செய்திகள்

அமைதியான சூழலை பாதுகாக்கும் வகையிலான நிலையை மக்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்: டக்ளஸ்

அமைதியான கௌரவமான சூழலை பாதுகாக்கும் வகையில் மக்கள் அதற்கான அரசியல் சூழ்நிலையையும் உருவாக்கிக் கொள்ள வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் எழுவைதீவு உப அலுவலகம் மற்றும் பொதுநூலகத்தை நேற்றைய தினம் (13) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எழுவைதீவு மக்களுடைய வாழ்வில் இன்றைய நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமானதொரு நாளாக அமைந்துள்ளது.

இன்றைய தினம் கடற்கரை வீதி திறந்து வைக்கப்பட்ட அதேவேளை, உப அலுவலகம் மற்றும் பொதுநூலகமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனூடாக எமது பிள்ளைகள் பரந்தளவிலான அறிவை பெற்றுக் கொள்ளக் கூடியதான சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது என்பதுடன் நூலகத்தின் வசதி வாய்ப்புக்களை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.

மாணவ சமூகத்தினர் கணினி அறிவில் முன்னேற்றும் காணும் வகையில் அதற்கான தேவைப்பாடுகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்துவதற்கும் நாம் எண்ணியுள்ளோம்.

அந்தவகையில் முதற்கட்டமாக ஐந்து கணினித் தொகுதிகளை பெற்றுத் தரும் அதேவேளை, எழுவைதீவின் வரலாற்றை ஏனைய மக்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் வரலாற்று நூலொன்றை எழுதுவதற்கு நிதி உள்ளிட்ட உதவி ஒத்தாசைகளையும் வழங்கவும் நாம் தயாராகவுள்ளோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமன்றி இங்கு முன்வைக்கப்பட்ட ஏனைய கோரிக்கைகள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்துவோம்.

25 வருடங்களுக்கு முன்னர் நாம் இங்கு வருகைதந்த போது மக்களின் பல்வேறுபட்ட கஸ்ர துன்பங்களை நீக்கியிருந்தோம். குறிப்பாக உணவு, மருந்து போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணங்கள் ஊடாக தீர்வைக் கண்டிருந்தோம்.

இன்றும்கூட எமது மக்களின் நாளாந்த வாழ்வியலில் எதிர்கொள்ளப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வுகளை கண்டு வருகின்றோம்.

தற்போது இங்கு வாழ்ந்து வருகின்ற மக்கள் 24 மணிநேர மின்சாரத்தை பெற்றுக் கொள்கின்றார்களேயென்றால் அது நாம் எடுத்த முயற்சியின் பயனாகவே கிடைக்கப்பெற்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில் எமது மக்களுக்கு வளமான வாழ்வை பெற்றுக் கொடுப்பதையே நோக்காகக் கொண்டு செயற்படும் அதேவேளை, அமைதியான கௌரவமான சூழலை பாதுகாக்கும் வகையில் அரசியல் சூழ்நிலையை மக்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியமானது.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டுமென்பதே எமது அணுகுமுறையும், நிலைப்பாடுமாகும்.

நீண்டகாலமாக நாம் எதை வலியுறுத்தி வந்தோமோ அதையே இன்றும் வலியுறுத்தி வருகின்றோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கூறி குழப்பி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக புதிய உப அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து திறந்து வைக்கப்பட்ட நூலகத்தையும் செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) பிரதேச செயலர் திருமதி எழிலரசி அன்ரன்யோகநாயகம், ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன், உபதவிசாளர் அல்பேட், பிரதேச சபை செயலாளர் சுதர்ஜன், யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.