செய்திகள்

அணியிலிருந்து நீக்கப்பட்ட ரகானே மற்றும் புஜாராவை கேப்டனாக நியமித்த தேர்வாளர்கள் – தோனி, கோலிக்கு எச்சரிக்கை?

வங்கதேச தொடரின் போது தோனி மற்றும் கோலியால் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரகானேவையும் புஜாராவையும் தேர்வாளர்கள் கேப்டனாக நியமித்தது இரு கேப்டன்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா என கேள்வி எழுந்துள்ளது.

அணியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் கேப்டனாக அஜிங்கிய ரகானே தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தொடருக்கு ரெய்னா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மிர்பூரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ரகானேவை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவர் களமிறங்கும் 4வது இடத்தில் தோனி இறங்கினார். அந்த போட்டியில் தோனி சிறப்பாக விளையாடவில்லை என்பதோடு, அணி மோசமாக தோற்று தொடரையும் இழந்தது. தோனியின் இந்த முடிவு பலத்த விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் கேப்டனாக அஜிங்கிய ரகானேவை தேர்வு செய்ததன் மூலம் தோனிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. மேலும் ரகானேவிற்கு தேர்வாளர்கள் தங்களின் முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்கள்.

அதே போல் வங்கதேசத்திற்கு எதிரான டேஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி, புஜாராவை நீக்கிவிட்டு ரோகித் சர்மாவிற்கு வாய்ப்பு கொடுத்தது சர்சைக்கு உள்ளானது. ஆனால் தற்போது ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான நான்கு நாட்கள் கொண்ட இரு டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக புஜாரா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த இரண்டு அறிவிப்புகள் மூலம் தேர்வாளர்கள், தோனி மற்றும் கோலிக்கு தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதாவது உங்கள் விருப்பு வெறுப்புகளை ஓரமாக வைத்துவிட்டு திறமையான வீரர்களை மதித்து அவர்களுக்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கவேண்டும் என்பது தான் அது.