அமெரிக்க துறவியான அருட்தந்தை ஹரி மில்லர் அடிகளாருக்கு “பிரஜைக்கான சமாதான” விருது
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலப்பகுதியில் துணிச்சலுடன் செயற்பட்டு தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்ததுடன் சமாதானத்துக்காக பாடுபட்டவர்களில் ஒருவராகவும் உள்ள புனித மிக்கேல் கல்லூரியில் உள்ள அமெரிக்க துறவியான அருட்தந்தை ஹரி மில்லர் அடிகளாருக்கு “பிரஜைக்கான சமாதான” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
“பிரஜைக்கான சமாதான” விருது-2014 வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (08) மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் நடைபெற்றது.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் யுத்த காலம் உட்பட 60 வருடகாலங்களாக மட்டக்களப்பில் மனிதாபிமானப் பணிகள் செய்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அருட்தந்தை ஹரி மில்லருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
தேசிய சமாதானப்பேரவையினால் வருடாந்தம் வழங்கப்பட்டுவரும் இந்த விருதானது நான்காவதாக அருட்தந்தை ஹரி மில்லர் அடிகளாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திருமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தனது உரையில்,
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த அருட்தந்தை ஹரி மில்லர் ஆங்கில மொழிமூலம் புனித மிக்கேல் கல்லூரியில் வரலாறும் பௌதிகமும் கற்பிப்பதில் பணியை ஆரம்பித்தார் எனக் கூறினார்.
ஆயர் மேலும் கூறுகையில் மட்டக்களப்பில் 1980 களில் றொட்டறிக் கழகம், சமாதானக் குழு, பல்சமய ஒன்றியம், மட்டக்களப்பு செங்சிலுவைச் சங்கம் என்பவற்றை நிறுவுவதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர், 1990 யுத்த காலத்தில் அப்பாவியான மக்களை பாதுகாப்புப் படைகளிடமிருந்து மீட்பதற்கு மிகவும் உதவியாக இருந்ததோடு காணாமல் போனவர்களின் விபரங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தியவர்.
இலங்கையின் மனித உரிமைகள் பற்றி அறிவதற்காக வெளிநாட்டு இராஜ தந்திரிகள், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அருட்தந்தையிடமிருந்து யுத்தகால அவலங்களை வெளிப்படுத்தியவர்.
2002-2004 இல் நோர்வேஜிய அரசு செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம், நிறுவிய யுத்த நிறுத்த கண்காணிப்பக் குழுவிற்கு அரசு அருட்தந்தையை நியமித்தது. நாங்கள் மட்டக்களப்பு மக்களின் உடலும் உயிருமாக அவரைப் பார்த்தோம் எனத் தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜோ வில்லியம், தேசிய சமாதானப் பேரவையின் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா, அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே. சிசன், கலாநிதி பேராசிரியர் ஜெயசிங்கம், நோர்வே தூதுவர் வேசல் மேரெயின்இ மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் இணைப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் சமயத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளதைக் காணலாம்.