செய்திகள்

அதிகாரத்தை தக்கவைக்க மகிந்த சதி முயற்சி செய்தாரா? பொலிஸ் விசாரணை ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இராணுவத்தின் உதவியுடன் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முயன்றார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் போலிசார் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வி அடைவதாக வாக்கு எண்ணிக்கை காட்டும்போதே தோல்வியை ஒப்புக்கொண்டார். அது போல, வெள்ளியன்று காலை தனது அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையை காலி செய்தார்.

ஆனால் புதிய ஜனாதிபதி சிறிசேனவின் சகாக்கள் மகிந்த ராஜபக்ஷ வாக்கு எண்ணிக்கையை குலைத்து ஒரு அவசர நிலையைப்பிரகடனம் செய்து தன்னுடைய அதிகாரத்தைத் தொடர்வதற்கு சதி செய்ததாகக் குற்றம் சாட்டிவருகின்றனர்.  அமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருக்கின்றார்.

ஆனால் இதற்கு பாதுகாப்புப் பிரிவுகளின் தலைவர்கள் ஒத்துழைக்க மறுத்ததாகவும் அவர்கள் கூறினர். இந்தக் குற்றச்சாட்டுகளை போலிசார் இப்போது விசாரித்து வருகின்றனர். ஆனால் ராஜபக்ஷ இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.