செய்திகள்

அமெரிக்க, இந்திய, சீன தலைவர்கள் மைத்திரிக்கு வாழ்த்து

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு அமெரிக்கா , பிரிட்டன், சீனா, இந்தியா உட்பட பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கான இந்த தேர்தலின் முக்கியத்துக்கு அப்பால் உலகம் முழுவதும் ஜனநாயகத்தை ஆதரிப்பவர்களுக்கான ஒரு நம்பிக்கையாக இந்த தேர்தல் இருப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சுமுகமாக ஆட்சி கைமாறுவதற்கு ஆதரவு நல்கியமைக்காக மஹிந்த ராஜபக்சவுக்கும் பாராட்டுதல்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதேவளை, தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் , மைத்திரிபாலவின் காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

பிரித்தானிய வெளியுறவு செயலாளர் பிலிப் ஹாமன்ட் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் நிலையான சமாதானமே எதிர்காலத்துக்கு அவசியமானது என்றும் அதற்கான வழிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அன்றும் குறிப்பிட்டுளார். புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பிரித்தானிய அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் ஹாமன்ட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது பற்றி தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, அமைதியானதும் ஜனநாஜக ரீதியானதுமான இந்த தேர்தலுக்காக இலங்கை மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர் குரிப்பிட்டுள்ளார்.