செய்திகள்

அனுமதியின்றி ஏனைய கட்சிகளின் கூட்டங்களில் சு.க. பங்கேற்கத் தடை: அநுர பிரியதர்ஷன யாப்பா

கட்சி உயர் மட்டத்தின் அனுமதியின்றி வேறு அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பங்கேற்பதை சுதந்திரக் கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு அக்கட்சி தடைவிதித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இந்த முடிவை எடுத்து கட்சியின் சகல மக்கள் பிரதிநிதிகளுக்கும் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர பிரியதர்ஷன யாப்பா நேற்று செவ்வாய்க்கிழமை அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது; கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் நினைத்தது போல் நடந்து கொள்ளவும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடவும் தடை விதிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை ஊடகங்களுக்கு தெரிவிப்பதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கு இழுக்கு ஏற்படுவதாக கட்சி கருதுகிறது. தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ள ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு அடுத்த பொதுத் தேர்தலை வெற்றிகொள்வதே எமது இலக்காக உள்ளது. ஆனால் இத்திட்டத்தை சீர்குலைக்க சில தரப்பு முயற்சித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி அண்மைக்காலத்தில் பல மக்கள் பிரதிநிதிகள் வேறு கட்சிகளின் கூட்டங்களில் சுய விருப்பப்படி பங்கேற்றிருக்கின்றனர். அதுமட்டுமன்றி கட்சிக் கொள்கைக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் சிலர் கருத்துகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

இனிமேல் இவ்வாறு நடந்து கொள்பவர்கள் மீது கட்சி வழக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்றவர்கள், கருத்துகளை வெளியிட்டவர்களை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கட்சியின் எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் தமது சுயவிருப்பப்படி ஊடகங்களுக்கு அறிக்கை விடவோ, கருத்துகளைத் தெரிவிக்கவோ கூடாது எனவும் கட்சி உயர் மட்டம் அறிவுறுத்தியுள்ளது.