செய்திகள்

அமெரிக்காவில் பொலிஸார் மீது துப்பாக்கிபிரயோகம் – இருவர் படுகாயம்

அமெரிக்காவின் பெர்குசன் நகரில் இரு பொலிஸ் அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த வருடம் கறுப்பின இளைஞர் ஓருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து பாரிய கலவரங்களை சந்தித்த நகரிலேயே இந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட நகரின் பொலிஸ் தலைமையதிகாரி தனது திணைக்களத்தில் காணப்படும் இனப்பாகுபாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போதே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே சிறிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றதாகவும்,புதன் கிழமை நள்ளிரவிற்கு பின்னர் ஆர்பாட்டக்காரர்கள் கலைந்செல்ல முற்பட்ட வேளை பொலிஸ் அதிகாரிகள் இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும்,பொலிஸ் தலைமையதிகாரி ஜொன் பெல்மர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட துப்பாக்கி பிரயோகம் தற்செயலாக இடம்பெற்ற சம்பவமல்ல, பொலிஸார் இலக்குவைக்கப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற வீதிக்கு எதிராக உள்ள இன்னொரு மலைப்பகுதியிலிருந்தே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு பொலிஸ்; அதிகாரி முழுவதும் இரத்த்தினால் தோய்ந்த நிலையில் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களால் கொண்டு செல்லப்பட்டார் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.