செய்திகள்

அனந்தியையும் சிவகரனையும் மீண்டும் கட்சியில் இணைக்கவேண்டும்: தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை இளைஞர் அணி

தமிழ் தேசியக்கோட்பாட்டில் இருந்து விலகாது இன்னல்களுக்கு மத்தியில் பணியாற்றுபவர்களுக்கு எதிராக செயற்படுவது வருத்தமளிக்கின்றது என தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டை இளைஞர் அணி தெரிவித்துள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் கட்சியின் இளைஞரணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமையை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.
இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி இளைஞரணியினராகிய நாங்கள் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் கட்சியின் இளைஞரணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வாறான கண்மூடித்தனமான செயற்பாடுகள் எம்மை மேலும் அதிருப்திக்குள்ளாக்கினால் கட்சியில் இருந்தும் இளைஞரணியில் இருந்தும் வெளியேற வேண்டி வரும் என தெரியப்படுத்துகின்றோம் என வட்டுக்கேட்டை இளைஞர் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அணியின் தலைவர் மற்றும் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை தமிழரசு கட்சி என்பது உட்கட்சி ஜனநாயக பாரம்பரிய கட்டமைப்பில் மிக நீண்ட காலம் செயற்பட்டு வந்தமையினாலும் கடந்த காலங்களில் வாலிபர் முன்னணி இளைஞர் பேரவை மற்றும் சுயாதீனமாக பலர் கட்சிக்காக கட்சி நலனுக்காகவும் கட்சியின், கட்சி தலைமையின் எதேச்சதிகார போக்கை கண்டித்தும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார்கள்.

அவ்வாறான போராட்டங்களில் இன்றைய தலைவர்கள் கூட பங்குபற்றியிருக்கிறார்கள் குறிப்பாக அமிர்தலிங்கம் தொடக்கம் மாவை.சேனதிராசா வரை பலர் என்ற வரலாறுகளும் உண்டு.

எனவே உட்கட்சி ஜனநாயக கோட்பாட்டில் கருத்துரைக்கின்றவர்கள் மீது இவ்வாறு காழ்ப்புணர்ச்சி ரீதியாக அபாண்டமாக நடவடிக்கை எடுக்க முற்படுவது என்பது வருந்தத்தக்க விடயங்கள் ஆகும்.

தமிழ் தேசிய கோட்பாட்டிலும் அதன் அடிப்படை நிலையில் இருந்தும் விலகாமல் பல்வேறு சோதனைகளையும் விளைவுகளையும் எதிர்கொண்டு அரசியல் பணியாற்றுகிறவர்கள் மீது இவ்வாறான இடைநிறுத்த நடவடிக்கைகள் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

எனவே இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தும் தமிழரசு கட்சியில் இருந்தும் இடைநிறுத்தும் செய்தியானது ஒவ்வொரு தமிழ் தேசிய உணர்வாளர்களின் உள்ளங்களிலும் மிகுந்த வேதனையையும் ஒரு ஜனநாயக கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் தொடர்பிலும் கேள்வியையும் விசனத்தையும் ஏற்படுத்தி நிற்கிறது.

எனவே இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து இவர்களை உடனடியாக விடுவித்து கட்சிக்குள் உள்வாங்க வேண்டும்.

கடந்த காலங்களில் பல்வேறுவிதமானவர்கள் இவ்விதமான பாரிய விளைவுகளை ஏற்படுத்தியும் அவர்களுக்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டு இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்திருப்பதும் மேலதிக நடவடிக்கை எடுக்க முற்படுவதும் வேறு விதமான ஒரு நிலைப்பாட்டை தமிழரசுக்கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எடுத்திருப்பதும் வேறுவிதமான கருத்தியலை உருவாக்க முற்படுகிறதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் இது இவர்கள் மீதான ஒரு முன்விரோத செயற்பாட்டுக்கான நடவடிக்கையாகவே எம்மை சிந்திக்க தலைப்படுத்துகிறது.
எனவே இதிலிருந்து இவர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டும் அவ்வாறு விடுவிக்க மறுக்கும் பட்சத்தில் வட்டுக்கோட்டை இளைஞரணியினராகிய நாங்கள் அனைவரும் இலங்கை தமிழரசு கட்சியில் இருந்தும் இளைஞரணியிலிருந்தும் விலகிக்கொள்ள வேண்டி வரும் என்ற துர்ப்பாக்கியமான செய்தியை தெரியப்படுத்த விரும்புகின்றோம்.