செய்திகள்

அரசாங்கத்தின் மாதிரிக் கிராமத் திட்டம்: மக்களை ஏமாற்றும் முயற்சி என சுரேஷ் கண்டனம்

வலிகாமம் வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணி மக்களின் மீள்குடியேற்றத்துக்காக கையளிக்கப்படும் எனவும் அதில் 220 ஏக்கரில் மாதிரிக்கிராமம் ஒன்று அமைக்கப்படும் எனவும் மீள்குடியேற்ற அமைச்சர் எ.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் முயற்சி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சரின் அறிவிப்பு தொடர்பாக கருத்துவெளியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னைய அரசாங்கத்தின் காலத்திலும் 220 ஏக்கர் காணியை வளலாயில் விடுவிப்பதாகவும் இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் அங்கு குடியேறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தங்களுடைய சொந்த இடத்தில்தான் குடியேற வேண்டும் எனக்கூறி அதனை ஏற்க மறுத்தார்கள் என்பதை நினைவுபடுத்தினார்.

இதே திட்டத்தைத்தான் இப்போது புதிய அரசாங்கமும், புதிய பெயரில் வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், மாதிரிக் கிராமம் என்ற பெயரில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் 220 ஏக்கர் நிலப்பரப்பில் குடியேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.  இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு திட்டம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேறவே விரும்புகின்றார்கள். தம்மைப்போல இடம்பெயர்ந்த மற்றவர்களுடைய காணிகளில் குடியேறுவது அவர்களுடைய நோக்கமல்ல எனவும் தெரிவித்த சுரேஷ், அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தைப் போலத்தான் செயற்படுகின்றதா எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.