செய்திகள்
அரசியல் கைதிகளைச் சந்திக்க கொழும்புக்கு பயணிக்கும உறவுகள்!
நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திப்பதற்காக அவர்களின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு – மகஸின் சிறைச்சாலை நோக்கி பயணமாகியுள்ளனர்.ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அமர்வு நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேச கவனமொன்றை ஈர்த்துக்கொள்ளும் வகையில் பயணத்தை மேற்கொண்டனர்.
‘உறவுகளுக்குக் கரம் கொடுத்து உயிர்ப்புடன் சிறை மீட்போம்” எனும் தொனிப்பொருளில் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு யாழ். ஊடக அமையத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் நடத்திய ஊடக சந்திப்புக்குப் பின்னர் இந்தப் பயணத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட பஸ்ஸில் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் மேற்கொண்டனர்.
தேசிய சிறைக் கைதிகள் தினம் நாளை செப்டெம்பர் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் இந்தப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.
கொழும்பு – மகஸின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் சிலர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச் சேர்க்கும் வகையில் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், யாழ்ப்பாணம் மாநகர பிரதி மேயர் து.ஈசன், யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் யாழ். ஊடக அமையத்துக்கு வருகை தந்து பயணத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்கள் சென்று வருவதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை கனேடிய தமிழர் பேரவை, யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன், யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஊடாக ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்காகக் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் அவர்களின் உறவுகளை வரவேற்று உணவளித்து வழியனுப்பி வைக்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.
தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளுக்குத் தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் மாலை நேர தேநீர் உபசாரமும் இரவு உணவும் வழங்கி வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா கந்தசுவாமி கோயிலுக்கு வருகைதந்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை வரவேற்று சிறப்பு வழிபாடுகளுடன் உபசரித்து வழியனுப்பும் நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் மற்றும் வவுனியா கந்தசுவாமி கோயில் தர்மகர்த்தா சபை செயலாளர் பா.சுந்தர்ராஜன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
-(3)




