செய்திகள்

அரசியல் மாற்றத்தை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை: டக்ளஸ் தேவானந்தா

புதிய அரசு அமைந்ததும் நிறைவேற்று சபையொன்றை அமைத்து தமிழ் மக்களது பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்று கூறியவர்கள் இப்போது தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கத்துவமாக இருந்து கொண்டும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக வாய்திறக்காமலே இருப்பதை நாம் கண்டிக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

“உண்மையான மாற்றம்” என்ற தொகுதிவாரியாக சந்திக்கும் நிகழ்வின் தொடர்ச்சியாக இன்று மானிப்பாயில் நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு மேலும் அவர் உரையாற்றுகையில்,

புதிய அரசாங்கத்தோடு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கூட்டமைப்பினர் எதை பேசினார்கள். எதை செய்ய முடியாமல் போனது என்பது குறித்து தமிழ் மக்களுக்கு அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

தமது அரசு என்று கூறும் கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கான ஒரு கோரிக்கையைக் கூட உட்புகுத்தி செயற்படுத்த முடியாமலும் தென்னிலங்கையின் தற்போதைய அரசியல் சூழலை தமிழ் மக்களுக்கு சார்பாக அணுகாமலும் இருப்பது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

வாய்ப்புக்களை தட்டிக்கழிப்பதும் அதைக் கையாள்வதற்கு முயலாமல் இருப்பதும்  கூட்டமைப்புக்கு அரசியல் இலாபங்களை பெற்றுக் கொடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அரசியல் பின்னடைவுகளையும் அழிவுகளையுமே ஏற்படுத்தி வந்தது.

கூட்டமைப்பினரின் தற்போதைய தேசிய பிரச்சினை என்பது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் அதை தலைமை தாங்கும் நானுமாகவே என அவர்கள் நினைக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் எமக்கு கிடைக்கப் பெற்ற அரசியல் அதிகாரங்களுக்கு அமைய எம்மாலான அனைத்தையும் எமது மக்களுக்கும் எமது பிரதேசத்திற்கும் செய்துள்ளோம்.

ஆனாலும், எமது மக்களின் வாக்குகளை அபகரிப்போர் தொடர்ந்தும் தமிழ் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றார்கள்.

மாற்றத்துக்காக தமிழ் மக்களை வாக்களிக்கச் சொன்னவர்கள் அந்த மாற்றத்தை தமிழ் மக்களும் அனுபவிக்க வழிசெய்யாமல் பிரச்சினைகளை தீராப்பிரச்சினையாக வைத்திருக்கவே முயற்சிக்கின்றார்கள்.

இந்த நிலையிலிருந்து தமிழ் மக்கள் உண்மையான மாற்றத்துக்கு முன்வரவேண்டும். அத்தகைய மாற்றத்துக்கு தலைமை கொடுப்பதே ஈ.பி.டி.பியின் நோக்கமாகும்.  எனவே தமிழ் மக்கள் எதிர்காலத்தில் வாய்ப்புகள் கிடைக்கும் போது உண்மையான மாற்றத்துக்கு ஆதரவாக அணிதிரள வேண்டும்.

உண்மையான மாற்றத்துக்காக பாடுபடுகின்றவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்.

எமது இந்த வேலைத்திட்டத்தை தோழர்களும், ஆதரவாளர்களும், கட்சி செயற்பாட்டாளர்களும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். முழுமுயற்சியோடு மக்களை சந்திப்பதை முன்னெடுக்க வேண்டுமென்றும் செயலாளர் நாயகம் அவர்கள் கூறினார்.

கட்சி செயற்பாட்டாளர்கள் சந்திப்பில் கட்சியின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குகேந்திரன் (தோழர் ஜெகன்) மானிப்பாய் பிரதேச அமைப்பாளர் வெலிச்ஜோர் அன்ரன் ஜோன்சன் (ஜீவா) ஆகியோர் உடனிருந்தனர்.