அம்மாந்தோட்டையில் இன்னும் இரகசிய ஆயுதக் களஞ்சியங்கள்! பின்னணியில் எம்.பி.: சஜித்
அம்பாந்தோட்டை பெலியத்தை வீரகெட்டிய பிரதேசங்களில் இன்றும் சட்டவிரோதமான ஆயுதக் களஞ்சியங்கள் இயங்கி வருகின்றன. இது தொடர்பில் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும். இதன் பின்னணியில் எம்.பி ஒருவரே செயற்படுகின்றார் என அமைச்சர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான வன்முறைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
நீலப்படையணி என இயங்கியது இன்றும் இது இயங்குகின்றது. இது நீலப்படையணி அல்ல, நாய்களின் படையணி. இந்த படையணிகளால்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அம்பாந்தோட்டையில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
அன்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு அம்பாந்தோட்டையில் கூட்டம் ஒன்று நடத்த முடியவில்லை. அந்தளவிற்கு நாய்களின் படையணி துரித வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருந்தது. இன்றும் அம்பாந்தோட்டை வீரகெட்டிய தங்காலை பிரதேசங்களில் சட்டவிரோதமான ஆயுதக் களஞ்சியங்கள் இயங்கி வருகின்றன.
இதன் பின்னணியில் இச்சபையில் அங்கம் வகிக்கும் ஒரு பிரதிநிதி உள்ளார். இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படவேண்டும். இன்று மஹிந்த ராஜபக் ஷ தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வந்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை எடுத்துக்கொள்ள முயற்சித்தார்.
அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுத்து நிறுத்தி நிமால் சிறிபால டி சில்வாவுக்கு எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பை வழங்கினார். அந்த நன்றியை மறந்து இன்று தேர்தலுக்கு பின்னரான வன்முறை தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வந்துள்ளார்.