செய்திகள்

அடிமை கொண்டவர்களைப்போல் எமது மக்களை காவல்த்துறையினர் நடத்தக் கூடாது: டக்ளஸ்

வடக்கில் பணியாற்றிவரும் காவல்த்துறையினர், எமது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, மனிதாபிமான முறையில் தங்களது கடமைகளை ஆற்ற வேண்டியது அவசியம் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். மாறாக, எமது மக்களை அடிமை கொண்டவர்களைப்போல் கருதி, ஆதிக்க மனப்பான்மையுடன் நடத்தக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், அண்மையில் யாழ். வடமராட்சி கிழக்கு பகுதி உடுத்துறையில் இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காவல்த்துறையினர் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது. இவ்வாறு, சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படக்கூடிய, அல்லது உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய தீர்த்து வைக்கப்படக்கூடிய பிரச்சினைகள் ஆயுதங்களால் தீர்க்கக்கூடிய அளவிற்கு செல்வதானது எமது சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

எனவே, இவ்வாறான சமூகப் பிரச்சினைகளின்போது, சில விட்டுக் கொடுப்புகளுடன் அவற்றைத் தீர்த்துக் கொள்ள எமது மக்களும் முன்வருதல் ஆரோக்கியமானதாகும். அதே நேரம், எமது மக்களை அடிமை கொண்டவர்களைப் போல், ஆதிக்க மனப்பான்மையுடன் அணுகுவதை காவல்த்துறையினரும் தவிர்த்து, மனிதாபிமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்.

புங்குடுதீவு மாணவி விவகாரத்தில்கூட, காவல்த்துறையினர் உரிய செயற்பாடுகளை உடனடியாக மேற்கொண்டிருந்தால் இம்மாணவியின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என பொதுவாகப் பேசப்பட்டு வருகிறது.

பெண்கள் காணாமற் போதல் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கும்போது, அது குறித்து காவல்த்துறையினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ‘அப் பெண்கள் காதலர்களுடன் ஓடியிருக்கலாம். நாளை வருவார்கள்” எனக் கூறி முறைப்பாட்டாளர்களைத் திருப்பி அனுப்புவது காவல்த்துறையினரின் கடமையல்ல.

எனவே, காவ்லத்துறையினர் தங்களது கடமைகளை உணர்ந்து, இதனை சரிவர செய்வதுடன், மனிதாபிமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.