செய்திகள்

அரசியல் இருப்புக்காக முன்னாள் போராளிகளை பலிக்கடா ஆக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது!ஆனந்தன் எம்.பி

யார் புலிகளை அழிப்பதில் வல்லவர்கள் என சிங்கள மக்களுக்கு காட்டி தமக்கான இருப்பினை தக்க வைத்துக்கொள்வதற்காக தென்னிலங்கையின் சில முக்கிய அரசியல்வாதிகள் அமைதியான வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் போராளிகளையும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும் பலிகடாவாக்குவதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட உறுப்பினர் சிவகரன் உட்பட வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய முன்னாள் உறுப்பினர்கள் திடீரென கைது செய்யப்பட்டு வருகின்றமையினாலும், மேலும் பலருக்கு விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றமையினாலும் அவர்களது உறவினர்களும் பொது மக்களும் கதிகலங்கிப்போயுள்ளனர்.

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் புனர்வாழ்வு என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மற்றும் பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு என்பன வலுப்பெற்றதன் காரணத்தாலும் அரசியல் சுயலாபத்துக்காகவும் கட்டம் கட்டமாக முன்னாள் போராளிகள் கடுமையான நிபந்தனைகளுடனும் கண்காணிப்புக்களுடனும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் நூற்றுக்கு 99 சதவீதமானவர்கள் தொழில்துறைகளில் முனைப்பு காட்டி தமக்கான வாழ்வதாரத்தினை தேடுவதற்கான போராட்டத்தில் அன்றாடம் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர்.

அத்தகைய நிலையில் அவர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கும் போது கடந்த சில நாட்களாக சில முக்கிய முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டுள்ளார்கள் என்றும், விடுதலை செய்யப்பட்டு சிறிது காலஅவகாசத்தின் பின்னர் பயங்கரவாத பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஏனைய போராளிகள் சிலருக்கும் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் சிலர் நான்காம் மற்றும் இரண்டாம் மாடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று அவர்களது குடும்பங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. இதனால் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கின்றது.

யார் புலிகளை அழிப்பதில் வல்லவர்கள் என சிங்கள மக்களுக்கு காட்டி தமக்கான இருப்பினை தக்க வைத்துக்கொள்வதற்காக தென்னிலங்கையின் சில முக்கிய அரசியல்வாதிகள் அமைதியான வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் போராளிகளையும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும் பலிகடாவாக்குவதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதே வேளை அவ்வாறான நடிவடிக்கைகளுக்கு கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அண்மைக்கால கைது நடவடிக்கையில் எவ்விதமான அரசியல் பின்னணியும் இல்லையென நல்லாட்சி அரசாங்கம் தெரிவிக்குமானால் அதன்காரணத்தை வெளிப்படுத்தவேண்டும். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் அல்லது புனர்வாழ்வு முழுமையாக வழங்கப்படவில்லை என்று தற்போதைய கைதுகளுக்கு அர்த்தம் கற்பிக்க முயல்வார்களாயின் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாக சுதந்திரமாக நடுமாடும் புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தான் என்ன? அதுதொடர்பிலும் வெளிப்படுத்தி நல்லாட்சி நடைபெறுகின்றது என்பதனை நிருபிக்க வேண்டும்.

அதனை விடுத்து உரிமைப்போராட்டத்தை நிராகரித்தன் விளைவால் கடந்த காலத்தில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு என்ற பெயரில் சிறைவாசம் அனுபவித்து விடுதலையானவர்கள் தற்போது வாழ்வாதார போராட்டத்தில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் நல்லாட்சியிலும் கைது செய்யப்படுவதனை ஒருபோதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அந்த கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

N5