செய்திகள்

அடுத்தவர் நிகழ்ச்சி நிரலை மையப்படுத்தி அரசியல் செய்யும் ஆபத்து

லோ. விஜயநாதன்

சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மீண்டும் இலங்கை விவகாரங்கள் உலக அரங்கில் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டன. அந்த வகையில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் ஜெனிவா அமெரிக்கா நோக்கிய பயணம், சிறிலங்காவின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம், வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு தீர்மானம், இலங்கை தொடர்பிலான ஐ. நா. அறிக்கை பின்போடப்பட்டமை ஆகியவை கடந்த வாரங்களில் இலங்கை அரசியலில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.

10968421_451610081663412_432136792350543292_nஇவற்றுள் மங்களசமரவீர ஜெனிவாவிற்கும் அமெரிக்காவிற்கம் ஓடித்திரிந்ததுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. புதிய ஆட்சி ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபையுடன் இணைந்து செயற்படுவதற்கும் புதிய உள்ளக விசாரணையொன்றை மேற்கொள்வதற்கும் கால அவகாசம் ஒன்றை தரும்படியும் கேட்டு மங்கள சமரவீர விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதிலாக ஐ. நா . மனித உரிமைகள் சபை தனது அறிக்கையை வெளியிடுவதை 6 மாதகாலத்திற்கு பிற்போட்டுள்ளது.

இது பெரும் ஏமாற்றத்தை பாதிக்கப்பட்டு நியாயம் வேண்டி நிற்கின்ற தமிழ் மக்களுக்கும் மனிதவுரிமை ஆர்வலர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த யுத்த குற்றச்சாட்டு விசாரணை அறிக்கைக்கும் புதிய ஆட்சியின் மனிதவுரிமை விடயங்களுக்கோ அல்லது புதிய ஆட்சி உறுதி கூறிய உள்ளக விசாரணைக்கோ எந்தவித தொடர்புகளும் இல்லாத நிலையில் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது போல முழுக்க முழுக்க அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இந்த அறிக்கை பின்போடப்பட்டுள்ளது. இதுவே புதிய ஆணையாளரின் செயற்பாட்டின் மீதும் விசாரணை அறிக்கையின் மீதும் நம்பகத்தன்மை அற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

LLRCIC129சிறிலங்கா விரும்பினால் எத்தனை விசாரணைக் குழுக்களை நியமித்தும் விசாரிக்கலாம், விசாரணை அறிக்கைகளை அடுக்கி பத்திரமாக வைத்தும் கொள்ளலாம் அல்லது முடிவின்றி ஒவ்வொரு ஆட்சிமாற்றம் ஏற்படும் போதும் விசாரித்துக்கொண்டே இருக்கலாம். இது சிறிலங்காவால் ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். இதனை அறிந்து தான், கடந்த வருடம் மார்ச் மாதம் அமெரிக்கா தலைமையில் ஜெனிவா மனிதவுரிமை கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையால் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு சுயாதீன விசாரணை நடைபெற வேண்டும் என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது .

இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்களே தற்போது அதனை பின்போடுவதற்கும் காரணமாக இருந்துள்ளனர். அடுத்தவர் நிகழ்ச்சி நிரலை மையப்படுத்தி செயற்படுவதென்பது எவ்வளவு ஆபத்தான செயல் என்பதை தமிழ் மக்கள் இதிலிருந்து தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

53658761980 களில் தொடக்கத்தில் தமிழீழ விடுதலை நோக்கி பல இளைஞர் குழுக்கள் செயற்பட்டிருந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த மற்ற குழுக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனதற்கு மற்றவர்களின் நிகழ்ச்சி நிரலில் அக்குழுக்கள் செயற்பட்டமையே காரணமாகும் என்ற வரலாற்றில் இருந்து நாம் இந்த சந்தர்ப்பத்தில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதேநேரம் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பெரு விருட்சமாக வளர்ந்ததற்கு அவர்கள் தமக்கே உரித்தான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்பட்டமையே காரணமாகும்.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் இன்று முன்னெடுக்கும் அரசியல் இராஜதந்திர போரட்டத்தில் எப்படி எமது போராட்டத்தை நகர்த்திச் செல்ல வேண்டும் என்ற தெளிவின்மையே தமிழர் தரப்பின் இன்றைய தடுமாற்றத்துக்கு காரணமாக உள்ளது. இதுவே அடுத்தவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் நம்மை நாமே அறியாமல் விழுவதற்கு காரணியாக அமைகின்றது.

ஜெனிவா தீர்மானம் பின்போடப்பட்டதன் பின்னரே அதனை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் தமிழர் தரப்புக்களால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அறிக்கை பின்போடப்படலாம் என்ற ஊகங்கள் முன்னரேயே தெரிவிக்கப்பட்டிருந்த போது இத்தகைய எந்த போராட்டங்களோ அரசியல் இராஜதந்திர நகர்வுகளோ குறிப்பிடும்படியாக முன்னெடுக்கப்படவில்லை.

tamils_block_thegardinerதமிழர் தமக்கென்ற நிகழ்ச்சி நிரலின்பால் செயற்பட்டிருந்தால் தாம் வாழும் நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் தத்தம் அரசுகளை மையப்படுத்தி காய் நகர்த்தல்களை மேற்கொண்டிருந்தால் வெளிவரவிருந்த இறுதி அறிக்கையை மனிதவுரிமை சபை பிற்போட்டிருந்தால் கூட உறுப்புநாடுகளினூடாக அழுத்தம் கொடுத்து அதனை வெளியிட செய்வதில் வெற்றி கண்டிருக்கலாம். அதாவது, 47 நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையில் மூன்றிலொன்று நாடுகள் அதாவது 16 நாடுகள் ஆதரவு தெரிவித்தால் அந்த அறிக்கையை வெளிக்கொண்டுவர முடியும். ஆனால் அந்த 16 நாடுகளை நாம் திரட்டி வைத்திருக்கிறோமா என்றால் இல்லையென்பது தான் உண்மை. இந்த நிலைமை தமிழ் மக்களின் போராட்டத்தின் ஒரு இராஜதந்திரத் தோல்வியாகும்.

மறுபுறம் சிங்களதேசமானது ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடனேயே சுதாரித்துக்கொண்டு சுறுசுறுப்புடன் எப்படி தமிழ் தேசத்தை அடக்கி ஒடுக்கி வைக்கலாம் என்று தனது செயற்பாடுகளை முடுக்கிவிட்டது . அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் சிங்களதேசம் சிக்கலின்றிச் செயற்படுவதற்கு அதன் தலைவர்களும் அமைச்சர்களும் உலகம் முழுவதும் ஓடித்திரிந்தவண்ணம் உள்ளனர். தமிழர் தேசம் சற்றேனும் வலுவடைந்து விடாமல் இருக்கும்பொருட்டு, இராணுவத்தை வடக்கிலிருந்து விலக்க முடியாது என்றும் 13வது திருத்தச் சட்டமே இறுதித் தீர்வு என்றும் புதிய ஆட்சியாளர்கள் திட்டவட்டமாக அறிவித்திருப்பதுடன் சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுப்பில் வைத்திருந்து விசாரிப்பதற்கான சட்டமூலத்தை மேலும் 2 வருடங்களுக்கு நீடித்திருப்பதுடன் முப்படைகளுக்கும் கூடுதல் அதிகாரத்தை வழங்கி முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவின் நேரடி அறிவுறுத்தலுக்கமைய முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு தலைமை தாங்கி செயற்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் கிருஷாந்த டி சில்வாவை ஸ்ரீலங்காவின் 21வது இராணுவத் தளபதியாக நியமித்துள்ளார்கள்.

10846067_10153030533381327_2029848236591460545_nஅதேவேளை சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயமானது தமிழ் தேசியத்தை மேலும் சிதைக்க நினைக்கும் புதிய ஆட்சிக்கு உலகளவில் கிடைக்க உள்ள அங்கீகாரமாக கருதமுடியும்.  மைத்திரியின் விஜயத்தை தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாத கடைசிப் பகுதியில் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் சிறிலங்காவுக்கு விஜயம் செய்வார் என்ற அறிவிப்பின் ஊடாக இதை உணரகூடியதாக உள்ளது. இது இந்திய பிரதமர் ஒருவர் 1987ம் ஆண்டுக்குப் பிறகு சிறிலங்காவுக்கு மேற்கொள்ள உள்ள உத்தியோகபூர்வ விஜயம் என்பதை கவனத்தில் கொள்ளள்வேண்டும்.

2சிங்கள தேசத்தின் இவ்வாறன நரித்தனமான காய்நகர்த்தல்கள் மத்தியில்தான் இருட்டில் இருக்கின்றவனுக்கு கிடைத்த ஒழிக்கீற்றாக வடமாகாணசபையின் தமிழ் இனவழிப்பு தீர்மானம் அமைந்தது. 1976ம் ஆண்டு தனி நாட்டுக்கான வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு பின்னர் அரசியல் ரீதியில் தமிழர் தரப்பு மேற்கொண்ட ஒரு துணிச்சலான அவசியமான தலையீடாக இதனை குறிப்பிடலாம். இத் தீர்மானத்தைக் கொண்டு வந்த தருணம், கொண்டு வந்த விதம், நிறைவேற்றிய விதம் அதன் பின்னர் நிகழ்த்தப்பட்ட உரை என்பவற்றின் மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் சாணக்கியத்தை தெளிவாக உணரக்கூடியதாக உள்ளது. இதுவே தமிழ் மக்களின் உரிமைக்காக உரத்து குரல் கொடுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கான சிறு நம்பிக்கையையிணையும் கட்டியெடுப்பியுள்ளது.

இனவழிப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்ததுடன் எல்லாம் நிறைவேறிவிட்டது என்றில்லாமல் வட மாகாணசபையே சர்வதேச துரைசார் நிபுணர்களை உள்வாங்கி சாட்சியங்களை திரட்டி ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையின் விசாரணைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அனுப்பி வைக்க முடியும். எப்படி இனவழிப்புத் தீர்மானத்தைத் தயரித்தார்களோ அதே விதமான செயற்பாட்டை முக்கிய விடயங்களை கையாளும்போதும் கடைபிடித்தால் அது வினைத்திறனுடன் கூடிய செயற்பாடாக அமையும்.சிங்கள தேசத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பயன்படுத்தி தமிழ் மக்கள் தமது இறுதித்தீர்வை நோக்கிய வெகுஜனப் போராட்டங்களை காலதாமதமின்றி மேற்கொள்ளவேண்டும்.

TP.img_assist_customஅதேநேரம் மத்தியில் சர்வகட்சி கூட்டாச்சிக்கும், அமைச்சுப் பதவிகளுக்கும் உடன்படாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படி அதே சர்வகட்சி ஆட்சிக்கும் அமைச்சுப்பதவிகளுக்கும் மாகாண மட்டத்தில் தமிழ் தேசியத்தை அடைமானம் வைத்து இணங்கியுள்ளது என்பது புரியாத புதிராக இருக்கிறது. தமிழ்த்தேசியத்தை தமிழ்த்தேசத்தை மறுதலித்து வருகின்ற முஸ்லிம்காங்கிரசுடன் எப்படி ஆட்சியமைக்க ஒப்புக்கொண்டனர் ?. அமைச்சர் பதவிகள் சலுகைகள் தான் தேவையெனில் தமிழ் மக்கள் கடந்த தேர்தல்களில் கொத்தடிமைகளான டக்லஸ் தேவானந்தா, பிள்ளையான், கருணாவென தமது வாக்குகளை அளித்திருப்பார்களேயென்று சிந்திக்க தெரியவில்லையா?

z_p01-Sri-Lanka-Muslim-Congமுஸ்லிம் காங்கிரசோ தடம் தெரியாமல் சலுகை அரசியல் நடத்திவிட்டு, எப்படி கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைக் கைப்பற்றி விழுந்து கிடக்கின்ற தமது அரசியல் செல்வாக்கை நிமிர்த்திக்கொள்வதற்கும்., எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் எங்கே முஸ்லிம் மக்களையும் அணிதிரட்டி தமக்கெதிராக இறங்கி விடுவார்களோ என்ற அச்சத்தை இல்லாமல் செய்வதற்கும் பொருட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று எலும்புத்துண்டுகளாக இரண்டு மாகாண அமைச்சுக்களும், ஒரு உப தவிசாளர் பதவியும் வழங்குவதற்கு முன்வந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் பலமாக இருந்திருந்தால் இந்த எலும்புத்துண்டுகளும் கிடைத்திருக்காதென்பது கடந்த காலங்களைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.

கிழக்கு மாகாணத் தேர்தலுக்கு முன்னும் சரி பின்னும் சரி தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுக்கு முதல் அமைச்சர் பதவியை விட்டுத்தர தயார் என்றும் தம்முடன் ஆட்சி அமைக்க வருமாறும் பலமுறை அழைத்தும் வராதவர்கள் தற்போது முன்வந்துள்ளார்கள் என்பதை கூட்டமைப்பால் சிந்திக்க முடியவில்லையென்பதே கவலையளிக்கும் விடயமாகவுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் முஸ்லிம்களை தமது கட்சிக்குள் உள்வாங்கி தேர்தலை எதிர்கொள்வதே தமிழ்த் தேசியத்திற்கும் தமிழ்பேசும் மக்களுக்குமான வலுவான செயற்படாக அமையும்.