செய்திகள்

அயர்லாந்து பாராளுமன்றத்தில் இலங்கைக் கொலைக்களம்

இலங்கை யுத்தம் தொடர்பான ஆவணப் படமொன்று அயர்லாந்து பாராளுமன்றத்தில் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியுடன் நேற்று  முன்தினம் புதன்கிழமை காண்பிக்கப்பட்டுள்ளது.

மோதல் சூனிய வலயம், இலங்கையின் கொலைக் களங்கள் என்ற ஆவணப் படமே ஐரிஷ் பாராளுமன்றத்தில் போல் மேர்பி எம்.பி.யின் உதவியுடன் காண்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை யுத்தத்தின் இறுதிக் கட்டத்தை உள்ளடக்கியுள்ள இந்த  ஆவணப் படம் வட கிழக்கில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஆவணப் படம் திரையிடப்பட்ட நிகழ்வில் படத்தின் இயக்குநர் கலும் மக்ரே அஞ்ஞாதவாசமிருக்கும் இலங்கை ஊடகவியலாளர் ரோசித பாஷன அபேவர்தன ஊடகவியலாளர் பின் மில்லர் ஆகியோரும் சமுகமளித்துள்ளனர்.

அத்துடன் இந்நிகழ்வில் பங்குபற்றியவர்கள் இலங்கையின் நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் யுத்தம் தொடர்பான சர்வதேச சுயாதீன விசாரணைக்கான தேவை தொடர்பாகவும் கலந்தாராய்ந்துள்ளனர்.