செய்திகள்

அரசினால் வழங்கப்படுகின்ற உதவித் திட்டங்கள் போதாது: யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில்நந்தனன்

எமது மக்கள் கடந்த முப்பது வருட காலமாகப் பல்வேறு வகையான சொல்லொணா அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இவ்வாறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் பல்வேறு தேவைகள் இனங் காணப்பட்டு வருகின்றன. அந்தத் தேவைகளை அரசாங்கத்தினால் மாத்திரம் பூர்த்தி செய்ய முடியாது.அரசினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவித் திட்டங்கள் போதாமலுள்ளன. இதுவரை அரசினால் எந்தவொரு உதவித் திட்டங்களும் வழங்கப்படாத பொதுமக்களும் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இவ்வாறானவர்களை இனங் கண்டு அவர்களுக்கான உதவித்திட்டங்களை வழங்குவதற்கு இங்குள்ள பொது அமைப்புக்கள்,வணக்க ஸ்தலங்கள்,புலம்பெயர்ந்து வாழும் மக்கள் ஆகியோர் முன் வர வேண்டும்.

இவ்வாறு ஆதங்கத்துடன் தெரிவித்தார் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ப.செந்தில்நந்தனன்.

யாழ்.வணிகர் கழகத்தினால் நல்லூர்,காரைநகர் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட வறுமைக் கோட்டுக்குட்பட்ட பயனாளிகளுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு வாழ்வாதார நிதியுதவி வழங்கும் நிகழ்வு  புதன்கிழமை யாழ்.வணிகர் கழகப் பணிமணையில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற உதவித் திட்டங்கள் சரியான வகையில் திட்டமிட்டு வழங்கப்படுவதில்லை.முன்னைய காலங்களில் உதவித் திட்டங்கள் சில அரசியல் தேவைகளுக்காகவும்,சில தனிப்பட்ட தேவைகளுக்காகவுமே வழங்கப்பட்டன.நாங்கள் அரச அலுவலர்களாகவிருக்கிறோம்.அரசாங்கத்தினால் அனுப்பப்படுகின்ற சுற்று நிருபம்,அரசாங்கத்தின் நோக்கம்,கொள்கைகளுக்கு உட்பட்டுச் சேவையாற்ற வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்.இந்த நிலையில் யாழ்.வணிகர் கழகம் போன்ற பொது அமைப்புக்கள் தங்களுடைய வருமானத்தினூடாகப் பெறும் ஒரு தொகை நிதியை சேமிப்பின் மூலம் பொது நோக்கத்திற்காக வழங்குவது வரவேற்கத்தக்கதும் பாராட்டுதற்குரியதுமாகும்.உதவித் திட்டங்களை வேண்டி நிற்கும் மக்களுக்குச் சாலப் பொருத்தமான செயற்திட்டமாக இது அமைந்துள்ளது.

ஆகவே உதவித்திட்டங்களைப் பெறும் பயனாளிகள் தங்கள் சுயதொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவதுடன் தங்களின் குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்து சிறு சேமிப்பையும் ஏற்படுத்தி நிலையான வருமானத்தை ஈட்டுபவர்களாகத் தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எமது மாவட்டத்திலே அனைத்துப் பிரதேச செயலர் பிரிவுகளிலும் வறுமைக் கோட்டுக்குட்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களனைவருக்கும் பிரதேச ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து இவ்வாறான உதவித் திட்டங்கள் சென்றடைய வேண்டும்.இவ்வாறான உதவித் திட்டங்கள் உரியவர்களைப் போய்ச் சேர வேண்டுமென்பதே எமது அரசாங்க அதிபரின் கொள்கையாகவுமுள்ளது.

யாழ்.மாவட்டத்திலே கடமையாற்றிய பல அரசாங்க அதிபர்களினதும் அர்ப்பணிப்பான சிந்தனை,துணிச்சலான செயற்பாடு என்பன காரணமாக யுத்த காலப்பகுதியிலும்,அதற்குப் பின்னரான நெருக்கடியான காலப் பகுதியிலும் எமது மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்ப முடிந்தது.கடந்த 30 வருட காலப் பகுதியிலும் அரசியல் வாதிகள் எமது மக்களுடனிருக்கவில்லை.அரச உத்தியோகத்தர்கள் தான் அரசாங்கத்திடமிருந்து பல உதவித் திட்டங்களை பல்வேறு போராட்டங்களுக்கும்,கோரிக்கைகளுக்கும் மத்தியில் பெற்று வழங்கியிருந்தனர்.அந்த வகையில் முன்னர் பதவியிலிருந்த அரசாங்க அதிபர்களும் வணிகர் கழகத்தின் செயற்பாடுகளுக்குப் பக்க பலமாக இருந்தார்கள்.

அரசாங்க அலுவலர்கள் நேர்மையும்,வெளிப் படைத் தன்மையும்,மக்களுக்குச் சேவையாற்றக் கூடிய அர்ப்பணிப்புணர்வுடனும் காணப்படுகின்ற போதே மக்கள் தங்களுடைய தேவைகளை இலகுவில் பூர்த்தி செய்யக் கூடிய நிலையேற்படும்.எங்களுடைய மாவட்டத்திலே பல திறமையான அரசாங்க உத்தியோகத்தர்களுள்ளனர்.எங்களுடைய மாவட்டத்திலே காணப்படுகின்ற பல பிரதேச செயலர்களும் அர்ப்பணிப்பான சேவையினை வழங்கி வருகின்றனர்.பின்தங்கிய பிரதேசங்களிலும் மக்களுக்கு அர்ப்பணிப்பான சேவையை வழங்கக் கூடிய பிரதேச செயலர்கள்,கிராம சேவகர்கள் காணப்படுகின்றனர்.மக்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய சேவைகள் உரிய வகையில் கிடைக்காதவிடத்து அரசாங்க அலுவலர்கள், உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவதற்கான உரிமையிருக்கிறது.பொதுமக்களுக்காகத் தான் அரசாங்க நிர்வாகம்,அரசாங்கக் கட்டமைப்பு என்பன இயங்குகின்றன என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.

இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ப.செந்தில்நந்தனன்,ஊர்காவற்துறை பிரதேச செயலர் திருமதி.அன்ரனி யோகநாயகம்,நல்லூர் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ரி.மகேஸ்வரகுமார்,யாழ்.வணிகர் கழகத் தலைவர் ஆர்.ஜெயசேகரன்,வணிகர் கழகச் செயலாளர் இ.ஜனக்குமார்,உப செயலாளர் எஸ்.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த உதவித் திட்டங்களை வழங்கி வைத்தனர்.இந் நிகழ்வில் வணிகர் கழக உறுப்பினர்கள்,ஊடகவியலாளர்கள்,பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். யாழ்.நகர் நிருபர்-

IMG_4741