செய்திகள்

அரசியல் தீர்வுக்கு அரசு விரைந்து செயற்பட வேண்டும்: தமிழரசுக் கட்சி

தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு தொடர்பில், இலங்கையின் புதிய அரசு தாமதமின்றி விரைந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு ஏற்றுக் கொள்வதாகவும் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் புதிய அரசு அமைந்த பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று முதல் தடவையாக வவுனியாவில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

காணிகளை விடுவித்தல், அரசியற் கைதிகளை விடுவித்தல், காணாமற் போனவர்கள் தொடர்பில் நடடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு, தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மைத்திரி அரசை வலியுறுத்தியுள்ளது.

இனப் பிரச்சினை தீர்வு சம்பந்தமாக, ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய அரசியல் தீர்வு தொடர்பில் புதிய அரசு தாமதமின்றி உரிய நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும். மேலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அங்கீகரித்து ஏற்றுக் கொள்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.