செய்திகள்

அநுராதபுரம் சிறைக்கு விஜயகலா திடீர் விஜயம்: தமிழ்க் கைதிகளுடன் பேசினார்

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், அங்கு தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகள் மற்றும் விடுதலை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஒரு மாதத்திற்குள் தீர்வொன்றை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது. சந்திப்பு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

நேற்று சனிக்கிழமை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன், நீண்டு செல்லும் விடுதலை தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார்.

இச்சந்திப்பில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் புதிய அரசின் திட்டம் மந்தகதியில் நகர்வதாகவும் இது விடயத்தில் இன்றைய அரசு போதிய அக்கறையை எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய பிரதியமைச்சர், இது விடயமாக துரித நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் முன்னைய அரசு அக்கறை காட்டாத நிலைமையொன்று காணப்பட்டு வந்த நிலையில், புதிய அரசு இது விடயமாக பெரியளவில் எந்த நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. எனவே, தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பில் சம்பந்தப்பட்டோருடன் பேசி ஒரு மாத காலத்திற்குள் ஒரு தீர்வைப் பெற்றுத் தருவேன் என பிரதியமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளதுடன், ஒரு மாதத்திற்குள் ஒரு தீர்வு கிடைக்காவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் பிரதியமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

தங்களுடைய விடுதலை விடயத்தில் முன்னைய அரசின் காலம் கடத்தும் போக்கை புதிய அரசும் மேற்கொள்வதாகவும் பிரதியமைச்சர் அளித்த வாக்குறுதிக்கிணங்க ஒருமாத காலத்திற்குள் அரசு ஒரு தீர்விற்கு வராவிட்டால் கூடிய விரைவில் நாடு தழுவிய ரீதியில் அரசியல் கைதிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அநுராதபுர சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகள் பிரதியமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பில் பிரதியமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றையும் வழங்கியுள்ளார்.