செய்திகள்

அண்ணா நடராஜா – விடாமுயற்சியின் சின்னம்

ஒரு பராம்பரிய இந்து கலாச்சாரம் நிலவி வரும் இணுவில் என்ற கிராமம் காங்கேசன்துறை வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து 5 கி.மீ  தூரத்தில் அமைந்துள்ளது.  காய்கறிகள், புகையிலை துணை உணவுத் தானியங்கள் போன்ற பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு வரும் மிகவும் எளிமையான பண்பான மக்கள் இங்கு வசித்து வருகிறார்கள். இங்கே நல்ல வளமான சிவப்பு வண்டல் இருந்தாலும் நீர்ப்பாசனத்திற்கு நிலத்தடி நீரினையே பயன்படுத்த வேண்டியிருக்கின்றது. 65 – 75 வருடங்களிற்கு முன்னர், இங்குள்ள பண்ணைகளில் துலாவின் மூலம் நீர் அள்ளுதல் பொதுவான ஒரு முறையாக இருந்தது. இந்த முறையில் நீர்ப்பாசனம் செய்ய மூவர் தேவைப்படுவர். அதாவது, ஒருவர் நீரை அள்ளுவதற்கும், ஒருவர் துலா மிதிப்பதற்கும், ஒருவர் நீரை ஊற்றுவதற்குமாக  இந்த மூன்று பேர் தேவைப்படுவர். பக்கத்திலுள்ள பண்ணைகளும் சகோதர்களுடையதாக அல்லது உறவினர்களுடையதாக இருக்கும். அவர்களும் ஒருவருக்கொருவர் தோட்ட வேலைகளில் ஒத்தாசையாக இருப்பர். இவ்வாறன நன்கு பிணைக்கப்பட்ட சமூக வாழ்வு கடந்த ஆறு தசாப்தங்களில் பல மாற்றங்களிற்கு உட்பட்டுள்ளது.

இணுவில் பூராகவும் பல கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் பரராசசேகர பிள்ளையார் கோவில், செகராசசேகர பிள்ளையார் கோவில் என்பன யாழ்ப்பாண மன்னர் காலத்துப் பழமையான வரலாற்றுப் பிரசித்தி பெற்றவை. இந்தக் கோவில்கள் இந்தக் கிராமத்தின் சமூக வாழ்வியல் மையங்களாக திகழ்ந்தன. மதகுருமார், இசைக்கலைஞர்கள் (குறிப்பாக நாதஸ்வரம் மற்றும் தவில் வித்துவான்கள்), கைவினைஞர்கள் ஆலயங்களை சூழவிருந்து ஆலயப்பணி செய்தனர். இவ்வாறாக நல்ல செழிப்பான கலாச்சாரம் அங்கு நிலவியது. பக்கத்து ஊர்களான மானிப்பாய், உடுவில் போன்ற இடங்களிற்கு கிறிஸ்தவம் வேரூன்றியும் அதனால் இணுவிலிற்குள் பரவ முடியாது போன அளவிற்கு இந்தக் கிராமத்தில் மிகவும் பலமாக இந்துக் கலாச்சாரம் காணப்படுகின்றது.

இந்த இணுவில் கிராமத்தில் தைரியமான முன்னோடியான, கடுமையான உழைப்பாளியான அண்ணா நடராஜா அவர்கள் 1937 இல் ஒரு எளிமையான விவசாயித் தந்தைக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரிற்கு ஒரு சகோதரன் மற்றும் ஆறு சகோதரிகள் சகோதரர்களாக இருந்தனர்.  சீதனமுறைமை நிலவும் யாழ்ப்பாண சமூகத்தில் இந்நிலை எத்தகையது என எவரும் ஊகிக்க இயலும்.

அண்ணா ஒரு வேலை தேட வேண்டிய நிலையில் இருந்தார். 20 வயதில், அவர் கொழும்புத் துறைமுகத்தில் ஒரு லிகிதராக பணியேற்றார். ஆனால் சில மாதங்களில் இந்த வேலையை விட்டு விலகினார். அவர் சாலை மேற்பார்வையாளராக பணி புரிவதற்காக யாழ்ப்பாணம் திரும்பினார். அங்கு அவர் வெய்யிலில் நின்று பணி புரிய வேண்டியிருந்தது.  ஒரு நாள் இவர் வீதியோரத்தில் இருந்த ஒரு பாறைக்கல்லின் மீது உட்கார்ந்து இருந்த போது, ஒரு வயதான வழிப்போக்கர் அண்ணா நடராஜாவைப் பார்த்து நீ யார்? ஏன் இதில் தனியாக இருக்கிறாய் என்று கேட்டார், அதற்கு அண்ணா தனது வேலையை பற்றி கூறிய போது அந்த முதியவர் “நீங்கள் இளமையாக இருக்கும் போது கடினமான வேலை செய்யுங்கள். வயதான காலத்தில் அதன் பலனை நீங்கள் அனுபவிக்கலாம்” என்று கூறி விட்டு தன் வழியே சென்றார். குழப்பமடைந்த அண்ணா எதிரேயிருந்த சந்திரா கடை உரிமையாளரிடம் அந்த முதியவர் யார் என விசாரித்தார். அதற்கு அந்த கடை உரிமையாளர் “அவரை உங்களிற்கு தெரியாதா? அவர் தான் யோகர் சுவாமி. அவர் உங்களை தட்டிக் கொடுத்ததை நான் பார்த்தேன். நீங்கள் உண்மையில் ஆசிர்வதிக்கப்பட்டவராகின்றீர்கள்”, என பதிலளித்தார்.

“மில்க்வைற்” கனகராஜா என்ற பழம் பெரும் சவர்க்கார உற்பத்தியாளர் இளமையாகவிருந்த அண்ணா நடராஜாவை சந்தித்து பேச நேர்ந்தது. “மில்க்வைற்” கனகராஜா அண்ணாவை தனது தொழிற்சாலைக்கு வரும் படி அழைத்தார். அங்கே பணி புரிய அண்ணாவும் விரும்பினர். ஆனால் அங்கே கிடைக்கக்கூடிய வருமானம் அவரது பாரிய குடும்பத்தை பராமரிக்க போதுமானதாக இருக்கவில்லை. பின்னர், யாழ்ப்பாணத்து பாணியில் அல்லாமல் பாரிய அளவில் விவசாயம் செய்ய அண்ணா நடராஜா தீர்மானித்தார். இவரிற்கு அரசாங்கத்திடமிருந்து 3 ஏக்கர் வயல் காணியும் 2 ஏக்கர் மேட்டுக்காணியும் வவுனிக்குளம் என்ற இடத்தில் கிடைத்தது. அங்கே காடுகள் துப்பரவு செய்யப் பட வேண்டியிருந்தது.  அங்கு தங்குமிடம் அமைத்து புதர்களை வெட்டி வேலி அமைத்து அங்கே சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட வேண்டும் என காணி பெறுனர்கள் எதிர்பார்க்கப்பட்டார்கள். இந்த சவாலான வேலைக்கு வீட்டில் இருந்து பணம் வர வேண்டியிருந்தது. அண்ணா இந்த காணியை குத்தகைக்கு கொடுத்து விட்டு வீடு திரும்பினார்.

சுதுமலையில் வசித்த அண்ணாமலை என்ற சித்த மருத்துவரை அண்ணா சந்தித்தார். அவரது மருத்துவ ஆலோசனைகளிற்காக அதிகாலை நான்கு மணி முதலே நோயாளிகள் வருகை தந்து வரிசையில் நிற்பார்கள். சிகிச்சை இலவசமாகவே அளிக்கப்பட்டது.  அங்கே “கடவுள் சன்னதியில் அனைவரும் சமம்” என்று எழுதப்பட்டிருந்த வாக்கியம் அண்ணாவை மிகவும் ஈர்த்தது. அண்ணா நடராஜா அண்ணாமலையினால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவரது  ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் அண்ணா “மூலிகை பற்பொடி” தயாரிக்க ஆரம்பித்தார்.  இதற்கு அவர் “அண்ணாமலை ஆயுள் வேத பற்பொடி” என்று பெயரிட்டார்.

“மில்க்வைற்” கனகராஜா கோப்பி தூள் தயாரிக்கும் தொழிலை தொடங்குவதற்கு அண்ணாவிற்கு தூண்டுதலாக இருந்தார். கோப்பி வீட்டிலேயே அரைக்கப்பட்டது. முழு குடும்பமும் இந்த தயாரிப்பில் பங்கேற்றது. தனது விற்பனை நிலையத்திற்கு செல்வதற்கு “மில்க்வைற்” கனகராஜா வாகன உதவியையும் வழங்கினார். 1959 இல் கனகராஜா ஓர் அரைக்கும் இயந்திரத்தையும் அதற்கு அடுத்த ஆண்டு யு- 40 ஒன்றினையும் வாங்கினார். “மில்க்வைற்” கனகராஜாவே அண்ணா நடராஜாவின் முன்னோடியாக இருந்துள்ளார். “மில்க்வைற்” கனகராஜாவே இலங்கையில் முதன் முதலாக “மில்க்வைற்” என்ற பெயருடைய நீல சவர்க்காரத்தை உற்பத்தி செய்தவராவார். வடக்கின் கற்பக விருட்சமான பனை மரத்தை பரப்புவதில் அதிக ஈடுபாட்டுடன் இவர் செயற்பட்டார்.  தனது லொறியில் பனை விதைகளை ஏற்றி வன்னிக்கும் கிழக்கிற்கும் கொண்டு சென்றார். இந்த முப்பது வருட கால போரால் பனையை அழித்தொழிக்க முடியவில்லை எனில் அதற்கான காரணம் கனகராஜா என்ற ஒற்றை மனிதன் செய்த அடிப்படை வேலையேயாகும். அவர் சம்பாதித்த பணம் சமூகத்தினதும் தேசத்தினதும்  வளர்ச்சிக்கே பயன்பட்டது.

1975 ஆம் ஆண்டு அண்ணா மருதனாமடம்- உரும்பிராய் வீதியில் ஒரு விவசாயப் பண்ணையை ஆரம்பித்தார். இது சுடலைக்கு அருகாமையில் அமைந்திருந்தமையால் மக்கள் அங்கு செல்வதை தவிர்த்துக் கொண்டார்கள். பின்னர், அண்ணா வசாவிளானில் ஒரு கூட்டு அடிப்படையில் ஒரு திராட்சை தோட்டத்தினை ஆரம்பித்தார். அந்த பண்ணையில் பால் உற்பத்தி, கோழி, பன்றி, முயல் வளர்ப்பு முதலியன இருந்தன. அமைச்சர்களான காமினி திசநாயக்க மற்றும் தொண்டமான் ஆகியோர் இந்த பண்ணையை வந்து பார்வையிட்டுள்ளனர். நீர்ப்பம்பிகள் இயங்குவதற்கான மின்சக்தியை பெற காற்று ஆலை ஒன்றும் உருவாக்கப்பட்டது. 1982 இல் இந்தப் பண்ணைக்கு  விசயம் செய்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான ஜேம்ஸ் கில் இந்தப் பண்ணையால் மிகவும் ஈர்க்கப்பட்டார். யுத்த காலத்தில் எரிபொருளிற்கு தட்டுப்பாடு நிலவியதால் அங்கு உயிர் வாயு உற்பத்தி என்ற அடுத்த புதுமையும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரம் இந்த தொழில் நிலையத்தை அண்ணா படிப்படியாக விரிவாக்கம் செய்தார். பொதி செய்யப்பட்ட அரிசி மா, மிளகாய் தூள், கறி தூள் மற்றும் மல்லி தூள் போன்ற உற்பத்திகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. அண்ணா நீலம், அண்ணா தூபம், அண்ணா ஊதுபத்தி போன்றனவும் அண்ணாவின் ஏனைய உற்பத்திகளாக இருந்தது.

“சீவாகாரம்” எனப்படும் சத்தான, சுவையான, சீரான துணை உணவு குறிப்பாக, கைக்குழந்தைகள், குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக உருவாக்கப்பட்டது.   இதன் உள்ளீடுகள் சோயா, உளுந்து, பகுதியாக வேகவைத்த சிவப்பு அரிசி மற்றும் அத்தியாவசிய விட்டமின்கள் என்பனவாகும். சோயா மற்றும் உளுந்து என்பன அத்தியாவசிய புரதம், அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்றனவற்றை வழங்குகின்றது. இது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்கின்றது. தனது அம்மாவை பார்க்க இலங்கை வந்திருந்த ஒரு புலம்பெயர்ந்த தமிழ் மருத்துவர் ஒருவரை அண்ணா சந்திக்க நேர்ந்தது.

“சீவாகாரம்” பற்றி கேள்விப்பட்ட அவர் அதனை வெளிநாடுகளில் பிரபலப்படுத்த வேண்டும் என உறுதி பூண்டார்.  யாழ்ப்பாணத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள புதிய சந்தையில் உள்ள இவரது சில்லறை விற்பனை கடை பொது மக்களின் தேவையைப் பெரியளவில் பூர்த்தி செய்தது. அவர் வவுனியாவிலும் இன்னொரு கிளையை திறந்தார். யாஎல மாவட்டத்தில் உள்ள கந்தானை என்ற இடத்திலும் ஒரு கிளையை திறந்தார். அண்ணா நடராஜாவின் 33 ஆண்டு கால தூர நோக்கின் உச்சக்கட்டமாக  “அண்ணா வரையறுக்கப்பட்ட தனியார் சர்வதேச நிறுவனம்” என இது வளர்ச்சி கண்டது. தற்பொழுது அண்ணா உற்பத்திகள் உலகின் பல பாகங்களில் கிடைக்கின்றது. குறிப்பாக இலங்கையர்கள் வாழும் நாடுகளான வட அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிசர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகளில் அண்ணா உற்பத்திகள் பெரிய அளவில் கிடைக்கின்றன.

வணிக நடவடிக்கைகள் நன்கு கொடி கட்டிப் பறக்க அண்ணா ஒரு கொடை வள்ளலாக மலர்ந்தார். இவர் கல்வி மற்றும் மத நிறுவனங்களிற்கும் மற்றும் ஏனைய பயனுள்ள செயற்பாடுகளிற்கும் உதவி புரிகிறார். இலவச சிறு புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் அவர் சமூகத்திற்கு கல்வி புகட்ட முயன்றார். “மில்க்வைற்” கனகராஜாவே இவ்வாறான சமூக செயற்பாடுகளில் அண்ணா ஈடுபட தூண்டுகோலாக அமைந்தார். அண்ணா நடராஜாவின் வாழ்க்கைப்பயணம் எப்போதும் ஒரே சீரானதாக அமைந்திருக்கவும் இல்லை. அவரது வாழ்க்கையில் சோதனைகளும் துயரங்களும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டது.  ஒரு இளைஞனாக வறுமை மற்றும் குடும்ப பொறுப்புக்களுடன் போராடினார்.
பின்னர், நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் அவதிப்பட்டார். அவரிற்கு ஏற்பட்ட இரண்டு முக்கிய சோதனைகளை இங்கு குறிப்பிட வேண்டும். இந்திய அமைதிப் படை எமது மண்ணில் 1987 ஆம் ஆண்டு காலடி வைத்தது. இந்திய அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே குரோதங்கள் வெடித்தது. தேடுதல் நடவடிக்கைகளும் கைதுகளும் அந் நாட்களில் தினசரி செய்தியாக மாறியது. பாதுகாப்பான புகலிடமாக அண்ணா தொழிற்சாலையை நினைத்த 400 க்கும் மேற்பட்ட மக்கள் அங்கே பாதுகாப்பிற்காக தங்கியிருந்தனர். அமைதிப்படையினர் அங்கு நடைபெற்று வந்த தியான மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்களால் முதலில் அண்ணா தொழிற்சாலை பற்றி ஒரு நல்லபிப்பிராயம் கொண்டிருந்தனர். அவர்கள் சில உலர் உணவுகளை கூட அங்கு வழங்கினர். ஆனால், பின்னர் எல்லா பொதுமக்களும் அவர்களால் சந்தேகத்துடன் பார்க்கப்பட ஆரம்பிக்கப்பட்ட போது, அண்ணா கைது செய்யப்பட்டு பலாலியில் தடுத்து வைக்கப்பட்டார். அவர் ஒரு இளம் போராளி அல்ல. அவர் 50 வயதான, மரியாதைக்குரிய சமூகத்தின் தலைவர் ஒருவராவார்.  அவரிற்கு கைவிலங்கிடப்பட்டு அவமானப்படுத்தி இரு மாதங்கள் தடுத்து வைத்தனர். பக்கத்து கட்டடத்தில் இருந்து வந்த பெண்களின் அவலக்குரல்களை அவரால் அங்கு கேட்க முடிந்தது. அவர் தான் சுட்டுக் கொல்லப்படப் போகின்றார் எனவே நினைத்தார். கடவுள் கிருபையால், அதிர்ஸ்ட வசமாக இவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படார். அங்கே அவரது குடும்ப வைத்தியரான வைத்திய கலாநிதி சிவகுமார் என்பவரே இவரை பரிசோதித்தார். மருத்துவரது உதவியால் அண்ணா பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அண்ணாவிற்கான அடுத்த சோதனை 1995 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஏற்பட்டது. அப்போது சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நோக்குடன் “ரிவிரச” என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இதற்கு எதிர்வினையாக தமிழீழ விடுதலைப் புலிகள் பின் வாங்குவதற்கு தீர்மானித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை வலிகாமத்தை விட்டு தென்மராட்சிப் பகுதிக்கு நகருமாறு அறிவுரை கூறினர். தொடர்ந்து அங்கிருந்தும் விலகி வன்னிக்கு செல்லுமாறும் விடுதலைப்புலிகள் பொது மக்களை கேட்டுக்கொண்டனர். எவரும் இதில் விதி விலக்கல்ல. யாரிற்கும் மன்னிப்பும் வழங்கப்படவில்லை.  அண்ணாவும் தொழிற்சாலையை மூடிவிட்டு தென்மராட்சிக்கு சென்றார். அண்ணாவும் அவரது தொழிலாளர்களும் மீசாலையில் தமது தங்குமிடங்களை ஏற்படுத்திக் கொண்டனர். பாரிய கஸ்டங்களுடன்  ஆறு மாதங்கள் அங்கு இயங்கிய பின்னர் இராணுவம் தென்மராட்சியினை நெருங்கியதால் விடுதலைப்புலிகள் வன்னி நோக்கி பின் வாங்கினர். பெரும்பாலானோர் விடுதலைப்புலிகளுடன் வன்னியை நோக்கி சென்றனர். சிலர் இராணுவக்கட்டுப்பாட்டினுள் வாழப்போவதாக முடிவெடுத்து வலிகாமம் திரும்பினர். அவர்கள் மீசாலையில் வைத்திருந்த இயந்திரங்களுடன் அண்ணாவின் சகோதரரான விவேகானந்தன் இணுவிலிற்கு திரும்பினார்.

சில உபகரணங்களுடன் கிளாலி கடலை தாண்டிய அண்ணா நடராஜா கிளிநொச்சியில் மீண்டும் தனது உற்பத்திகளை ஆரம்பித்தார். ஆனால், யுத்தம் உக்கிரமடைய அண்ணா தொழிற்சாலை வவுனிக்குளத்திற்கு இடம்மாற்றப்பட்டது. அவர்  1958 இல் பெற்ற அதே காணியில் தான் அண்ணா தொழிற்சாலையை வவுனிக்குளத்தில் நிறுவியிருந்தார். போர் அங்கும் நெருங்க அண்ணா தொழிற்சாலை மன்னாரிலுள்ள ஜெயபுரத்திற்கு மாற்றப்பட்டது.

யுத்தம் பீடிக்கப்பட்டு, பொருளாதார தடைகள், உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு மற்றும் தொழிலாளரிற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிலை போன்றவற்றால் எதிர்காலம் கேள்விக்குரியதாக தோன்றுகையிலும், அண்ணா கடவுள் மீது கொண்ட நம்பிக்கையால் நம்பிக்கையுடன் வேலைகளை முன்னெடுத்தார். யாழ் செல்வதற்கான ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. போரினாலும் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளினாலும் பாரிய இழப்புகளை சந்தித்திருந்த அண்ணா வங்கிக்கடன் மூலமும் அர்ப்பணிப்பு மிக்க தொழிலாளர்களின் முயற்சியாலும் படிப்படியாக வளர்ந்து பின்னர் அதன் முழு மூச்சில் உற்பத்தி நடவடிக்கைகளை தொடங்கினார். சாம்பலில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவை போல அண்ணா மீண்டெழுந்தார்.
இது கடினமான பாதைகளை கடந்து வாழ்வில் உயர்ந்த ஒரு மனிதனின் கதை. தோல்வியையும் பின்வாங்கலையும் ஏற்றுக்கொண்டு விட்டு அப்படியே போய் விடாத ஒருவரின் கதை. வரலாற்றின் இருண்ட காலத்தில் நாடு இருந்த போதிலும் நாட்டை விட்டு ஓடிப்போகாத ஒருவரின் கதை. அன்பான அப்பாவாக தனது தொழிலாளர்களுடன் உறுதுணையாக நின்ற ஒருவரின் கதை.
இன்று  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அனைத்துப் பாகங்களிலும் அண்ணா உற்பத்திப் பொருட்கள் கிடைக்கின்றன. அண்ணா நடராஜாவின் அயராத உழைப்பிற்கு நன்றி.