செய்திகள்

கட்டாயம் வாக்களியுங்கள்: யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்

இரு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுத்தரப் போவதில்லை என்ற போதிலும் தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இதுதொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் இன்வாறு தெரிவித்துள்ள மாணவர் ஒன்றியம், கடந்தகால வரலாறுகளை கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கையின் ஜனாதிபதியினை தெரிவு செய்யும் தேர்தலானது வரும் தை மாதம் 8 ஆம் திகதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலானது தமிழ் மக்களாகிய எமக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத் தரும் என்றோ எமது உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கும் என்றோ நாம் துளி அளவும் நம்பவில்லை. ஏனெனில், இத் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் சிங்கள பௌத்த பேரினவாத கொள்கையை பின்பற்றுபவர்கள் ஆவார். இன்று இந்த நாட்டின் தமிழ் மக்கள் ஸ்திரமான சிறந்த அரசியல் தலைமை அற்ற ஓர் இருண்ட காலத்திலே சுதந்திரம் அற்று உரிமை மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

மூன்று தசாப்தகால உரிமைப் போராட்டத்தின் உச்சமாக முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான எம் இன உறவுகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் எஞ்சிய மக்கள் ஏதிலிகளாய் வறுமையில் சிக்கி அன்றாட வாழ்வுக்கே அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்ற இந்நிலையினை தமக்கு சாதகமாக்கி எம் மக்களையும் இளைஞர் யுவதிகளையும் பணம், வேலைவாய்ப்பு என்று ஆசை வார்த்தைகளை தேர்தல் காலங்களில் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுவோரை எமது ஒன்றியம் வன்மையாக கண்டிக்கிறது.

யுத்தம் முடிவடைந்து விட்டதாக அரசு கூறி 5 வருடங்கள் கடந்த நிலையிலும் எமது இனப் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை வழங்க முன்வராது வெந்தபுண்ணில் வேல் பாச்சுவது போன்று எமது பூர்வீக நிலங்களில் அத்துமீறிய குடியேற்றங்களையும் நில அபகரிப்புக்களையும் செய்து எமது இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் சிதைப்பதுடன் எமது பிரதேசத்தின் தேவையற்ற இராணுவ கெடுபிடிகளையும் மேற்கொண்டு பொருளாதார ரீதியாகவும் எம்மை நலிவடையச் செய்கின்றது.

இந்நிலையிலும் தமிழ் மக்களாகிய நாம் ஜனாநாயக ரீதியில் கடந்த கால தேர்தல்களில் எமது ஒருமித்த குரலில் அரசிற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தியிருந்தோம். தேர்தலில் வாக்களிப்பு என்பது ஒவ்வொருவரினதும் ஜனநாயக உரிமையும் கடமையும் ஆகும். எனவே, அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்காவிட்டால் எமது வாக்குகள் தவறான முறையில் பயன்படுத்தப்படலாம். எனவே , தமிழ் மக்களாகிய அனைவரும் கடந்த கால வரலாற்றுக்களை கருத்தில் கொண்டு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று எமது ஒன்றியம் கேட்டுக்கொள்கிறது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது தமிழ் தேசியம், சுய நிர்ணயம், சுயாட்சி என்ற கொள்கையில் இருந்து தளராது தமிழ் மக்களின் உரிமைக்காக என்றும் குரல் கொடுக்கும்.