செய்திகள்

அம்பாறையில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்கிறது!

அம்பாறையில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள எட்டுப் பேரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் ஆறு மாணவர்கள் உள்ளிட்ட எட்டுப் பேர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

அம்பாறை மாவாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து 11 மாணவர்கள் சம்மாந்துறை நோக்கி பயணித்த உழவு இயந்திரம் மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் வெள்ளநீரில் சிக்கி நேற்று மாலை ஆறு மணிக்கு விபத்துக்குள்ளாகியிருந்தது.

இதன்போது ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஆறு மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

நிந்தவூர் பிரதேசத்தில் இயங்கிவரும் மதரசா ஒன்றில் தங்கியிருந்து கற்றுவரும் மாணவர்களை நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதையடுத்து சம்மாந்துறையைச் சேர்ந்த 11 மாணவர்களை உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றி மாலை ஆறு மணிளவில் அனுப்பிவைத்துள்ளனர்.

இதனையடுத்து சம்மாந்துறையை நோக்கி பயணித்த உழவு இயந்திரம் காரைதீவு சம்மாந்துறை வீதியிலுள்ள மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் வெள்ள நீர் வீதிக்கு மேலால் செல்லும் நிலையில் உழவு இயந்திரம் வீதியைவிட்டு விலகி வெள்ளத்தில் தடம்புரண்டுள்ளது.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்களால் ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஆறு மாணவர்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

இதில் 12 தொடக்கம் 16 வயதுடைய மாணவர்கள் பயணித்துள்ளதுடன், உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளர் உட்பட எட்டு பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களை கடற்படையினரின் உதவியுடன் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக சம்மாந்துறை மற்றும் காரைதீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

-(3)