அதே அறிக்கைதான் வரும் என்றால், தாமதப்படுத்துவதால் என்ன பலன்? விஜத ஹேரத் கேள்வி
இலங்கையின் விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை காலதாமதமாகியும் ஒரே முடிவினை தருமாயின் அவ் அறிக்கையினை பிற்போடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை என ஜே.வி.பி.யின் ஊடகப்பேச்சாளர் விஜிதஹேரத் தெரிவித்தார்.
உள்ளக விசாரணைகளை பலப்படுத்தி உண்மைகளை கண்டறிவதன் மூலம் சர்வதேச விசாரணையை தடுக்க முடியும் என தெரிவிக்கும் அவர், இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டதாவது;
“கடந்த காலங்களில் மகிந்த ராஜபக் ஷ அரசாங்கம் நாட்டில் மனித உரிமைகளை பாதுகாப்பதில் தவறிழைத்து விட்டது. நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த மறந்து விட்டது. இவையே இலங்கை தொடர்பில் சர்வதேச தலையீடுகள் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த பத்து வருடங்களில் சிறுபான்மை மக்களைப்போல் பெரும்பான்மை மக்களும் பாதிக்கப்பட்டனர். மனித உரிமை மீறல்கள் தமிழ் சமூகத்தை மட்டுமே பாதிக்கவில்லை. சகல மக்களையும் பாதித்து விட்டது.
இவ்வாறானதொரு நிலையிலேயே இலங்கை தொடர்பில் ஐ.நா. விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன் எதிர்வரும் மார்ச் மாதத்தில் விசாரணை அறிக்கையினையும் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனினும் தற்போது நாட்டில் அந்த மாற்றம் ஏற்பட்டதுடன் சர்வதேச அமைப்புக்களின் குறிப்பாக ஐ.நா. வின் பார்வை சற்று குறைவடைந்துள்ளது. அதேநேரம் அரசாங்கமும் சர்வதேசத்துடன் செயற்படும் விதமும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க இவ்வறிக்கை பிற்போடப்பட்டுள்ளது.
எனினும் விசாரணை அறிக்கையினை பிற்போடுவ தால் அல்லது காலம் தாழ்த்தியும் அதே அறிக்கைதான் வெளிவருமாயின் இவ்சர்வதேச விசாரணை அறிக்கையினை பிற்போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் இறுக்கமான பிடியினை விடுவிக்கும் வகையில் இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் முயற்சிகளை தோற்கடிக்கும் வகையில் இந்த காலத்தை அரசாங்கம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அதற்கு இலங்கைக்கான உள்ளக விசாரணையை சரியாக பலப்படுத்தி யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிந்து தீர்வுகளை மேற்கொள்வதன் மூலம் சர்வதேச அழுத்தங்களை முற்றாக தவிர்த்துக்கொள்ள முடியும். எனவே, அதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினை நல்ல மாற்றமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது இலங்கையின் விடயங்களில் சர்வதேச தலையீடுகளை ஏற்படுத்த முயற்சிப்பதும். வடமாகாண சபையில் முரண்பாடான பிரேரணைகளை கொண்டு வருவதும் அர்த்தமற்ற செயற்பாடாகவே அமையும்.இலங்கையின் உள்ளக செயற்பாடுகளுக்கு சர்வதேசம் தீர்ப்பு வழங்குவதை எப்போதும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.