செய்திகள்

அமைச்சர் டெனிஸ்வரனுக்கும் ஜப்பானிய தூதுவர் சந்திப்பு

வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா ஆகியோருக்கிடையே விசேட சந்திப்பொன்று இன்று காலை 10.30 மணியளவில் ஜப்பானிய தூதுவராலயத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் தக்குஷி ஒட்டக்கிடா ஆகியோரும் கலந்துகொண்டனர் .

மேற்ப்படி சந்திப்பின்போது வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் அவர்கள், மாகாணத்தில் காணப்படுகின்ற வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் சுட்டிக்காட்டியதோடு, கடந்த வருடம் தனது அமைச்சின் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட வாழ்வாதார ஊக்குவிப்புத் திட்டத்திற்கு மேலதிகமாக தேவைப்படுகின்ற 590.8 மில்லியன் ரூபாவுக்கான திட்ட முன்மொழிவு ஒன்றினை தூதுவரிடம் கையளித்துள்ளார்.

மேலும் நடைபெற்றுமுடிந்த உள் நாட்டு யுத்தத்தில் பிள்ளைகளைப் பறிகொடுத்த குடும்பங்கள், புனர்வாழ்வு பெற்ற போராளிகள் குடும்பங்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் என பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வடக்கிலே நாளாந்த வருமானம் இன்றி கஷ்டப்படுவதை கருத்திற்கொண்டே, அவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவித்து நிலையான அபிவிருத்திக்குள் இட்டுச் செல்லவேண்டும் என்ற நோக்கோடு மேற்படித் திட்டத்தை ஆரம்பித்து, தனது கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக நடைமுறைப்படுத்திவருவதாகவும், ஏறத்தாள 12676 குடும்பங்கள் மேற்படித் திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்ததாகவும் அவற்றில், கடந்த வருட 43 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் ஊடாக 860 குடும்பங்கள் மாத்திரமே மேற்ப்படி வாழ்வாதாரத் திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் நிதிப் போதாமையினால் 11816 குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போயுள்ளதாகவும் விசேட விதமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜப்பானிய தூதுவர் மேற்படித் திட்டத்தினை வெளிநாட்டு வளத்துறை திணைக்களம் (ERD) சிபாரிசு செய்யும் பட்சத்தில் நிதியுதவி வழங்க தமது நாடு தயாராக உள்ளதாகவும், எனவே அதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது இந்த வருடம் வடக்கு மாகாணத்துக்கு ஜெய்க்கா திட்டத்தின் ஊடாக ஏறக்குறைய 1736 மில்லியன் ஜப்பானிய ஜென் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்க்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த திட்டத்தின் ஊடாக உள்ளக வீதிகள் புனரமைப்பு, சிறிய நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள் என்பன மேற்கொள்ளமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கடந்த காலத்தில் ஜப்பான் நாட்டின் ஊடாக இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கும், எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கும் தனது மாகாண மக்கள் சார்பாகவும், இலங்கை மக்கள் அனைவரது சார்பாகவும் தனது நன்றிகளைத் தூதுவருக்கும் ஜப்பான் நாட்டு மக்களுக்கும் தெரிவித்து நிற்பதாக வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்தார்.