அடிப்பட்டது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது அந்த கேரக்டருக்கு லட்சுமி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குடும்பபாங்கான பெண்ணாக லட்சுமி மேனன் நன்கு பொருந்துவார் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.