செய்திகள்

அரசியல் செய்வதற்கு தொழிற்சங்கங்களை உருவாக்கும் அரசியல்வாதிகள்! பெ. இராஜதுரை எம்.பி உரை

அண்மையில் லிந்துலை அக்கரகந்தை தோட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பெ.இராஜதுரை அன்று மக்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டு செயற்பட்டபோதும் இன்று அரசியல்வாதிகள் தொழிலாளர்களின் தொழிசங்க பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தொழிற்சங்கங்களை உருவாக்காமல் தங்களில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே தொழிற்சங்கங்களை உருவாக்கி வருகின்றனர் என குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து மேலும் தெரிவிக்கையில்,

தொழிலாளர்கள் தொழிற்சங்க ரீதியாக பிரிந்திருப்பது மற்றும் விரும்பிய தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் பெற்றிருப்பது தொழிற்சங்க ஜனநாயகத்தையும், மக்களின் அடிப்படை உரிமையும் உறுதிப்படுத்துகின்றது.

இதனை அடிப்படையாகக் கொண்டே தோட்டங்களில் பல தொழிற்சங்கங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆரம்பக்காலத்தில் தொழிலாளர்களின் நலனை கருத்திற்கொண்டு பல தொழிற்சங்கங்கள் தோற்றம் பெற்றதோடு அவை எதற்கு உருவாக்கப்பட்டதோ அதனை இன்றுவரையும் சிறப்பாக செய்துகொண்டு இருக்கின்றன.

ஆனால் அண்மைக்காலத்தில் சில தொழிற்சங்கங்கள் மலையக தொழிலாளர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன. அவை உண்மையிலேயே மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றதா என்பது கேள்விக்குறியே.

நாங்கள் குறிப்பிட்டதுபோல இது அரசியல்வாதிகள் தங்களின் அரசியலை செய்வதற்காக தோட்டப்புறங்களில் பயன்படுத்தும் ஒரு வழியாக உள்ளது.

அதேபோல் அது பணத்தை சம்பாதிப்பதற்கான ஒருவழியாகவும் இவர்களால் பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு தொழிலாளியும் வேலைக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும், சம்பளம் அதிகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாதாந்தம் 150 ரூபாவை தொழிற்சங்க சந்தாவாக கட்டாயம் செலுத்திவருகின்றனர்.

ஆனால் இதன் மூலம் மக்களுக்கு என்ன சேவைகள் செய்யப்படுகின்றன என்பது எங்களுக்கு விளங்கவில்லை. இது நல்ல விடயம் அல்ல.

அரசியல்வாதிகள் இதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டும் என்பதோடு மக்கள் இவ்விடயத்தில் விழிப்படைய வேண்டும்.

அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசாங்கம் சில நிதி ஒதுக்கீடுகளை செய்கிறது. இதனைக் கொண்டு செய்யப்படும் வேலைகளை தமது தொழிற்சங்கம் செய்ததாக காட்ட முயற்சிப்பது தவறான விடயமாகும். மக்களின் பணத்தில் செய்யப்படும் வேலைத்திட்டங்களை தொழிற்சங்க சாயம் பூசுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

இதன் பயன்களை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதே உண்மையான அரசியல்வாதியின் கடமையாகும். இதனையே நாங்கள் செய்துவருகின்றோம். இதனால் எங்களை பல அரசியல்வாதிகள் எதிரிகளாகவும் பார்க்கின்றனர். எனவே, மக்கள் விழிப்படைவதன் மூலமே இந்த நிலையில்

ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது எனது நம்பிக்கையாகும். இதற்காக நாம் அனைவரும் தொழிற்சங்க பேதமின்றி ஒன்றிணைய வேண்டும். இதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றோம் என்றார்.