தலைப்பு செய்திகள்

இந்தியா தமிழர் பிரச்சினையை எவ்வாறு பார்க்கிறது?

இந்தியா தமிழர் பிரச்சினையை எவ்வாறு பார்க்கிறது?

யதீந்திரா

ஈழத் தமிழ் தலைமைகள் இந்தியா தொடர்பில் எப்போதுமே சாதகமான பார்வையே கொண்டிருக்கின்றனர். இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சற்று மாறுபட்டிருந்த போதிலும் கூட, இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதில் அவர்களிடமும் மாறுபட்ட அபிப்பிராயம் இருந்ததில்லை. இதன் காரணமாகவே, தன்னுடைய இறுதி மாவீரர்தின உரையில் கூட, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், இந்தியா தொடர்பில் உருக்கமாக பேசியிருந்தார். தாம் இந்தியாவிற்கு எதிரானவர்கள் அல்ல என்பதை விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக கூறிவந்திருக்கின்றனர். இப்போதும் தமிழ் தலைமைகள் இந்தியா தொடர்பில் சாதகமான பார்வையே கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் தலையீடு இன்றி ஈழத் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெற்றிகொள்ள முடியாது என்பதில் எவரிடமும் மாறுபட்ட பார்வைகள் இல்லை. ஆனால் தமிழர் விவகாரத்தை இந்தியா எவ்வாறு பார்க்கிறது என்பதில் தமிழ் தலைவர்கள் மத்தியில் கேள்விகள் உண்டு. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பலரையும் சந்தித்தது போன்று கூட்டமைப்பையும் சந்தித்திருந்தார். ஆனால் அந்த சந்திப்பு இடம்பெற்ற முறை தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர்கள் மகிழ்சியடையவில்லை. மோடி தனது விஜயத்தை நிறைவுசெய்து கொண்டு வெளியேறும் தறுவாயில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே கூட்டமைப்பை சந்தித்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது இலங்கைத் தீவின் ஒரு தேசிய இனமான தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரதான அரசியல் சக்தியாகும். அவ்வாறானதொரு அமைப்புடனான சந்திப்பை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடத்தியன் ஊடாக, மோடி எதனை குறிப்பாக உணர்த்த முற்படுகின்றார்? இந்தியா முன்னரைப் போன்று தமிழர் விவகாரத்தை ஒரு முக்கிய விடயமாக பார்க்கவில்லை என்பதையா அல்லது இந்தியாவின் முதன்மையான விடயங்களில் தமிழர் விவகாரம் இல்லை என்பதை தமிழர்களுக்கு உணர்த்த முற்படுகின்றாரா? இதில் எது – ஒன்றா அல்லது இரண்டுமா?

தமிழர் அரசியல் வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போமானால், ஒரு விடயம் வெளிப்படும். அதாவது, தங்களை அதிகம் படித்தவர்களாக கருதிக்கொண்ட மிதவாதிகளும் சரி, ஆயுத பலத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்த விடுதலை இயக்கங்களின் தலைவர்களும் சரி, ஆரம்பத்தில் இந்தியாவை சரியாக விளங்கிக் கொண்டிருக்கவில்லை. இந்தியா தங்களின் தனிநாட்டுக் கோரிக்கையுடன் நிற்குமென்றே அவர்கள் அனைவரும் நம்பினர். அவ்வாறு நம்புவதற்கான காரணங்களும் அன்றைய சூழலில் மிகவும் பலமாகவே இருந்தது. ஏனெனில் இலங்கையில் தனிநாடு கோரி போராடிய பிரதான இயக்கங்கள் அனைத்தையும் இந்தியா ஆதரித்தது. அவர்களுக்கு பயிற்சியளித்து, அவர்களை இராணுவ ரீதியாக பலப்படுத்தியது.

ஆரம்பத்தில் இந்தியாவின் பயிற்சித் திட்டத்தினுள் விடுதலைப் புலிகள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை ஆனால் எப்பாடுபட்டேனும் அதில் விடுதலைப் புலிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதில் பிரபாகரன் உறுதியாக இருந்த கதை தொடர்பில் அன்ரன் பாலசிங்கம் தனது ‘போரும் சமாதானமும்’ நூலில் விபரித்திருக்கிறார். சமாதான ஒப்பந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவருடன் இந்தியா தொடர்பில் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் என்னிடம் ஒரு சுவார்சயமான விடயத்தை பகிர்ந்துகொண்டார். இன்று நீங்கள் இந்தியாவிடம் பெறும் பயிற்சியை இந்தியாவிற்கு எதிராகவே பயன்படுத்த வேண்டியும் வரலாம் என்று, தங்களிடம் பொன்னம்மான் அப்போதே கூறியதாகக் குறிப்பிட்டார். ஆரம்பத்தில் இந்தியா தொடர்பில் மாறுபட்ட பார்வையை கொண்டிருந்த உமாமகேஸ்வரன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) கூட இந்தியாவின் பயற்சியை நிராகரிக்கவில்லை. தனிநாடு கோரி போராடுகின்ற இயக்கங்களை இந்தியா ஆதரிக்கிறதென்றால், அதன் பொருள் இந்தியா தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கிற என்பதுதானே! இப்படி ஒருவர் சிந்திக்கக் கூடிய அளவிற்கே அன்றை நிலைமைகள் இருந்தன.

ltte-training-camp-in-tamil-nadu

1985இல் திம்பு பேச்சுவார்த்தை இடம்பெறும்வரையில், தனிநாடு தொடர்பில் அனைத்து இயக்கங்களிடமும் தனிநாடு தொடர்பில் அதீத நம்பிக்கை நிலவியது. இதற்கு முன்னரே இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் கூட, அந்த நம்பிக்கையை அவர்கள் கைவிடவில்லை. இது தொடர்பில் திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்டவர்களின் ஒருவரான புளொட் தலைவர் சித்தார்த்தனிடம் 1983இல், அப்போது இந்திராகாந்தியின் ஆலோசகராக இருந்த ஜ.பார்த்தசாரதி உறுபடக் கூறியிருகிறார். அதாவது இந்தியா ஒரு போதுமே தனிநாடு ஒன்றை ஆதரிக்காது. இதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஆயினும் நிலைமைகள் மாற்றமடையலாம் என்னும் வகையிலேயே இயங்கங்களின் தலைவர்கள் சிந்தித்தனர். ஆனால் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கான தயாரிப்புக்கள் இடம்பெற்றபோது, இந்த விடயம் பகிரங்கமானது. இந்தியா தனிநாடு ஒன்றை ஒரு போதுமே ஆதரிக்காது என்பது மட்டுமன்றி, அவ்வாறான முயற்சியை இந்தியா தனது பலத்தை பிரயோகித்து தடுத்து நிறுத்தும் என்னும் உண்மையையும் அனைவரும் உணர்ந்துகொண்டனர். இதனை அறிந்து கொண்ட போதுதான் அன்றிருந்த பிரதான இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், டெலொ ஆகிய இயக்கங்கள் தமிழீழ நிலைப்பாட்டை கைவிட்டு, ஜக்கிய இலங்கைக்குள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு தொடர்பில் சிந்திக்கத் தலைப்பட்டனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவின் கரிசனைகளை புறம்தள்ளி தனிநாட்டுக்கான போராட்டத்தை தொடர்ந்தது. பொன்னம்மான் கூறியது போன்றே இந்தியாவிடம் பெற்ற பயிற்சியை இந்தியாவிற்கு எதிராகவே விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர். அந்தப் போராட்டமும் வெற்றிபெறவில்லை.

இந்த இடத்தில்தான் இந்தியாவை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்னும் கேள்வி எழுகிறது? இலங்கையின் உள் விவகாரங்கள் எந்த வகையிலும் தன்னுடைய கையை மீறிச் சென்றுவிடக் கூடாதென்று விரும்பும் இந்தியா, இன்றைய இலங்கையின் உள்விவிவகாரங்கள் தொடர்பில் எத்தகைய பார்வையை கொண்டிருக்கிறது? இதனை எவ்வாறு நாம் அறிந்து கொள்வது? இப்படியான கேள்விகள் தமிழ்ச் சூழலில் உண்டு. அண்மையில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரும், ஒரு காலத்தில் இந்தியாவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவருமான ஒருவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு முக்கியமான விடயத்தை குறிப்பிட்டார். அந்த உரையாடலின் பின்னர்தான் இவ்வாறானதொரு தலைப்பு தொடர்பிலும் நான் சிந்திக்க நேர்ந்தது. இந்தியா தனிநாட்டுக்கு ஆதரவாக இல்லையென்று தெரிந்தபோது, இது தொடர்பில் நாங்கள் அவர்களுடன் விவாதித்தோம். அப்போது அவர்கள் பக்கத்திலிருந்து ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. இலங்கையை இரு துண்டுகளாக்கினால், வடகிழக்கு எங்களுடன் நிற்கும் ஆனால் தெற்கோ சீனாவுடன் நிற்கும். இந்தியாவிற்கு சில கிலோமீற்றல் தொலைவில் சீனா நிலைகொள்வதை எவ்வாறு அனுமதிப்பது? இந்த விடயத்தையே இப்பத்தி, தமிழ் விவாத பரப்பிற்கு மட்டுமன்றி இந்திய தரப்பினரின் பார்வைக்கும் சமர்பிக்கின்றது. இந்தியாவின் பார்வை மிகவும் சரியாக இருக்கலாம் ஆனால் இன்று நாடு ஒன்றாகவே இருக்கிறது ஆனால் சீனா தெற்கில் காலூன்றிவிட்டது. இப்போது இந்தியாவின் முன்னைய மதிப்பீடு தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? நாடு துண்டானால், உடைவுறும் தென்பகுதி, சீனாவுடன் சென்று விடுமென்றால், இப்போதும் தென்பகுதி சீனாவின் பிடிக்குள்தானே சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அதனை இந்தியாவினால் எந்த வகையிலும் தடுத்து நிறுத்த முடியவில்லையே!

மகிந்தவின் ஆட்சியில் தெற்கில் காலூன்றிய சீனா தற்போது ஹம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுக நகரம் என தன்னுடைய காலை அசைக்க முடியாதளவிற்கு வலுவாக ஊன்றிவிட்டது. சீனாவுடன் நெருங்கிச் செல்வதை எப்போதுமே சிங்கள தேசியவாத தரப்புக்கள் ஆதரித்தே நிற்கின்றன ஆனால் இந்தியாவுடன் என்னதான் நட்பாக சிரித்துக் கொண்டாலும் இந்தியாவின் திட்டங்களை எதிர்ப்பதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமா இருக்கின்றனர். ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்தியாவின் திட்டங்கள் ஆமை வேகத்திலேயே நகர்கின்றன. சீனாவின் திட்டங்களை அனுமதித்த பின்னர்தான், இந்தியாவுடன் பேச வேண்டும் என்னும் நிலைமையே தெற்கில் காணப்படுகிறது. சீனாவுடன் நாங்கள் நிற்கிறோம் என்பதைக் காண்பித்தே, தெற்கின் சிங்கள தேசியவாதிகள் ஆற்றுப்படுத்தப்படுகின்றனர். இதுதான் உண்மையான நிலைமை. இவ்வாறானதொரு பின்புலத்தில் இந்;தியா உண்மையில் இலங்கை விவகாரத்தை எவ்வாறு உற்றுநோக்குகின்றது? இதனை எவ்வாறு அறிந்துகொள்வது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளுமே இந்தியாவின் நலன்கள் மீது ஆழமான கரிசனை கொண்டிருக்கும் கட்சிகள்தான். ஒரு காத்திரமான அரசியல் தீர்விற்கு இந்தியாவின் தலையீடு அவசியம் என்பதிலும் எந்தவொரு கட்சிகளுக்கும் இடையில் கருத்து பேதங்கள் இல்லை. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா என்ன கருதுகிறது? எவ்வாறு சிந்திக்கின்றது? இதனை எவ்வாறு அறிந்து கொள்வது? இவ்வாறான கேள்விகளுக்கு எந்தவொரு தலைவரிடமும் பதிலில்லை. இதற்கான பதிலை தேட வேண்டுமாயின் புதுடில்லியை நோக்கி கூட்டமைப்பு அவசியம் பயணம் செய்ய வேண்டும். அங்குள்ள சிந்தனையாளர் குழுமங்கள், இலங்கை விவகாரங்களில் அனுபவமுள்ள ஓய்வுநிலை இராஜதந்திரிகள் ஆகியோருடன் உரையாட வேண்டும். இதன் மூலம்தான் இந்தியா, உண்மையிலேயே தமிழர் பிரச்சினை தொடர்பில் என்ன கருதுகிறது என்பதை அறிய முடியும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *