Search
Monday 24 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இயற்பியல் மெய்ஞான விஞ்ஞான அஞ்ஞானம்

இயற்பியல் மெய்ஞான விஞ்ஞான அஞ்ஞானம்

டாக்டர். சி. யமுனாநந்தா

மீப்பொருள், மீச்சிறுபொருள், புலம் என்பதனை சைவசித்தாந்தம் பதி, பசு, பாசம் என்ற சித்தாந்தத்தில் நோக்குகின்றது. மெஞ்ஞானிகள் இயற்கையைக் காணும் வடிவு சித்தத்தில் உதிக்கின்றது. சாதாரண வாழ்வில் ஒருவருக்கு காலம், வெளியினை உணராத தன்மையினைப் பித்துநிலை சித்தசுவாதீனம் என்பதுபோல் காலம், வெளியினை முற்றாக உணர்ந்தவர்கள் ஞானிகளாகின்றனர்.

அவ்வாறே விஞ்ஞானிகள் இயற்கையைக் காணும் வடிவும் சித்தவெளியிலேயே உள்ளது. இதனை உய்த்தறிதல் என்கின்றோம். சமச்சீர் அச்சுக்களை நோக்குகின்றோம். சைவசித்தாந்தத்தில் இவை அளவையியல் ரீதியாக காட்சிக்கப்படுகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி, விஞ்ஞானத்தின் எல்லைக்கு எல்லை இட்டுக்கொண்டு செல்கின்றது.

பிளந்த மனத்தின் தோற்றப்பாடுகள் விஞ்ஞானத்தையும் உருவாக்கும், மெய்ஞானத்தையும் உருவாக்கும். இரண்டினதும் முடிவு அமைதி அல்லது சாந்தம் அடைதலே ஆகும். நேரடியான சிந்தனைகளும், காரணகாரிய சிந்தனைகளும் பொது வாழ்விற்கு எம்மை இட்டுச் செல்கின்றது. மையப்படுத்திய சிந்தனை எம்மை தியானநிலைக்கு இட்டுச் செல்லும்.

மனப்பிரமையினால் இன்ப துன்பங்களுக்கு அப்பால் நிலைநிறுத்தும் ஆற்றல் சித்தநிலை ஆகும். இது பொதுவாழ்வுடன் மோதும் நிலையே சித்தசுவாதீனம் ஆகும். சித்தநிலையில் இறைசிந்தனையுடன் மட்டும் வாழ்தல் ஆன்மீக அனுபவமாகும். மனப்பிரமையின் காரணகாரிய வடிவங்களாக கணித வடிவங்களும், இறைவடிவங்களும் அமைகின்றன. சூழல்சார்ந்த இவற்றின் விரிவுகளே இயற்பியல் ஆகும். இயற்பியலும் இறையியலும் ஆழ்ந்த சிந்தனையில் ஒன்றிக்கின்றன. இயற்பியல் இதனைக் கோட்பாடுகள் என வரையறுக்கின்றது. இறையியல் ஆன்மீகநிலை தியானநிலை, முத்திநிலை என உணர்த்துகின்றது. வெளியும் காலமும் மனித மனத்தின் உருவாக்கங்களே. இதனைச் சைவசித்தாந்தத்தில் ஆழமாகக் காணலாம். சிவநடனம், ஆறுமுக சுவாமிகளின் திருக்கோலம் இவற்றின் ஆன்மீக உள்ளுணர்வாக வெளிப்பட்டவையே. இதே கருத்துக்கள் பௌத்தசமயத்திலும் சீனர்களின் சமயத்திலும் உள்ளது. பகவத்கீதையில் கிருஸ்ணபகவானின் பிரபஞ்ச சார்புத் தன்மைக்கான எளிய வடிவமே சக்கரம் ஆகும்.

வெளி எனப்படுவது ஒரு வகையான தனிப்படுத்திக் குறிப்பிட்டு பார்க்கும் உளப்பாங்கு அன்றி வேறல்ல என்பதையும் தனக்கெனத் தனிநிலையைக் கொண்டதல்ல. காலமும் ஒரு வகை தனிப்படுத்திப் பார்க்கும் உளப்பாங்கே ஆகும். இவை ஒன்றின் சார்பாக இன்னொன்றை நோக்குவதாக அமைகின்றது. இதனையே விஞ்ஞானத்தின் சார்புக் கோட்பாடுகள் விளக்குகின்றது. நவீன சார்பியல் கோட்பாடுகள் ஆழ்மனதில் தோன்றும் இத்தகைய இயற்பியல் சிந்தனைகளுக்கே வடிவம் கொடுக்கின்றது.

வெளி, காலம் தொடர்பான அளவைகள் புறச்சூழ்நிலையை விபரிப்பதற்கு ஒரு பார்வையாளன் பயன்படுத்துகின்ற மொழியின் கூறுகளே ஆகும் என்பதைச் சார்பியல் கொள்கைகள் வலியுறுத்துகின்றது.

இதனையே சைவசித்தாந்தம் சார்ந்ததன் வண்ணமாக இருப்பான் இறைவன் என்கின்றது. பதி, பசு, பாசம் பற்றிய முப்பொருள் உண்மை இதனைக் கூறுகின்றது.

சார்பியல் கொள்கை நிறைவு செய்யப்படுகிறதா என்பதை அதாவது ஒரு கொள்கையின் சமன்பாடுகள், அளவை, அமைப்புக்கள் அனைத்திலும் ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றதா என்பதனை பரிசோதித்து அறிய வெளி, காலம் இவற்றின் அளவைகள் ஓர் அளவையிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றி அமைக்கக்கூடியதாக அமைய வேண்டும். இதனை மரபுவழி இயற்பியலான சைவசித்தாந்தத்தில் ஆழமாகக் காணலாம். முக்காலமும் உணர்ந்த தவஞானிகள் என்போர் இத்தகையவர்கள். இவர்களின் ஆழ்மனதில் பல்வேறு புலங்களை அல்லது அதிர்வுகளை உணரும் தன்மை உள்ளது. இவர்கள் சாதாரண புலன்களைப் பொருட்படுத்தாது ஆழ்தியானத்தில் இருப்பர்.

நவீன சார்பியல் கோட்பாடுகளின்படி ஒளி அலைகளைவிட வேகமான துணிக்கைகளை (Nano quantum waves) மீசிறிய குவாண்டம் அலைகள் மூலம் அவற்றின் துமிநிலைகள் மூலம் அண்டத்தில் நிகழ்ந்த கடந்தகால நிகழ்வாக தற்கணத்தில் காட்சிப்படுத்த முடியும். அதாவது முன்னே நிகழ்ந்தவற்றை தற்போது காணலாம். ஒளியைவிட வேகமான துணிக்கையை கையகப்படுத்தின் கடந்த காலத்தைக் காட்சிப்படுத்த முடியும். இவற்றிற்கு உரிய தொழில்நுட்பவிருத்தி எமக்கு வெகு அருகில் இல்லை. ஆனால் மெஞ்ஞானத்தில் ஆன்மீகநிலையில், முத்திநிலையில் இது கைவரும். இதனை உணரும் ஞானிகள் அரிது. அவ்வாறு உணரினும் அதனை சாதாரண மக்களுக்கு உணர்த்த மாட்டார்கள். மாறாகச் சாதாரண மக்களைப் பக்குவப்படுத்தவே முனைவர். சோடியம், பொட்டாசியம் அயன்கள் பூவுலகில் எவ்வாறு உயிர்களின் இயக்கத்தில் பங்கு கொள்கிறதோ அவ்வாறு புராண உலகிற்கு நுண்துமிகள் அடிப்படையாக அமையும்.

காலம், வெளி, இவற்றிற்கு இடையிலுள்ள பதார்த்தமான மீச்சிறுபொருள் அதன் இயக்கத்தன்மையும், உயிர்த்தன்மையும், அவற்றிற்கான சக்தியை வழங்கும் அல்லது மீப்பெரும்பொருளின் தன்மை, இவற்றிற்கு இடையிலான புலன்கள் என்பவற்றை இயற்பியலில் பௌதிக விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர். காலம், வெளி, இதன் வடிவம் கணனிக்கோப்புக்கள் அடங்குவதுபோல் ஒரு தளத்தில் ஒரு புள்ளியில் அடங்கலாம். காலம், வெளி இனை வெல்ல உருள்தொழில்நுட்பம் துணைசெய்யும். (Wrap up technology).

இதன் ஆழ்ந்த மனிதச் சிந்தனையாகவே சைவசித்தாந்தத்தின் முப்பொருள் உண்மை விளங்குகின்றது. மீபெரும்பொருளை பதியாகவும், மீச்சிறுபொருளை பசுவாகவும் இவற்றிற்கு இடையிலுள்ள புலன்களைப் பாசமாகவும் சைவசித்தாந்திகள் தமது மெய்யுணர்வை வெளிப்படுத்தி உள்ளனர்.

கணித வடிவமைப்போடு நல்ல பரீட்சயமடையும் பௌதீக விஞ்ஞானிகள், காலம், வெளி தொடர்பான பரிமாணங்களை அளவிடக் கருத்தாக்கங்கள் செய்யும்போது சார்பியல்ரீதியான புலனுணர்வையே பெறுகின்றனர். ஆனால் புலனுணர்வாக, அனுபவமாக முன்வைக்க முடியவில்லை. ஆனால் சைவசித்தாந்தத்தில் இவை மிகவும் எளிமையாக அமைக்கப்பட்டு உள்ளது.

சங்கத்தமிழ் இலக்கியங்களில் கூட சார்பியில் கருத்துக்கள் மிகவும் நயமாகப் பொதிந்து உள்ளது. ‘வெண்டிரை முந்நீர் வளை இய உலகத்து’ என்று பதிற்றுப்பத்தின் நான்காவது பத்தில் உலகம் கடலால் சூழப்பட்டு நிலைத்திருப்பது அதன்கண் வாழ்வார் இசைநடுகற் பொருட்டே என்கின்றது. இங்கு வெண்டிரை என்பது கடல் அலைகளின் காலம் சார்ந்த தன்மையை இலக்கியநயமாக உணர்த்துகின்றது. வளை இய உலகத்து என்பது வெளிசார்ந்த தன்மையை இலக்கியமாக உணர்த்துகின்றது. இசை என்பது ஆயகலைகள் அறுபத்துநான்கின் சார்புத்தன்மையை எமக்கு உணர்த்துகின்றது.

வாழ்வின் சக்கரத்தை சார்பியலாக இலக்கியத்தில் முரசொலியுடன் ஒன்றிப்பதைச் சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஆழமாகக் காணலாம். நிலனதிர் பிரங்கலவாகி வலனேர்பு முழங்கும் என மண்முரசு, மணமுரசு, போர்முரசு, நீத்தார்முரசு என்று வாழ்வின் இயற்பியல் வடிவங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

சங்கத்தமிழ் இலக்கியங்களிலும் மரபுவழிச் சார்புக் கோட்பாடுகள் பொதிந்து காணப்படுகின்றது. இவை காலம், வெளி, நிகழ்வு என்பவற்றை மொழியால் உணர்த்தி நிற்கின்றன.

சங்கத்தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பற்றிய படைப்புக்களுக்கு அப்பால் இயற்பியலின் சார்புக் கோட்பாட்டிற்கான மரபுவழிப் படைப்புக்கள் ஆழமாகப் பொதிந்து உள்ளன.


One thought on “இயற்பியல் மெய்ஞான விஞ்ஞான அஞ்ஞானம்

  1. rathis.kumar.09

    எல்லோரும் இலகுவாகப் புரிவதில் சற்றுச் சிரமம் தென்படுகின்றது, இன்னும் சற்று இலகுபடுத்தி கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *