செய்திகள்

அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை – அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப் பதிவு

வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வேளாண்துறை ஓட்டுநர் வேலைவாய்ப்புகளுக்கு நேர்மையான முறையில் நியமனங்களை மேற்கொண்டிருந்த திருநெல்வேலி வேளாண் துறை செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

வேளாண்துறை அமைச்சரின் உதவியாளர்கள் எனக் கூறிக் கொண்ட சிலர்இ தாங்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கே பணியிடம் வழங்க வேண்டும் எனவும் அல்லது  பணிவழங்கும் நபர்களிடம் இருந்து பணம்பெற்று தரவேண்டும் என்றும் முத்துக்குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது.. இதில் மனமுடைந்த காரணத்தினாலேயே அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் இந்நிலையில் திடீரென அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வசம் இருந்த அண்ணா தி.மு.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியைப் பறித்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்த போது தமிழக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மேல் பல புகார்கள் இருக்கின்றன. அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அண்ணா தி.மு.க. கட்சிப் பதவியில் இருந்து கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டிருப்பது ஒரு நாடகமே. அவரை முதலில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் எழுதியுள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் எஸ். குமாரசாமி தற்கொலை சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. வேளாண்மைத்துறையில் நடைபெற்ற ஓட்டுனர் நியமனத்தில் துறை அமைச்சரின் பரிந்துரைப்படி நியமனம் செய்யவில்லை என்பதற்காக அவர் மிரட்டப்பட்டு, மன அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன் விளைவாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று அத்துறையின் சங்கத் தலைவர்களே பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்துள்ளார்கள். இந்நிலையில் சம்பந்தப்பட்ட வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கட்சி பதவிகளை மட்டும் பறித்து விட்டு, அமைச்சர் பதவியில் அப்படியே தொடர அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மேலும் வேதனையாக இருக்கிறது. அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக டிஸ்மிஸ் செய்து விட்டுஇ உதவிச் செயற்பொறியாளருக்கு குமாரசாமிக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்தும், அவர் தற்கொலை பற்றியும் உடனடியாக வழக்குப் பதிவு செய்து பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அதே நேரத்தில், அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் அமைச்சர்களால் மிரட்டப்படுவதை தடுத்து, அரசு ஊழியர்களுக்கு அமைச்சர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள் மிரட்டப்படுவது அ.தி.மு.க. ஆட்சியில் புதிதல்ல. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த சந்திரலேகா முகத்திலேயே ஆசிட் வீசிய சம்பவம் நடைபெற்ற ஆட்சிதான் முந்தைய அ.தி.மு.க. ஆட்சி. இப்போது அமைச்சர்கள் மட்டத்தில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், மிரட்டல் எல்லாம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு குமாரசாமியின் தற்கொலை ஒரு எடுத்துக் காட்டு. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.