செய்திகள்

அரசியல்வாதிகளுக்கு மதுபான உற்பத்திகளுக்கு அனுமதியில்லை : ரணில்

மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான அனுமதிப் பத்திரங்கள் எதுவும் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படாது என்றும், அவசியமெனில் ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் மேலதிக வரி விதித்து அவற்றை திரும்பப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில்; தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் உரையாடிய தேசிய கூட்டணியின் பாராளுமன்றக் குழுத் தலைவரான அநுரகுமார திஸநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். நாம் எந்த அரசியல்வாதிக்கும் இப்படியான (மதுபானம் தொடர்பான) அனுமதிப்பத்திரங்களை வழங்கமாட்டோம்.

இந்த விடயம் தொடர்பாக நன்கு விசாரித்து அவசியமெனில், மேலதிகமாக வரி விதித்து ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தவற்றை மீளப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று ரணில் விக்கிரமசிங்க இதன்போது கூறினார்.

கடந்த ஆட்சியிலேயே இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றுள்ளன. எதனோல் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதிவரை அதிக இலாபம் ஈட்டும் வியாபாரமாக இருந்திருக்கலாம். ஆனால், அதற்குப் பின்னர் அது தடைசெய்யப்பட்ட வியாபார மாகியுள்ளது. இதில் புதிய அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட மாட்டாது. அதேபோல், ஏற்கனவே உள்ளவற்றுக்கு உரிய முறையில் வரி செலுத்தப்படுகிறதா என்றும் விசாரிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.