செய்திகள்

அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் பயன்படுத்தவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் நியாயமான அரசியல் தீர்வு ஏற்பட்டு, அனைவரும் கௌரவமாகவும் சுயமரியாதையுடனும் சமாதானமாக வாழக்கூடிய வகையில் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு இருந்த சந்தர்ப்பத்தை இந்த அரசாங்கம் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சர்வாதிகாரப் போக்கில் செல்லும் நாட்டை ஜனநாயகப் பாதைக்கு கொண்டுவர அனைத்து இன மக்களும் பொது எதிரணி வேட்பாளருக்கு முழுமையாக வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அரசாங்கம் கூறும் குற்றச்சாட்டுகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

“பிளவுபடாத இலங்கைக்குள் நியாயமான நிரந்தரமான நடைமுறைப்படுத்தக் கூடியதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. இதனை நாம் போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு முதல் கூறிவருகிறோம். இது நாட்டுக்கு மாத்திரமல்ல உலகுக்கும் தெரிந்த விடயம். இதுவே எங்களுடைய நிலைப்பாடும். எனவே, இரகசிய உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டிய தேவை எமக்கில்லை.

இந்த நாட்டில் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு முன்னர் அவ்விடயம் தொடர்பான முழு விடயங்களும் நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் தெரியவேண்டும். அவ்வாறு அனைத்து விடயங்களும் சகல மக்களும் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் தான் நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வை பெறமுடியும் என்பது எமது அசைக்கமுடியாத நம்பிக்கை. அதுவே எங்களுடைய எண்ணமும்.

எனவே, பொது எதிரணியுடனோ அல்லது வேறு எவருடனுமோ இரகசிய ஒப்பந்தம் செய்ய வேண்டுமென்ற தேவையோ அல்லது நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டுமென்ற தேவையோ எமக்கில்லை. அதேபோல் இந்த நாடு எங்களுக்கும் சொந்தமானது. எனவே, இந்நாட்டை சர்வதேசத்துக்கு காட்டிக்கொடுக்க வேண்டிய தேவை எமக்கில்லை. இதனை நாட்டு மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த நாடு சர்வாதிகார போக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது தடுக்கப்பட்டு ஜனநாயகம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய அவசர சூழ்நிலை ஒன்று இன்று உருவாகியுள்ளது. இதனை நாம் கண்டுகொள்ளாமல் தட்டிக்கழிப்போமேயானால் இந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாமல் போகும்.

எனவே, தங்களுடைய சுயநல தேவைகளுக்காக பிரசார மேடைகளில் ஏறி கூட்டமைப்பின் மீதும் பொது எதிரணி மீதும் தேவையற்ற கட்டுக்கதைகளை கூறும் அரசாங்கத்தின் கருத்துகளை யாரும் நம்ப வேண்டிய தேவையில்லை.

இந்த நாடு எங்களுடைய நாடு. எங்களுடைய நாட்டை நாம் சர்வதேசத்துக்கு காட்டிக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. இந்த நாட்டிற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஒரு முடிவு எடுக்கப்படுமாகவிருந்தால் அது இந்த நாட்டினுடைய அனைத்து இன மக்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டு அதனூடாகவே பெறப்படும் என்பதை தெட்டத் தெளிவாகவும் அறுதியாகவும் கூறிவைக்க விரும்புகிறேன்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இந்த நாட்டில் நியாயமான அரசியல் தீர்வு ஏற்பட்டு, நாட்டில் வாழ்கின்ற அனைவரும் கௌரவமாக சுயமரியாதையுடன் சமாதானமாக வாழக்கூடிய வகையில் ஒரு நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு இருந்த சந்தர்ப்பம் பயன்படுத்தப்படவில்லை.

எனவே, எதிர்வரும் காலங்களில் அந்த நிலைமை மாறவேண்டும். அந்த நிலைமை மாறவேண்டுமாகவிருந்தால் தற்போதைய அரசு தொடர்ந்தும் இருக்க முடியாது.

எனவே, இவற்றையெல்லாம் மக்கள் தெளிவாக புரிந்துகொண்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும். அந்த வாக்களிப்பு வீதம் கூடுதலாக இருக்கவேண்டும். அந்த வாக்குகள் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கான வாக்குகளாக அமைய வேண்டும்.