Search
Saturday 30 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இராஜதந்திர வெற்றியை பெற்றது யார்…?

இராஜதந்திர வெற்றியை பெற்றது யார்…?

-நரேன்-

தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான ஒரு தற்காப்பு யுத்தம் 30 வருடங்களாக இடம்பெற்று 2009 மே முள்ளியவாய்கால் பேரவலத்துடன் மௌனிக்கப்பட்ட போது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் நாட்டில் நிலவிய பயங்கரவாததத்தை தோற்கடித்து விட்டதாக மஹிந்தா அரசாங்கத்தை பாராட்டியிருந்தது. ஒரு தேசிய இனம் தனது உரிமைக்காக மேற்கொண்ட போராட்டத்தை பயங்கரவாத நடவடிக்கையாக இலங்கை அரசாங்கமும் சர்வதேசமும் கருதி செயற்பட்டிருந்தன. 2009 இல் அப்போதைய மஹிந்தா அரசாங்கத்தை பாராட்டிய அமெரிக்க மீண்டும் 2010 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் இடம்பெற்றதை வலியுறுத்தி இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நாவில் தீர்மானங்களையும் கொண்டு வந்தது. மஹிந்தா ராஜபக்ஸ மேற்குலகம் சாராது சீனா சார்பு கொள்கையுடன் தொடர்ந்து செயற்பட்டமை அமெரிக்காவுக்கு சினத்தை ஊட்டியது. அதனாலேயே ஐ.நா தீர்மானங்களின் ஊடாக இலங்கைக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.

இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தி இலங்கை அரசாங்கத்தை தன்பக்கம் இழுப்பதற்காக தமிழர் விவகாரத்தை அமெரிக்காவும் மேற்குலகமும் கையாண்டது. அமெரிக்கானின் கைப்பொம்மையாக இருக்கின்ற ஐ.நாவின் நிலைப்பாடு கூட அவ்வாறே இருந்தது. இலங்கைக்குக்கு மேற்குலகம் கொடுத்த நெருடிக்கடியின் உச்சமாக இந்த நாட்டில் மேற்குலத்தினால் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து மேற்குலக நாடுகளுடன் நெருக்கத்தை கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியையும், சீனா, சோவியற் ரஸ்சியா போன்ற கம்னியூச நாடுகளுடன் உறவைக் கொண்டிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் கைக்கோர்க்கச் செய்த மேற்குலகம் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனை நல்லாட்சி அரசாங்கம் என்றும் தேசிய அரசாங்கம் என்று கூறி வருகிறார்கள்.

தேசிய அரசாங்கம் என்பது பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு இரண்டு கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்து விட்டு அதனை தேசிய அரசாங்கம் என்று கூறுகிறார்கள். மறுபுறம் இந்த நாட்டில் இருக்கும் தேசிய இனங்கள் பாதிக்கப்படாத வகையில் நல்லாட்சி நடைபெறுகின்றதா..? என்ற கேள்வியும் எழுகிறது. இதனால் இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என்பதா அல்லது தேசிய அரசாங்கம் என்பதா என்பது கூட வவுனியாவிற்கான பொருளாதார மத்திய நிலைய இழுபறி போன்றதே. இவ்வாறானதொரு நிலையிலேயே ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கை வந்த போது இலங்கையில் இன்னும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். தொடர்ந்தும் கால நீடிப்புக்களை வழங்க முடியாது என கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அவரே தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு நற்சான்றிதழும் வழங்கியுள்ளார். தற்போது ஐ.நாவின் பொது சபை அமர்வுகள் ஆரம்பமாகிய நிலையில் ஜனாதிபதி தைத்திரிபால சிறிசேன அமெரிக்கா சென்றார். அவரை சந்தித்த ஜனாதிபதி ஒபாமா ஜனாதிபதியை பாராட்டியுள்ளார். அதே நிலையில் அமெரிக்காவின் நிழலில் இயங்கும் ஐ.நா வின் செயலாளர் கூட இலங்கையின் செயற்பாட்டை பாராட்டியுள்ளார். ஓபாமா தனது பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் இலங்கை பிரச்சனையை தாம் தீர்த்து வைத்தது போன்ற ஒரு தோரணையை உருவாக்க முயன்றுள்ளார். மறுபுறம் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து தென்கொரியாவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள பான்கி மூன் தம்மால் இலங்கை பிரச்சனை தீர்க்கப்பட்டதாகவே காட்ட முயல்வாதாக தெரிகிறது. ஆகவே, மேற்குலகம் தம்மால் கொண்டுவரப்பட்ட இலங்கையின் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சியை காப்பாற்றும் முனைப்பில் அதற்கு நற்சான்றிதல் வழங்கி வருகிறது. ஆட்சி மாற்றத்தின் பின் தமிழர் நலன் என்பது முன்னிறுத்தப்படவில்லை. ஆக தமிழரை வைத்து மேற்குலகம் ஆடிய சதுரங்க விளையாட்டு ஆட்சி மாற்றத்தோடு வேறு திசை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது.

மறுபுறம் 1983 ஆம் ஆண்டு இந்த நாட்டில் கலவரம் என்ற பெயரில் தமிழ் மக்களை திரத்தி அடித்து வெளியேற்றி தாக்குதல்களை நடத்தி தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரம் பெற காரணமான ஐக்கிய தேசியக் கட்சியும், 2009 ஆம் ஆண்டு மனித குலமே வெட்கி தலைகுனியும் அளவுக்கு மோசமான போர்குற்ற மனித உரிமை மீறல்களுடன் போரை நடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்த நிலையில் தாம் நாட்டை பாதுகாத்து விட்டதாகவும், சர்வதேச அழுத்தத்தில் இருந்து நாட்டையும் இராணுவத்தையும் பாதுகாத்து விட்டதாகவும் மார்தட்டுகிறது. தமது இராஜ தந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் காட்ட முயல்கிறது.

1977 ஆம் ஆண்டு இந்த நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாக் கொண்டு தனித் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து வடக்கு கிழக்கில் தமிழர் விடுதலைக் கூட்டனி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டனிக்கு எதிராக அதேவேளை தனி ஈழக் கோரிக்கைக்கு ஆதரவாக போட்டியிட்ட சுயேட்சைகள் 62 வீத வாக்குகளை பெற்றிருந்தன. இதன்போது 18 ஆசனங்களைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவர் அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக தெரிவானார். அது பாராளுமன்றத்திலும் எதிர்கட்சியாகவே செயற்பட்டிருந்தது. ஆனால் இன்றைய நிலையில் இலங்கை பாராளுமன்றத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி என அழைக்கப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் எதிர்கட்சித் தலைவராக உள்ளார். தற்போதைய எதிர்கட்சி என்பது அரசாங்கத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றது. அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்ற நிலையிலேயே அது செயற்படுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற ஆயுத வழி வந்த மூன்று பங்காளிக் கட்சிகளினதும் கொள்கைகள் தமிழரசுக் கட்சியின் கொள்கையில் இருந்து வேறுபட்டவை. தமிழ் மக்களின் முன்னுள்ள பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு நான்கு கட்சிகளும் ஒற்றுமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் கட்மைப்பாக பெயரளவில் செயற்பட்டு வருகின்றது. புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்படவுள்ள நிலையில் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சி இருக்கின்றதா? என்ற கேள்வி உள்ளது. மறுபுறம் புதிய அரசியலமைப்பிலும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளதாக தமிழ் மக்களும், புத்திஜீவிகளும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும், ஏனைய தமிழ் கட்சிகளும் கூறிவருகின்றன. இதனால் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசிற்கும், அரசுடன் கைகோர்த்து நற்சான்றிதழ் வழங்கியிருக்கும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதனாலயே மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் அவசியமாகின்றன. ஆனால் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா நாம் அரசாங்கத்துடன் பேசிக் கொண்டிருக்கின்றோம். இதனால் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாம் செயற்பட முடியாது. நாம் அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தம் கொடுத்தால் அது தென்னிலங்கையில் உள்ள பொது எதிரணியினருக்கு வாய்பாக அமைந்துவிடும். இந்த ஆண்டுக்குள் எமக்கு தீர்வு இன்றேல் அது நமது இராஜ தந்திரத்திற்கு கிடைத்த தோல்வியாகும் என தெரிவித்திருக்கின்றார். இந்த இடத்தில் பிரித்தானிய ஏகாபத்தியத்தின் காலப்பகுதியில் ஆளுனர் இர்வினுக்கும், மகாத்மா காந்திக்கும் இடையில் இந்தியாவின் சுதந்திரம் தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்ற போது அங்கு மக்கள் போராட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றமையை நினைவுபடுத்த வேண்டியும் உள்ளது. மக்கள் போராட்டங்கள் தலைமைகள் அரசாங்கத்துடன் பேசுகின்ற போது அதற்கு வலுச் சேர்ப்பதாகவே அமையும். மக்கள் தமது உரிமைசார் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தவும் வாய்ப்பாக இருக்கும். அதனை இராஜதந்திர ரீதியாக தலைமைகள் கையாள வேண்டும். ஆனால் அதைக் கூட செய்ய முடியாத நிலையில் மக்கள் எழுச்சிகளை கட்டுப்படுத்த முனைவது என்பது தமிழினத்தின் சாபக்கேடே.

மேற்குலகம், தான் வெற்றி பெற்றதாகவும் தமது இராஜ தந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் ஆட்சிமாற்றத்தையும், இலங்கையுடனான வெளியுறவு தொடர்புகளையும் காட்டுகிறது. அரசாங்கமும் சர்வதேச விசாரணையை நீத்து போகச் செய்தமை மற்றும் இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பியமை தமது இராஜ தந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக கூறுகிறது. தமிழ் மக்களின் கறைபடியாத மிதவாத தலைமை என்று கூறும் தமிழரசுக் கட்சியும் தற்போதைய அரசை பாதுகாக்கும் நிலையில் இருக்கிறது. ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் கடந்த 60 வருடமாக இருந்தது போன்று இன்றும் இருக்கிறது. காணிவிடுவிப்பு, பௌத்தமயமாக்கல், சிங்கள குடியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போகச் செய்யப்பட்டோர் விவகாரம் என மக்கள் முன்னுள்ள பிரச்சனைகளில் ஒன்று கூட முழுமையாக தீர்க்கப்படவில்லை. இந்த நிலையிலேயே தமிழ் மக்கள் எழுக தமிழ் போன்ற பேரணிகளாக வீதியில் இறங்க தயாராகிவிட்டார்கள். இதற்கு தமிழ் மக்கள் நலன்சார்ந்து அவர்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொண்ட தரப்புக்கள் ஆதரவும் வழங்கி வருகின்றன. தமிழ் மக்களை முன்னிறுத்தி நகர்ந்த மேற்குலம், தமிழ் மக்களிடம் வீரவசனம் பேசி வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி என்பனவும், தமிழ் மக்களுக்கு அநீதி இழைந்த தென்னிலங்கை சக்திகளும் தற்போது ஒரு சமாந்தர நிலையில் நின்று பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதாக காட்ட முயல்கின்றன. ஆனால் இன்றும் மக்கள் தமது உரிமைக்காகவும், தமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும் போராட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். இவ்வாறான நிலையில் தமிழரசுக் கட்சியின் இராஜ தந்திரம் என்பது என்ன…? அது தமிழ் மக்கள் நலனிற்கு அப்பாற்பட்டதா என்ற சந்தேகமே தற்போது எழுகிறது. இதற்கு 2017 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி என்ன சொல்லப் போகின்றது என்பதே எல்லோரதும் எதிர்பார்பாகும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *