செய்திகள்

அரசியல் செய்தார்களே தவிர எவரும் வறுமையை ஒழிக்கவில்லை : அமைச்சர் அமீர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வறுமையினை பயன்படுத்தி கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்தார்களே தவிர யாரும் அந்த வறுமையினை மாற்றுவதற்கு துணிவுடன் செயற்படவில்லையென சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சமுர்த்தி திணைக்களம் ஊடாக திரியசவிய கடன் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

போர் மற்றும் சுனாமி இயங்கை அனர்த்தங்களைப்பேசிபேசியே நாங்கள் வந்தோம்.அதனால் நாங்கள் எதுவுமற்றவர்களாக மாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த கடன் திட்டத்தினை கொண்டுவந்துள்ளோம்.இந்த மாவட்டத்தில் வறுமை நிலையினை ஒழித்து சிறந்த சமூகத்தினை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த கடன்திட்டமானது ஹம்பாந்தோட்டையிலும் பொலநறுவையிலும் மட்டக்களப்பிலுமே நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. ஹம்பாந்தோட்டையிலும் பொலநறுவையிலும் இந்த கடன் தொகையினை செலுத்தும் காலமாக மூன்று வருடத்தினை வரையறுத்துள்ளனர்.மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு விசேட அமைச்சரவையின் அனுமதியின் கீழ் ஐந்து வருடங்களாக மாற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்வு நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்ற வகையிலேயே புதிய புதிய திட்டங்களை நாங்கள் கொண்டுவருகின்றோம்.

சமுர்த்தி கடன்பெறுவதில் யாரும் சிக்கல்களை எதிர்கொண்டால் அதிகாரிகளுடன் சச்சரவுகளில் ஈடுபடாமல் நேரடியாக அமைச்சுக்கோ,அமைச்சின் செயலாளருக்கோ,ஆணையாளருக்கோ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ,மாகாணசபை உறுப்பினர்களுக்கோ எழுத்துமூலம் தெரிவிக்கமுடியும்.அவ்வாறான பிரச்சினைகளுக்க தீர்வினை வழங்க நாங்கள் தயாராகவுள்ளோம்.

கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் வீதிகள்,பாலங்கள்,கட்டிடங்களைப்பற்றிபேசி உங்களது வாக்குகளைபெறமுயன்றனர்.உங்கள் வாழ்வாதாரத்தினைப்பற்றி பேசவில்லை.வாழ்வாதாரத்தின் மூலம் பிள்ளைகளின் கல்வியை முன்னேற்றுங்கள் என்று பேசவில்லை.மதுபாவனையில் முதலிடம் என்ற பெயரினை மாற்ற அவர்கள் முனையவில்லை.

மட்டக்களப்பு மாவட்ட மக்களை வறுமையிலேயே வைத்து, வறுமையில் மாவட்டம் முதலிடம் என்கின்றதை தேசிய ரீதியில் பேசிக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தினை அசிங்கப்படுத்திக்கொண்டு அரசியல் செய்தார்களே தவிர உங்களது வறுமை நிலையை மாற்ற துணிவோடு அன்று அவர்கள் செயற்பட்டிருந்தால் இவ்வாறான நிகழ்வு செய்வதற்குரிய தேவை எழுந்திருக்காது.

தமிழ் மக்கள் அரசியலினால் ஏமாற்றப்பட்டவர்கள்,போராட்டத்தினால் நொந்துபோனவர்கள்,சுனாயினால் ஏமாற்றப்பட்டு நொந்துபோனவர்கள்.பல்வேறு ஆசைகளைக்கொண்டிருந்தாலும் பல சங்கடத்துடன் வாழ்ந்துவருகின்றீர்கள்.கையில் பணம் இல்லாத நிலையே இதற்கு காரணம் ஆகும்.

கொஞ்சம் கொஞ்சம் பெற்ற பணத்தினையும் போதையில் இழந்தவர்களாக நாங்கள் உள்ள நிலையிலேயே இந்த கடன் வழங்கப்படுகின்றது.பெண்கள் இந்த பணத்தினைக்கொண்டு குடும்பத்தினை முன்னேற்றவேண்டும் என்ற வைராக்கியத்துடன் எடுத்துச்செல்லவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையினை ஒழிக்கவேண்டும் என்பதிலும் மதுபாவனையினை ஒழிக்கவேண்டும் என்பதிலும் தாய்மார் அதிகளவு அக்கறை செலுத்தவேண்டும்.வறுமையின் கோரப்பிடியை சுமப்பவர்கள் பெண்களாகும்.

இந்த பிரதேசத்தில் உள்ள மக்களின் கண்ணீரை துடைப்பதற்கான சந்தர்ப்பம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு கிடைத்துளளது.இந்த மாவட்டத்தில் வாழ்வாதார ரீதியான மாற்றம் ஏற்படவேண்டுமானால் சமுர்த்தி அதிகாரிகளுக்கும் அதில் பங்கு இருக்கின்றது.

IMG_0004 IMG_0007 IMG_0017 IMG_0019