செய்திகள்

அரசாங்கம் மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

மக்களுக்கு அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்தி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கும் போது கட்சிபேதங்களை கடந்து சேவைசெய்ய வேண்டும். அப்படி செய்து வந்ததனாலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்து நிலைத்து நிற்கிறது.

 இந்த தோட்டத்தில் சில தொழிற்சங்கங்கள் தமது கட்சி அங்கத்தவர்களுக்கு மட்டும் நீர்குழாய்களை வழங்கவுள்ளதாக என்னிடம் தெரிவித்தனர்.  ஆனால் இன்று என்னால் வழங்கப்படுகின்ற  நீர்வளங்கள் பொருட்கள் யாவும் கட்சிபோதமின்றி தண்ணீர் தேவைபடுகின்ற சகலருக்கும் பயன்படும் விதத்தில் அமையவேண்டும். இதை உறுதிசெய்யுமாறு தோட்ட முகாமையாளரை கோரியுள்ளேன் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் பொகவந்தலாவ மோறா தோட்ட குடிநீர் விநியோகத்திற்கான உபகரணங்கனை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசியபோது தெரிவித்தார்.

 எமது மக்களின் எதிர்பார்பிற்கிணங்க அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நாம் பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் அவற்றை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. இருப்பினும் எமக்கு கிடைக்கின்ற நிதியைக்கொண்டு பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

 மலையக மக்களுக்கு இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் தமது அடிப்படை சமூக தேவைகளை அரசாங்கத்தின் பொது நிதியை கொண்டு நிவர்த்தி செய்துகொள்ளும் உரிமை இருக்கிறது. எங்களுடைய தேவைகளை தெரிந்து தீர்த்துவைக்க வேண்டிய கடமையிலிருந்து அரசாங்கம் விலகிச்செல்ல முடியாது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தற்போது மந்தநிலையை அடைந்துள்ளன. மலையகத்தில் உள்ள பல தோட்டங்களில் இன்னும் அடிப்படை தேவைகள் கூட நிவர்த்திக்கப்படவில்லை.

 அரச வளம் சகல சமூகங்களுக்கும் சமமாக பங்கிடப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். மலையக மக்களை மிச்சம் மீதிகளுக்காக காத்திருக்கும் கூட்டமாக கருதி அவர்களின் அபிலாசைகள் தட்டிக்கழிக்கப்பட்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கம் மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைபடுத்த முன்வரவேண்டும். தற்போதய நிலையில் மலையக மக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அணுகுமுறையில் காத்திரமான மாற்றம் எற்பட வேண்டும் என்பதே இலங்கை தொழிலாளர் காங்கிரசின் எதிர்பார்ப்பாகும் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

n10