செய்திகள்

அமெரிக்க கடல்தளத்தை எதிர்த்து ஜப்பானிய பாராளுமன்றம் அருகே மனித சங்கிலி முற்றுகை

ஜப்பானில் அமெரிக்காவின் புதிய கடற்படைத்தளமொன்று அமைக்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் மனித சங்கிலிபோராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்
ஜப்பானின் ஜினோவான் பகுதியில் அமெரிக்காவுக்கு சொந்தமான புடென்மா ராணுவத்தளம் உள்ளது. இந்த ராணுவத்தளத்தை ஒகினாவா தீவில் உள்ள ஹெனோகோ பகுதிக்கு மாற்றி அங்கு வலிமையான புதிய கடல்தளத்தை அமைக்க ஜப்பான் மற்றும் அமெரிக்க ராணுவத்துக்கு இடையில் சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

ஏற்கனவே  ஹெனாகோ பகுதியில் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் வீரர்கள் தங்கியுள்ள நிலையில் இங்கு அமெரிக்க கடல்தளம் அமைவதை ஜப்பானிய மக்களில் ஒரு பிரிவினர் விரும்பவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் அரசுக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஜப்பானிய பாராளுமன்றம் அருகே இன்று கூடிய சுமார் 15 ஆயிரம் பேர் மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.