செய்திகள்

அயர்லாந்துக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்குக: முன்னாள் ஜாம்பவான்கள் வேண்டுகோள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடனடியாக அயர்லாந்திற்கு டெஸ்ட் அந்தஸ்த்தினை வழங்கவேண்டும் என மேற்கிந்தியதீவுகளின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கல்ஹோல்டிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயர்லாந்து அணிக்கு உடனடி அங்கீகாரத்தை வழங்காவிட்டால் அந்த அணி வீரர்கள் இங்கிலாந்தின் ஓரு நாள் அணிக்கான தலைவர் மோர்கன் மற்றும் ரன்கிலின் போன்று வேறு நாடுகளுக்கு செல்லக்கூடும் என ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

அவர்களை நாங்கள் அங்கீகரிக்காவிட்டால் நாங்கள் சிறந்த கிரிக்கெட் வீரர்களை இழந்தவண்ணமிருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுடனான வெற்றிக்கு பின்னர் அவர்கள் அடுத்த சுற்றிற்குள் நுழைவார்கள் என்றே நான் கருதுகிறேன்,அவர்கள் தமது அடுத்த போட்டியில் நிச்சயமாக ஐக்கிய அராபு இராச்சியத்தை தோற்கடிப்பார்கள் அதன் பின்னர் உள்ள நான்கு போட்டிகளில் ஒன்றில்; வென்றாலும் அவர்கள் அடுத்த சுற்றிற்கு தகுதிபெறுவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங்கும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார். அந்த நாடு இங்கிலாந்திற்கு வீரர்களை வழங்கும் நாடாக தொடர்ந்தும் விளங்ககூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களுடைய மிகச்சிறந்த வீரர்களை வேறு நாடுகளுக்கு தொடர்ந்தும் இழந்துகொண்டிருக்கும் நாடுகள் குறித்து நான் கவலையடைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.