செய்திகள்

அரசியலில் கலந்த மது

தாயகன்

இலங்கையில் மதுவுக்கு முற்றுப்புள்ளி (மத்தட்ட தித்த) எனும் திட்டம் மகிந்த ராஜபக்ஷ அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டபோதிலும் அதனை அவர்களினால் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை. இத்திட்டம் தோல்வியடைய இலங்கைக் “குடிமகன்களின்’ தாக சாந்தியே காரணமென அவர்கள்மீது பழியைப் போட்டுத் தப்பித்துக்கொண்டனர். ஆனால், இலங்கையிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள மதுபானசாலைகளே மதுவுக்கு முற்றுப்புள்ளித் திட்டம் தோல்வியடையக் காரணமென்பது தற்போது தெரியவந்துள்ளது.

இலங்கைப் பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு மதுபானசாலைகள் உள்ளதாக அண்மையில் அதிர்ச்சித் தகவலொன்று வெளியானது. இவற்றுக்கான அனுமதி கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வழங்கப்பட்டதாக ஒரு சாராரால் தெரிவிக்கப்பட்டபோதும், நல்லாட்சி அரசிலும் வழங்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அண்மையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் மகிந்த சமரசிங்க இது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 100 பேருக்கு மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் உள்ளதென்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த எம்.பி. க்கள், அமைச்சர்களுக்கு எப்போது இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன? இந்த அனுமதிப் பத்திரங்களுக்குரிய மதுபானசாலைகளை யார் நடத்திச் செல்வது போன்ற விபரங்கள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவேண்டுமென அமைச்சர் மகிந்த சமரசிங்க இங்கு வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை வைத்திருக்கும் எம்.பி. க்கள், அமைச்சர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலை தனக்கு சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து இதற்கடுத்ததாக நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்வாறான அனுமதிப் பத்திரங்களை வைத்திருக்கும் 45 வரையிலான எம்.பி. க்கள், அமைச்சர்களின் பெயர் விபரங்கள் தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த 45 பேரும் நேரடியாகவே தமது பெயர்களில் அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஏனையவர்கள் தொடர்பில் மிகவிரைவில் அடுத்த தகவல் வெளியிடப்படவுள்ளன. இந்த 45 அனுமதிப் பத்திரங்களில் 13 அனுமதிப் பத்திரங்கள் குருநாகல் மாவட்ட அரசியல்வாதிகளினால் மட்டும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதைவிட அரசில் அங்கம் வகிக்கும் இன்னாள் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி. க்கள் எனப் பலருக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான மது விற்பனை நிலையங்கள் மற்றும் இரவு விடுதிகள் என ஏகப்பட்டவை இருப்பது தொடர்பில் அரசு கவனத்தில் எடுத்துள்ளது.

மதுவுக்கு முற்றுப்புள்ளி திட்டத்தின் மூலம் இலங்கையில் மதுபாவனையை ஒழிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டபோதும் அது அப்போது வெற்றியளித்திருக்கவில்லை. இதுதொடர்பில் அந்த நேரத்தில் கருத்துத் தெரிவித்திருந்த அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் உடகம ஸ்ரீ புத்தர கித்த தேரர், மதுபானசாலைகளை அழிக்க முடியாமல் இருப்பதற்கு இந்த நாட்டின் அரசியல்வாதிகளே காரணமெனவும் பாடசாலைகள், சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் புண்ணிய ஸ்தலங்களுக்கு அருகாமையிலுள்ள மதுபானசாலைகளை அகற்றமுடியாமல் இருப்பதற்கும் இந்த அரசியல்வாதிகளே காரணமெனவும் அரசியல்வாதிகளே தமக்கு நெருங்கியவர்களுக்கு மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை வழங்கி ஊக்குவிக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியிருந்தார். இவ்வாறு அவர் குற்றம் சாட்டிய நேரத்தில் இலங்கையில் 1098 மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

அதில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளினதும், அரசியல்வாதிகளுக்கு நெருங்கியவர்களினதுமாகவே இருந்தன. இதேவேளை இலங்கையின் மொத்த சனத்தொகையில் 28 வீதமான ஆண்களும் 1 வீதமான பெண்களும் மதுபாவனையில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் தமது நாளாந்த வருமானத்தில் 30 வீதத்தை மதுவுக்கு செலவிடுவதாகவும் ஆய்வொன்று தெரிவிக்கிறது. அதேவேளை இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் பியர் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் பாவனை வேகமாக அதிகரித்துள்ளதாக ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

படித்த, மத்தியதர மற்றும் மேல்தட்டுப் பெண்கள் மத்தியிலேயே இந்த மதுபானப் பயன்பாடு பரவியுள்ளமை பாரதூரமான நிலைமையெனவும் கட்டுப்பாட்டுச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

உலகளவில் 140 மில்லியன் பேர் “குடிமகன்களாக’ இருப்பதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.  இதில் இலங்கைக்கு 4 ஆவது இடம் கிடைத்துள்ளது. இலங்கையில் தனிமனித மதுபாவனை 4 லீற்றராக இருக்க அதுவே ஆணுக்கு 15.2 லீற்றராக உள்ளது. நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் 43 வீதம்பேர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். பெருந்தோட்டப் பகுதியில் இது 55 வீதமாக உள்ளது. பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களில் 18 வீதம் பேர் மதுவுக்கு அடிமையாக உள்ளனர்.

இதனால் இலங்கையில் சராசரியாக ஒரு ஆண் தனது வருமானத்தில் 30 வீதத்தை மதுவுக்கு செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால், குடும்பத்தின் ஏனைய நுகர்வு குறைவடைவதுடன், பெண்கள், குழந்தைகள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமன்றி, குற்றச்செயல்கள், சமூகச் சீரழிவுகள், விபத்துகள், தற்கொலைகள் போன்றவை அதிகரிக்கவும் இது காரணமாகியுள்ளது. இலங்கையில் இடம்பெறும் வீதிவிபத்துகளில் 95 வீதமானவை மதுபாவனையால் ஏற்படுபவையென கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக இருந்தபோது, மது மற்றும் புகைப்பழக்கத்தினால் மாதாந்தம் 7875 பேர் இலங்கையில் உயிரிழப்பதாகவும் அதில் அநேகமானோர் மாரடைப்பு மற்றும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும் ஏதேனும் காரணங்களுக்காக நாள்தோறும் 950 பேர் இலங்கையில் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டதுடன், மதுவுக்கு முற்றுப்புள்ளி என்ற திட்டத்தை முன்னெடுத்தபோதிலும் அதிகளவானவர்கள் மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேநேரம் யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் புலிகளின் ஆதிக்கம் இருந்த சூழலில் மதுபாவனை மிகக் குறைந்தளவிலேயே மக்களிடம் காணப்பட்டதுடன், மதுபானசாலைகளும் விரல்விட்டு எண்ணக்கூடியளவிலேயே இருந்தன. ஆனால், யுத்தம் முடிந்த பின்னர் மதுபானசாலைகளுக்கான வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களில் மிகப்பெருமளவானவை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கே வழங்கப்பட்டன.

இதனொரு கட்டமாகவே வடக்கு மாகாணசபையின் 30 ஆவது அமர்வின்போது வடக்கில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப் பத்திரங்களை மீள்பரிசீலனை செய்யவேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உரிய நடைமுறைகளைப் பின்பற்றாது வழிபாட்டுத் தலங்கள், கல்விக் கூடங்கள், பொது அலுவலகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றை அண்மித்ததாக பல மதுபான விற்பனை நிலையங்கள் இயங்கிவருவதாகவும்.

இலங்கையில் யாழ்ப்பாணத்திலேயே அதிகமான மதுபானம் விற்பனையாவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் இவ்வாறான மதுபானசாலைகள் மதுவரித் திணைக்களத்தின் வழிகாட்டல்களை மீறிய வகையில் அனுமதிப் பத்திரங்களைப் பெற்றிருப்பதனாலேயே இவை மீள்பரிசீலனை செய்யப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் மதுபாவனைக்கு எதிராக மகளிர் அமைப்புக்களினால் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பில் மகளிர் அமைப்புகள் குறிப்பிடுகையில்,  5,86, 400 சனத்தொகையை கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் இனரீதியாக 4,22,732 தமிழர்களும் 1,55,406 முஸ்லிம்களும் 8,262 ஏனைய இனத்தவர்களும் வாழ்கின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 மதுபான நிலையங்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சனத்தொகையின் அடிப்படையில் முஸ்லிம் அல்லாத தமிழ் மற்றும் ஏனைய இனத்தைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் எண்ணிக்கை அண்ணளவாக 1,34,972 ஆகும். இத்தொகையினருக்காகவே 60 மதுபான நிலையங்கள் செயற்படுகின்றன. அதாவது 2,699 பேருக்கு ஒரு மதுபான விற்பனை நிலையம் என்ற அடிப்படையிலேயே இவை செயற்படுகின்றன.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதம் ஒன்றிற்கு சுமார் 40,29,50,000 ரூபா மதுவுக்காக செலவிடப்படுகின்றது. அதுமட்டுமன்றி பாடசாலைகள், மதத்தலங்கள், பொது இடங்கள், பிரதான வீதிகள், மக்கள் நெருக்கமாக வாழும் இடங்களில் மதுபானசாலைகள் இயங்குகின்றன என குற்றம் சாட்டுகின்றனர். இதனைவிட மலையகத்திலும் மதுபானசாலைகள் அதிகரித்து வருவதுடன் இதில் பல, அரசியல்வாதிகளுக்கு சொந்தமானவையாகவே உள்ளன.

இவ்வாறான நிலையில்தான் மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தத் தொடங்கியள்ளது. இதுதொடர்பில் அண்மையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் கூறுகையில், “நூற்றுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் உள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியும், பிரதமரும் எனக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த அனுமதிப் பத்திரங்களில் பெரும்பாலானவை கடந்த ஆட்சிக் காலங்களிலேயே வழங்கப்பட்டுள்ளன. இதில் பலர் முன்னாள், இன்னாள் அரசியல்வாதிகளாக உள்ளனர்.

எனவே அவர்கள் தொடர்பாக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அவை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கையளிக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கும் பகிரங்கப்படுத்தப்படும். இப்போது நாட்டுப் பற்று தொடர்பில் பேசும் பலர் அப்போது என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை நாங்கள் பார்க்கத்தான்போகின்றோம்’ என்றார்.

மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவுக்கமயை தகவல்கள் திரட்டப்பட்டாலும், அதுதொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்பதில் நம்பிக்கையில்லை.

ஏனெனில் இவ்வாறான மதுபானசாலைகளுக்கு உரித்துடைய அரசியல்வாதிகளில் பலர் தற்போதைய நல்லாட்சி அரசிலும் எம்.பி.க்களாகவும், அமைச்சர்களாகவும் அங்கம் வகிப்பதால் அவர்கள்மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்பதை எதிர்பார்க்க முடியாது. அதைவிட, அரசியல்வாதிகளுக்கு மதுபானசாலைகள் இருப்பது தற்போதுதான் தெரியவந்துள்ளது போல் அரசாங்கம் காட்டிக்கொள்ளப் பார்க்கின்றது.

இது காலாகாலமாக இடம்பெறும் விடயம். மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெறுவது அவ்வளவு இலகுவானதல்ல. அதற்கு அரசியல் செல்வாக்கும் பணபலமும் அதிகம் வேண்டும். அதனால்தான் அனுமதிப் பத்திரங்களை அரசியல்வாதிகளே பெற்றுக்கொள்வதுடன், பணத்தைப் பெற்றுக்கொண்டு தமக்கு வேண்டியவர்களுக்கும் பெற்றுக்கொடுக்கின்றார்கள்.

எனவே, இலங்கையில் மதுபாவனையை இல்லாதொழிக்க வேண்டுமானால் முதலில் மதுபானசாலைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், மதுபானம் மற்றும் புகையிலை போன்றவற்றிற்குப் பெறப்படும் வரிகள் மூலமே அரச இயந்திரம் செயற்பட்டு வருவதால் இவற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் பெரியளவிற்கு அக்கறை காட்டாது. வரவு செலவுத் திட்ட வரிவிதிப்புகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிவிதிப்புகளை மேற்கொள்ளும் அரசு, அதில் மதுபானங்களுக்கோ, புகையிலைப் பொருட்களுக்கோ பாரியளவில் அதிகரிப்பதில்லை.

ஏனெனில் இதன்மூலம் மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்து அதன்மூலம் அவற்றின் நுகர்வுத்தன்மை குறைந்துவிட்டால், தமது வரிவருமானம் பாதிக்கப்பட்டுவிடுமென்பதாலேயே அரசாங்கம் மதுபானம் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான வரிவிதிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதில்லை.

இலங்கையில் அனுமதிப் பத்திரங்கள் பெற்றுள்ள நிலையில் 1098 மதுபானசாலைகள் இயங்கிவருகின்றபோதும் எந்தவித அனுமதிப் பத்திரங்களும் இன்றி ஆயிரக்கணக்கான மதுபானசாலைகள் சட்டவிரேதமாக இயங்கிவருகின்றன.

அதேபோன்று, சட்டவிரோத மதுபான உற்பத்திகளும் விற்பனைகளும் மிகப்பெருமளவில் இடம்பெற்றுவருகின்றன. எனவே, அரசு மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதிலும்,  அதனைப் பெற்றவர்கள் தொடர்பிலும் அக்கறை காட்டாவிட்டாலும், இவ்வாறான சட்டவிரோத மதுபான நிலையங்கள் மற்றும் மது உற்பத்தி, விற்பனை தொடர்பிலாவது கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் இலங்கையில் ஓரளவேனும் மதுபாவனையைக் கட்டுப்படுத்துவதுடன், இலங்கைக் குடிமகன்களின் உயிர்களையும் குடும்பங்களையும் பாதுகாக்க முடியும்.

அதுமட்டுமன்றி பெருமளவு குற்றச்செயல்கள், வீதி விபத்துக்கள், சமூகச் சீரழிவுகளையும் கட்டுப்படுத்த முடியும். கடந்த 30 வருட கால யுத்தத்தினால் “கண்ணீர் தேசமாக’ இருந்த இலங்கை யுத்தத்தின் பின்னர் “தண்ணீர் தேசமாக’ மாறிவரும் நிலையைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் மதுவில் உள்ள அரசியல்வாதிகளின் செல்வாக்கிற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

n10