செய்திகள்

அனந்தி, சுரேஷ் மீது கண்டனம்: தமிழரசுக் கட்சி மத்திய குழு தீர்மானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குட்படுத்தும் வகையில் செயற்பட்ட, வடக்கு மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோருக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கண்டனத் தீர்மானத்தை நேற்று நிறைவேற்றியுள்ளது.

வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக தமிழரசுக் கட்சியின் பெருந் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சர்வதேச விடயச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக – நியாயமற்ற நடவடிக்கைகள் ஈழத் தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் நடந்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு அக்கறையுடன் கவனத்தைச் செலுத்தியுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி, மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக, கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. காணாமற் போனோர் உண்மை நிலையை தெளிவுபடுத்துமாறும், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும், ஐ.நா. அறிக்கை தாமதமின்றி வெளியிடப்பட வேண்டும் எனவும் கோருவதும் இதன் நோக்கமாக இருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கமாக இணைந்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரேஷ; அணியின், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்  பிரேமசந்திரன், தமிரசுக் கட்சியின் மகளிர் அணியின் துணைத் தலைவி திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டிருந்தார்கள். கவனயீர்ப்புப் போராட்டத்தில் எந்த இடத்திலும் சம்பந்தப்பட்டிராத, உத்தேசிக்கப்பட்டிருக்காத விடயமாகிய, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடு,

அ – எந்த நோக்கத்துக்காக மக்கள் திரட்டப்பட்டார்களோ, திரண்டார்களோ, அந்த நோக்கத்தின் முக்கியத்துவத்தை போலியாக்கியுள்ளது.

ஆ – எதிர்பாராத விதத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம், ஆர்வத்துடன் போராட்டத்தில் பங்குபற்றிய மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக செயற்பட்டவர்கள் என்ற அபாண்டமான பழியை உருவாக்கியுள்ளது.

இ – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மேற்படி விடயத்துக்கு துணைபோயிருப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாகியுள்ளது.

எனினும் உள்ளகத் தகவல்கள் மூலம், குறித்த உருவப் பொம்மை திருமதி அனந்தி சசிதரனின் வாகனத்தின் மூலமே குறித்த இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த விடயம் கவலையைத் தருகின்றது. கட்சிக் கட்டுப்பாடு தொடர்பில் அவர்கள் மீது பொறுப்புக்கூற வேண்டிய கேள்வியை எழுப்பியுள்ளது. மேற்குறித்த இருவரும் மேற்படி விடயம் தொடர்பில், கவலை தெரிவிக்காது இருப்பது இந்த விடயம் தொடர்பான அவர்களின் மனவிருப்பமான ஈடுபாட்டையே காண்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதன் தொடராக பல்வேறு சந்தர்பங்களில், சம்பந்தன் – சுமந்திரனுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சுரேஷ் பிரேமசந்திரனது நடவடிக்கையை மத்திய செயற்குழு கண்டிக்கின்றது.

மத்திய செயற்குழு உறுப்பினரான அனந்தி சசிதரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்  பிரேமசந்திரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினால் வழங்கப்பட்ட ஊடகப் பேச்சாளர் பொறுப்பை பொறுப்பற்ற வகையில் பயன்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், யாழில் சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு தீ வைத்த, வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் உபதவிசாளர் சதீஸின் நடவடிக்கையும் மத்திய செயற்குழு கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.