செய்திகள்

அமெரிக்காவின் அன்பளிப்புகள் எங்களுக்கு தேவையில்லை: ஒபாமா மீது கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பாய்ச்சல்

தேன் தடவிய பேச்சால் கியூபா மக்களை திசைதிருப்ப முயலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு புரட்சியாளரும், கியூபா முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது.

இந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. அதேபோன்று கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபாவுக்கு செல்வார் என்று பல மாதங்களாக கூறப்பட்டது.

இந்நிலையில், தனது மனைவி மற்றும் இருமகள்களுடன் ஒபாமா கடந்த 20-ம் தேதி கியூபா வந்தடைந்தார். கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் தம்பியான தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை, ஒபாமா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

உடல்நலம் குன்றிய நிலையில் சக்கர நாற்காலியின் துணையின்றி நடமாட முடியாத நிலையில் இருக்கும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோவை ஒபாமா சந்தித்துப் பேசுவார் என இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

அந்த தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக கருத்து கூறிய ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் பென் ரோட்ஸ், ‘இந்த பயணத்தின்போது பிடல் காஸ்ட்ரோவை சந்திக்கும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை. அதுபோன்றதொரு சந்திப்புக்கு நாங்களும் கேட்டுக் கொள்ளவில்லை, கியூபா அரசுதரப்பிலும் எங்களுக்கு அப்படியொரு கோரிக்கை முன்வைக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர், ஒபாமாவும் ரவுல் காஸ்ட்ரோவும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, அமெரிக்காவைப் பற்றி பெருமைபொங்க பேசிய ஒபாமா, அமெரிக்காவில் கருத்துரிமை, பேச்சுரிமை மற்றும் மதவழிபாட்டு உரிமைகள் சிறப்பாக நிலைநாட்டப்படுவதாக குறிப்பிட்டார். இது அமெரிக்காவுக்கு உரிய உயர்பண்புகள் அல்ல, உலகம் முழுமைக்குமான உயரிய பண்புகளாகும் என்றும் அவர் கூறினார்.

கியூபாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் இந்த உரிமைகள் அனைத்தும் மக்களுக்கு மறுக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா நீண்டகாலமாகவே குற்றம்சாட்டி வருகிறது. கியூபாவில் பத்திரிகை சுதந்திரமும் பெரிய அளவில் இல்லை என்றநிலையில், நேற்று ஒபாமாவும் ரவுல் காஸ்ட்ரோவும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது வெளிநாட்டு ஊடகங்களை சேர்ந்த நிருபர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது ரவுல் காஸ்ட்ரோ அவர்கள்மீது எரிந்து விழுந்தார்.

குறிப்பாக, கியூபா நாட்டு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பான கேள்வியின்போது ஆவேசம் அடைந்த அவர், ‘இப்போதே சொல்லுங்கள்? எத்தனைபேர் எங்கள் நாட்டு சிறைகளில் அரசியல் கைதிகளாக இருக்கிறார்கள்?, அவர்களின் பெயர்களை சொல்லுங்கள்? இன்றிரவுக்குள் விடுதலை செய்கிறேன் என அவர் கோபமாக கூறினார்.

பின்னர், கியூபாவில் மனித உரிமைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக பேசப்படுகிறதே? என்ற மற்றொரு நிருபரின் கேள்விக்கு பதிலளித்த காஸ்ட்ரோ, உலகில் உள்ள எத்தனை நாடுகள் 61 வகை மனித உரிமைகளையும் முழுமையாக கடைபிடிக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா?, உலகில் உள்ள எந்த நாடும் இந்த 61 வகை மனித உரிமைகளையும் முழுமையாக கடைபிடிக்கவில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும் என கூறினார். அப்போது ஒபாமாவின் முகம் இறுகிய நிலையில் காணப்பட்டது.

வழக்கமாக இதுபோன்ற கூட்டுப் பேட்டிக்கு பின்னர், இருநாடுகளை சேர்ந்த உலகத் தலைவர்கள் தங்களது கரங்களை உயர்த்தி, ஊடகங்களுக்கு ‘போஸ்’ கொடுப்பது வாடிக்கையான சம்பிரதாயம் ஆக உள்ளது. நேற்றைய பேட்டி முடிந்ததும், இதேவகையில் ஒபாமாவின் கரங்களைப்பற்றி, மேலே உயர்த்தி ஊடகங்களுக்கு ‘போஸ்’ கொடுக்க நினைத்த ரவுல் காஸ்ட்ரோ, தனது வலது கரத்தால் ஒபாமாவின் இடது கரத்தைப்பற்ற முயன்றார்.

ஆனால், அப்படியொரு ‘போஸ்’ கொடுப்பதை தவிர்த்த ஒபாமா, தனது கரத்தை காஸ்ட்ரோவின் பிடியில் இருந்து விலக்கிக் கொள்ள முயன்றார். இருப்பினும், விடாப்பிடியாக ஒபாமாவின் இடது மணிக்கட்டை பிடித்து, அவரது கையை மேலே தூக்க காஸ்ட்ரோ மல்லுக்கட்டினார். ஆனால், அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அரைகுறையாக கையை தூக்கிய ஒபாமா, நிருபர்களை பார்த்து ஒரு அசட்டுசிரிப்பை உதிர்த்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் ஒபாமாவின் கியூபா பயணம் தோல்வியில் முடிந்ததாகவே பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கியூபாவில் மக்களுக்கு உரிய சுதந்திரம் இல்லை என்னும் பொருள்பட தலைநகர் ஹவானாவில் ஒபாமா வெளியிட்ட கருத்துக்கு அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ(89) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

cuba
இதுதொடர்பாக, பிரபல பத்திரிகை ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது:-
ஒபாமாவின் தேன் தடவிய வார்த்தைகளை கியூபா மக்கள் பொருட்படுத்த வேண்டாம். அவரது பேச்சை கேட்டவுடன் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் தோன்றியதாகவே அனைவரும் கருதுகின்றனர். நமது நாட்டு மக்களின் அறிவாற்றல் மற்றும் உழைப்பால் நமக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து தேவைகளிலும் நாம் தன்னிவை அடைந்துள்ளோம். அவர்கள் (அமெரிக்கா) சாம்ராஜ்ஜியத்தின் அரசு தரும் எந்த அன்பளிப்பும் எங்களுக்கு தேவையில்லை.

பிறநாடுகளின் தயவு இல்லாமல் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அம்சங்களில் கியூபா அடைந்துள்ள வளர்ச்சியைப் பற்றி அறியாமல், கியூபா நாட்டு அரசியலைப்பற்றி வியாக்யானம் பேசும் ஒபாமா, உலக நாடுகளின் தடை நடைமுறையில் இருந்தபோதே தென்னாப்பிரிக்காவுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்கிய பழைய கதையைப் பற்றி முதலில் தெளிவாக விளக்க வேண்டும்.