செய்திகள்

அமெரிக்காவில் பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை: பதவியேற்ற அன்றே பலியான சோகம்

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்தநிலையில், வெர்ஜினியா மாகாணத்தில், பதவி ஏற்ற முதல் நாளிலேயே பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வாஷிங்டன்னில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது லேக்ரிட்ஜ் நகர். இங்கு உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் போலீஸ் அதிகாரி ஆஷ்லே கெயிண்டான் உள்பட 3 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆஷ்லே கெயிண்டான் பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் யார் என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை. மேலும் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்தும், படுகாயம் அடைந்த மற்ற 2 போலீசாரின் நிலைமை குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.