செய்திகள்

அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுகிறது : சி.வி குற்றச்சாட்டு

வடபகுதி மக்களுக்கான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது வட மாகாணத்தின் ஆலாசனைகளை பெறாது, கடமைக்காக கடிதம் அனுப்பிவிட்டு அரசாங்கம் தாம் நினைத்தாவறு செயற்படுவதை வன்மையாக கண்டிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கைதடியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வட வடமாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிப்பாலம் உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலநதுகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

”உதவிப்பாலம் என்ற மக்கள் பயன்பெறும் திட்டத்தின் கீழ், போரினால் பாதிக்கப்பட்ட எம் மக்கள் பலருக்கும் பலவிதமான உதவிகளை நாம் செய்து வருகின்றோம். எனினும் பாரிய திட்டங்களையே உலகம் எதிர்பார்க்கின்றது. ஆனால் அத்திட்டங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன் மத்திய அரசாங்கத்தினாலேயே செயற்படுத்தப்பட்டு வருகின்றன. பல தடவைகளில் எங்களிடம் கேட்காது எமது அலுவலர்களுடன் மட்டும் கலந்தாலோசித்தே இவ்விதமான பாரிய செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ‘நெல்சிப்’ போன்ற பாரிய செயற்திட்டங்களில் ஊழல் நடைபெற்ற போது எம்மால் அதுபற்றி நடவடிக்கைகள் எடுப்பது சிரமமாக இருந்தது. எமது மாகாணத்திற்குரிய எந்த பாரிய செயற்றிட்டமானாலும் எமக்கூடாகவே அவை மத்திய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கடமைக்காகக் கடிதம் அனுப்பி தாம் நினைத்தவாறு நடந்து கொள்வதை நாம் கண்டித்து வருகின்றோம்.

65000 பொருத்து வீடுகள் திட்டமும், தான்தோன்றித்தனமாக, எமது பங்கு பற்றல் எதுவுமின்றியே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு செயற்திட்டம். எமது பங்கு பற்றலை நாம் ஒரு ஆணவப் போக்கில் கோரவில்லை. எம்மை மதிக்கவில்லை என்பதற்காக நாம் கோரவில்லை. மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுடன் கலந்தாலோசித்தால் மக்கள் சார்பான கருத்துக்களை வெளியிடலாம் என்ற எண்ணத்திலேயே, எம்முடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டுகின்றோம். அத்துடன் அதிகாரப்பகிர்வு, அதிகாரப் பகிர்வு என்று வாய் கிழியக் கத்திவிட்டு, இதைக்கூட எமக்குத் தெரியாமல் செயற்படுத்த முன்வந்தால் மத்தியின் உண்மையான மனநிலை என்ன என்ற கேள்வியே மேலோங்கி நிற்கும்.

படித்தவர்களும் பாமரர்களும் ஏதாவது தொழில்களில் ஈடுபட வேண்டும். கணணிபாற்பட்ட தொழில்களையும் சிறு கைத்தொழில்களையும் நாம் ஊக்குவித்து வருகின்றோம். எம்மைப் பொறுத்தவரையில் பாரிய தொழிற்சாலைகளையும் ஆலைகளையும் நிறுவி மக்களை ஒரு இடத்திற்குக் கொண்டு வந்து பலவித சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தாது, எமது சூழலை தொடர்ந்திருக்கச் செய்து மக்கள் தாம் இருந்த இடங்களில் இருந்தே சிறு கைத்தொழில்களில் ஈடுபடவும், சந்தை வாய்ப்புக்களைப் பெறவும் நாம் ஆவன செய்து வருகின்றோம்.

ஆகவே இன்றைய கொடைகள் கையளிக்கும் நிகழ்வு, பாதிப்புற்ற மக்களின் மனங்களில் வருடப் பிறப்பின் போது மனமகிழ்வை ஏற்படுத்துவதற்காக நாம் செய்யும் கைங்கரியம். தொடர்ந்து உங்களை கையேந்துபவர்களாக நாங்கள் வைத்திருக்க மாட்டோம். ஆகவே சிறிய மத்திய தர தொழில் முயற்சிகளில் யாவரும் இறங்க முன்வர வேண்டும். எமது கைத்தொழில்களின் தரத்தை நாம் மேம்படுத்த வேண்டும். மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்கும் குணம் போய் தன்னுறுதியுடன் தங்கள சொந்தக் கால்களில் நிற்க, எம்மவர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

காலஞ்சென்ற சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள், 500இற்கும் மேற்பட்ட குடிசைக் கைத்தொழில்களை அடையாளம் கண்டு தனது மலையக மக்கள் அவற்றில் ஏதாவதொன்றில் ஈடுபட்டுப் பயன்பெற வேண்டும் என்று கோரி நின்றார். மலையக மக்கள் பலர் மேற்படி குடிசைக் கைத்தொழில்களில் ஈடுபட்டுத் தமது வருமானங்களை விருத்தி செய்து மேம்படுத்தியும் வந்தனர். கைத்தொழில்கள் பற்றிய அறிவை மேம்படுத்தி மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் எமது கைத்தொழிற் திணைக்களம் ஈடுபட வேண்டும்” என்றார்

N5