செய்திகள்

அனைத்து கட்சிகளின் சந்திப்பு தீர்வின்றி முடிவு: 19 தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்படலாம்

19வது அரசியலமைப்பு திருத்தத்தை 20ம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவதா இல்லையா என்பது தொடர்பாக அன்றைய தினமே தீர்மானிக்கப்படவுள்ளது.

19வது திருத்தம் தொடர்பாக நேற்றைய தினம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெற்ற போதும் 19ஐ விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சில இணங்காத காரணத்தினால் அந்த கூட்டம் எதிர்வரும் 20 திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில் இதில் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா , சுசில் பிரேமஜயந்த , ஜோன் செனவிரட்ன , தினேஸ்குணவர்தன , வாசுதேவ நாணயக்கார , விமல் வீரவன்ச , டீ.யூ.குணசேகர ,திஸ்ஸவிதாரன , ஜீ.எல.பீரிஸ் ஆகியோர் எதிர்கட்சி சார்பாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக சுமந்திரனும் அரசாங்கத்;தின் சார்பாக லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தின் போது 19வது திருத்தம் தொடர்பாக ஒவ்வொரு கட்சிகளும் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ள நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சில 20ம் திகதி இதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு இணங்க முடியாது என தெரிவித்துள்ளது. இதனையடுத்து இணக்கப்பாடுகள் எதுவுமின்றி இந்த கூட்டம் 20ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அன்றைய தினம் காலை அனைத்து கட்சிகளின் பிரதானிகளும் மீண்டும் கூடவுள்ளதுடன் அதன் போது 19ஐ விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பாக தீர்மானமெடுக்கப்படவுள்ளது.