செய்திகள்

அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த 54 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் மன்னார் மற்றும் நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து 54 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டனர் என்று கடற்படைத்தரப்பு அறிவித்துள்ளது.
இவர்களின் 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் வேதாரணியம், நாகபட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். மன்னார் கடற்பரப்பில் 5 படகுகளில் 33 மீனவர்களும், நெடுந்தீவு கடற்பரப்பில் 5 படகுகளில் 21 மீனவர்களும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்ட 21 மீனவர்களும் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். மன்னாரில் கைதுசெய்யப்பட்ட 33 மீனவர்களும் இன்று பிற்பகல் 2 மணியளவில் மன்னாருக்கு அழைத்துவரப்பட்டு, நீரியல் வள திணைக்களம் ஊடாக நீதிபதி முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மன்னார் மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.