Search
Thursday 26 April 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இரு உலகப்பார்வைகளின் மோதல்: மக்ரோனின் வெற்றி ஐரேப்பாவில் ஜனரஞ்சக தேசியவாத அலையைத் தடுத்துநிறுத்த உதவுமா?

இரு உலகப்பார்வைகளின் மோதல்: மக்ரோனின் வெற்றி ஐரேப்பாவில் ஜனரஞ்சக தேசியவாத அலையைத் தடுத்துநிறுத்த உதவுமா?

வீரகத்தி தனபாலசிங்கம் 

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக இமானுவேல் மக்ரோன் கடந்த ஞாயிறன்று  பதவியேற்றார். மிதவாத அரசியல் கொள்கைகளைக் கொண்ட 39 வயதான அவர் நெப்போலியன் போனபார்ட்டிற்குப்பிறகு பிரான்ஸில் ஆட்சியதிகாரத்துக்கு வருகின்ற மிகவும் இளவயதுத்தலைவர் என்ற பெருமைக்குரியவராகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலின் இரண்டாவது சுற்றில் தீவிர வலதுசாரியான தேசிய முன்னணியின் தலைவி லீ பென்னை தீர்க்கமான முறையில் தோற்கடித்து மக்ரோன் கண்ட வெற்றி உலகின் பெரும்பாலான தலைநகரங்களுக்கு ஆறுதலைத் தந்ததாக உலகின் முக்கியமான ஊடகங்கள் குறிப்பாக முன்னணிப்பத்திரிகைகள் அபிப்பிராயம் வெளியிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருந்தால் அது ஐரோப்பாவுக்கு பேரனர்த்தமாகப் போயிருக்கும் என்றும் மக்ரோனின் வெற்றி கொண்டாட்டத்துக்குரியதல்ல, நிம்மதியடைவதற்குரியது என்றும் லண்டன் கார்டியன் பத்திரிகை அதன் ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பெரும்பான்மையான பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்த கடந்த வருட ஜூன் மாதத்தைய சர்வஜன வாக்கெடுப்பு (பிரெக்சிட்), அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்குலகெங்கும் சிறுபான்மையினத்தவர்களுக்கும் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளுக்கும் எதிரான உணர்வுகளைக்கொண்ட ஜனரஞ்சக தேசியவாத அரசியல் (Populist Nationalism) அலை வியாபிப்பதாக அஞ்சப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால் அதன் மீது முன்னரைக்காட்டிலும் உலகின் கவனம் குவிந்திருந்தது.

Macron
ஐரோப்பா பெரும் குழப்பநிலைக்கு  உள்ளாகியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. பொருளாதார மந்தநிலை, கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பேணிக்காத்து மேலும் பலம்பொருந்தியதாக்க வேண்டுமென்பதில் அதன் உறுப்பு நாடுகள் பலவற்றின் மத்தியில் குறைந்துவருகின்ற ஆர்வம் போன்ற காரணிகளினால் ஐரோப்பாவில் தீவிர தேசியவாத அரசியல் கட்சிகள் செல்வாக்குப்பெற ஆரம்பித்திருக்கின்றன. இந்த தேசியவாதக் கட்சிகள் அவற்றின் நாடுகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பலவற்றுக்கு வெளிநாட்டுக்குடியேற்றவாசிகளையும் உலகின் பல பாகங்களிலிருந்து குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து வருகின்ற அகதிகளையும் பிரதான காரணமாகக்காட்டி தேசியவாத உணர்வு என்ற போர்வையில் படுமோசமான இனவெறியைத்துண்டிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றியையும் அதற்கு முன்னதாக பிரெக்சிட்டையும்  ஐரோப்பாவில் உள்ள தாராளவாதிகள் ( Liberals) மிகப்பெரிய ஆபத்தான சமிக்ஞைகளாக நோக்கினார்கள். ஐரோப்பியர்கள் தங்கள் நாடுகளில் அண்மைக்காலங்களில் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்ற தேர்தல்களை மிகுந்த பதற்றத்துடனேயே எதிர்கொண்டார்கள். ஆஸ்திரியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தீவிர வலதுசாரி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் இறுதியில் அவர் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். அடுத்து நெதர்லாந்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக்கட்சி இரண்டாம் இடத்துக்கே வரக்கூடியதாக இருந்தது. இப்போது நடந்து முடிந்த பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலுக்குப்பிறகு இன்னும் ஒருசில மாதங்களில் ஜேர்மனியில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஐரோப்பாவின் பொருளாதார வல்லரசாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தை உறுதியாக ஆதரிப்பதுடன் அந்த ஒன்றியத்தை தளர்வடையச் செய்யக்கூடிய எந்தவொரு முயற்சியையும கடுமையாக எதிர்க்கின்ற நாடாகவும் விளங்குகின்ற ஜேர்மனியில் தற்போதைய அதிபர் அஞ்செலா மெர்கெலின் எதிர்கால அரசியல் அத்தேர்தலில் தீர்மானிக்கப்படவிருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க அகதிகளை பெரும் எண்ணிக்கையில் அனுமதிக்கின்றமைக்காக ஜேர்மனிய தீவிர வலதுசாரிக்கட்சிகளினதும் நவநாஜிக் குழுக்களினதும் கடுமையான கண்டனங்களுக்காளாகியிருக்கிறார் அஞ்செலா மெர்கெல் என்பது குறிப்பிடத்தக்கது.

Macron 2

இத்தகையதொரு பின்புலத்திலேயே பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் மக்ரோனின் வெற்றியின் முக்கியத்துவத்தை நோக்கவேண்டும். பிரான்ஸின் நவீன வரலாற்றிலேயே இரு பிரதான அரசியல் கட்சிகளான சோசலிசக் கட்சியும் மத்திய வலது போக்குடைய குடியரசுக் கட்சியும் ஜனாதிபதி தேர்தலின் முதற் சுற்றிலேயே போதியளவு வாக்குகளைப் பெறமுடியாத நிலையில் இரண்டாம் சுற்றுக்கு வரமுடியாமல் போனது இதுவே முதற்தடவையாகும். அத்துடன் பதவியில் இருக்கும் ஜனாதிபதி அடுத்த தடவையும் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டதும்  பிரான்ஸின் அண்மைக்கால வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும். அபிப்பிராய வாக்கெடுப்புக்களில் தனது சோசலிசக் கட்சியின் செல்வாக்கு படுமோசமாக வீழ்ச்சியடைந்ததை அறிந்துகொண்ட ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹோலண்ட் மீண்டும் தேர்தலில்  போட்டியிடாதிருக்கத் தீர்மானித்தார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் பிரெஞ்சு மக்களினால் அறியப்படாதவராக இருந்த வங்கியாளரான மக்ரோன் 2014 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஹோலண்டினால் அவரது அரசாங்கத்தின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். கடந்த வருடம் அப்பதவியை இராஜினாமா செய்த மக்ரோன் முன்னேற்றம் ( En Marche! -Forward) என்ற பெயரில் கட்சியொன்றை ஆரம்பித்தார். அந்தக் கட்சியில் இப்போது 270,000 உறுப்பினர்களே இருப்பதாக கடந்த வாரச் செய்திகளின் மூலமாக அறியக்கூடியதாக இருந்தது. பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக்கூட கொண்டிராத கட்சியின் தலைவர் அதை ஆரம்பித்த அடுத்த வருடமே நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு இன்று பதவியேற்கிறார் என்பது கவனிக்கத்தக்கதாகும். மக்ரோன் மிகுந்த விவேகமும் சிறந்த நாவன்மையும் கொண்டவர் என்று கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றில் மக்ரோனுக்கு 66 சதவீத வாக்குகளும் லீ பென்னுக்கு 34 சதவீத வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. முதல் சுற்றுத் தேர்தலில் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட குடியரசுக் கட்சி வேட்பாளரும் சோசலிசக் கட்சி வேட்பாளரும் ஏனைய இடதுசாரி வேட்பாளர்களும் இரண்டாவது சுற்றில் மக்ரோனுக்கு தங்களது ஆதரவை அளித்தார்கள். லீ பென்னுக்கு எதிரான மக்ரோனின் தீர்க்கமான வெற்றி அந்த வேட்பாளர்களின் ஆதரவு இல்லாமல் சாத்தியமாயிருக்காது. மக்ரோனை வெற்றிபெற வைக்கவேண்டுமென்ற முனைப்பை விடவும் லீ பென் வெற்றியடைந்துவிடக்கூடாது என்ற முனைப்பே மேலோங்கியிருந்தது என்று கூறலாம்.
Macron 3
பிரெஞ்சு மக்கள் அரசியல் வர்க்கம் மீது பெரும் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள் என்பது தேர்தலின் மூலமாக தெளிவாக வெளிக்காட்டப்பட்டிருக்கிறது. அதாவது 40 வருடங்களுக்கும் அதிகமான காலகட்டத்தில் நடந்திருக்கக்கூடிய ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இத்தடவையே மிகவும் குறைவான எண்ணிககையில் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்கள். வாக்காளர்களில் அனேகமாக மூன்றில் ஒரு பங்கினர் மக்ரோனுக்கோ அல்லது லீ பென்னுக்கோ வாக்களிக்கவில்லை. ஒரு கோடி 20 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. 42 இலட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சீட்டுக்களைப் பழுதாக்கியிருக்கிறார்கள். தேர்தல்பிரசாரங்கள் பிரெஞ்சு மக்களைப் பெரிதும்  பிளவு படுத்தியிருக்கின்றன. ஆட்சியதிகார வர்க்கத்தின் மீது கடுமையான கோபம் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது உலகமகா யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் ஜனாதிபதி தேர்தலின் முதற் சுற்றிலேயே பாரம்பரிய இடது மற்றும் வலது ஆளும் கட்சிகள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது இதுவே முதற் தடவையாகும்.

எது எவ்வாறிருந்தாலும் புதிய ஜனாதிபதி மக்ரோன் அரசியலில் ஒரு கற்றுக்குட்டியே. பிரெஞ்சு வரலாற்றில் மிகவும் இளவயது ஜனாதிபதியாக இவர் இருப்பது மாத்திரமல்ல, பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிராத கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது கட்சியின் பெயரை முன்னோக்கிச்செல்லும் குடியரசு (Republic on the Move) என்று மாற்றுவதற்கு மக்ரோன் தீர்மானித்திருக்கிறார். அத்துடன் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அரைவாசிப் பேர் (ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தான் இருந்ததைப் போன்று) தேர்தல் அரசியலுக்கு புதியவர்களாகவே இருப்பார்கள் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். உலகமயமாக்கத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும்
ஆதரவான தனது  அரசியல் மற்றும் பொருளாதாரக்  கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கேதுவாக மக்ரோனின் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் போதுமான பெரும்பான்மை ஆசனங்களைப் (Working majority) பெறக்கூடியதாக இருக்குமா அல்லது மத்திய– வலது போக்குடைய கட்சிகளில் தங்கியிருக்கவேண்டிவருமா எனபது முக்கியமானதொரு கேள்வி.

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் தீர்ப்பு ஒரு சண்டையின் வெற்றிதான். மக்ரேனும் லீ பென்னும் பிரதிநிதித்துவப்படுத்தி நின்ற உலகப்பார்வைகள் தொடர்பான போர் இன்னமும் முடிவடையவில்லை என்று சர்வதேச அரசியல் அவதானிகள் முன்வைத்திருக்கும் அபிப்பிராயம் மிகவும் கருத்தூன்றிய முறையில் நோக்கப்படவேண்டியதாகும்.

லீ பென் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் பிரெஞ்சு வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். தனக்கு கிடைத்த சரித்திர முக்கியத்துவமுடைய வாக்குகள் தன்னை பிரான்ஸின் “மிகப்பெரிய எதிரணிச் சக்தியின்” தலைவியாக்கியிருப்பதாகக் கூறியிருக்கும் லீ பென் தேசிய முன்னணியை முற்று முழுதாக மாற்றியமைக்கப்போவதாகச் சூளுரைத்திருக்கிறார். தீவிர வலதுசாரிகள் பிரெஞ்சு அரசியலில் இனிமேலும் விளிம்பு நிலைச்சக்திகளாக இல்லை. கடந்த 45 வருட காலத்தில் தேசிய முன்னணி மெதுமெதுவாக அதன்  செல்வாக்கை அதிகரித்து தேர்தல்களில் பலத்தை வெளிக்காட்டுகின்ற கட்சியாக வளர்ச்சி கண்டுவந்திருப்பதை நீண்ட கால நோக்கில் பார்க்கவேண்டும். ஏற்கெனவே ஆட்சியதிகாரத்தில் இருந்த எந்த பிரெஞ்சுக் கட்சியினாலும் ஜனரஞ்சகவாத தேசியவாத கொள்கைகளைக் கொண்ட இந்த தேசிய முன்னணியின் வளர்ச்சியைத் தடுத்துநிறுத்தக்கூடியதாக இருக்கவில்லை. 2012 ஜனாதிபதி தேர்தலின் முதற்சுற்றில் லீ பென் மூன்றாவது இடத்துக்கு வந்தார்.

Le pen

பயங்கரவாத அச்சுறுத்தல், அகதிகள் நெருக்கடி, குடியேற்றவாசிகளின்பிரச்சினை, படுமோசமான வேலையில்லாத் திண்டாட்டம் (30 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலையின்றியிருக்கிறார்கள். 90 இலட்சம் பேர் வறுமையில் வாடுகிறார்கள்) போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியே லீ பென் மக்களிடம் வாக்குக் கேட்டார். அவருக்கு சுமார் ஒரு கோடியே 10 இலட்சம் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. தனது தந்தையார் மரைன் லீ பென் 2002ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது சுற்றில் (ஜாக் ஷிராக்குடனான போட்டியில்) பெற்ற வாக்குகளையும் விட இரண்டு மடங்கு வாக்குகளை லீ பென் இத்தடவை பெற்றிருக்கிறார்  2002 இல் தந்தையார் 18 சதவீத வாக்குகளையே பெற்றார். மகளுக்கு இத்தடவை கிடைத்திருக்கும் வாக்குகளின் வீதம் 34 ஆகும். குடியேற்றவாசிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் எதிரான தேசிய முன்னணியின் வாக்காளர்கள் தங்கள் கட்சிக்கு பிரான்ஸின் எதிரணியில் ஒரு மைய ஸ்தானத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.

6 வருடங்களுக்கு முன்னர் தந்தையாரிடமிருந்து தேசிய முன்னணியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்ற லீ பென் ஒவ்வொரு உள்ளூராட்சித்தேர்தலிலும் ஐரோப்பியத் தேர்தலிலும் பிராந்தியத் தேர்தல்களிலும் கட்சியின் வாய்ப்புக்களை அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறார். லீ பென்னின் அரசியல் பிரசாரங்கள் காரணமாக குடியேற்றவாசிகள் பிரச்சினையும் பிரான்ஸில் இஸ்லாத்துக்குரிய இடம் தொடர்பான சர்ச்சையும் பிரெஞ்சு அரசியல் விவாதத்தில் படிப்படியாக கூடுதல் வெளியைப்பிடித்துக்கொண்டிருக்கின்றன. 15 வருடங்களுக்கு முன்னர் மரைன் லீ பென் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்றுக்கு வந்த போது அதை ஆட்சேபித்து இலட்சக்கணக்கான பிரெஞ்சு மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். தீவிர வலதுசாரிச் சக்திகள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுகின்ற ஒரு நிலையை மனதால் தாங்கிக் கொள்ளமுடியாதவர்களாக அன்று பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் இருந்தார்கள். ஆனால் இன்றோ லீ பென் இரண்டாம் சுற்றுக்கு வந்தபோதோ அல்லது அவர் 34 சதவீத வாக்குகளை அந்தச் சுற்றில் பெற்றபோதோ எந்த விதமான ஆர்ப்பாட்டமும் அந்த நாட்டில் நடந்ததாக இல்லை.

ஜனாதிபதி தேர்தலில் லீ பென் பெற்ற வாக்கு வீதம்  அடுத்த மாதத்தைய பாராளுமன்றத்தேர்தலில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதே இப்போது முக்கியமான இன்னொரு கேள்வியாகும். 577 ஆசனங்களைக்கொண்ட பிரெஞ்சு பாராளுமன்றத்தில் இப்போது தேசிய முன்னணிக்கு இரு எம்.பி.க்கள் மாத்திரமே இருக்கிறார்கள். பிரான்ஸின் தேர்தல் முறை விகிதாசாரப்பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதால் ஜனாதிபதி தேர்தலில் லீ பென் பெற்ற மில்லியன்கணக்கான வாக்குகளும் பாராளுமன்றத்தில் பெரும் எண்ணிக்கையான ஆசனங்களை அவரின் கட்சிக்கு கொண்டுவந்துவிடப்போவதில்லை. தேசிய முன்னணி குறைந்தது 15 ஆசனங்களைப்பெறக்கூடிய வாய்ப்பே இருப்பதாகவும் அந்த எண்ணிக்கை பாராளுமன்றத்தில் அக்கட்சி தனியான குழுவாக இயங்கப்போதுமானது என்றும் அவதானிகள் கூறுகிறார்கள்.

french-election-results-maps-1493005526000-videoSixteenByNineJumbo1600-v3

ஜனாதிபதி தேர்தலில் லீ பென் தோல்வியடைந்து விட்டார் என்பதால் பிரான்ஸின் அரசியல் நிலக்காட்சியில் இருந்து தேசிய முன்னணி மறைந்துவிடப்போவதில்லை. தீவிர வலதுசாரி / ஜனரஞ்சக தேசியவாதிகளின் கைகளில் பிரான்ஸ் வீழ்ந்துவிடாதிருப்பதை மக்ரோனின் வெற்றி இப்போதைக்கு உறுதிசெய்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் “தேசாபிமானிகளுக்கும்”, “உலகமயவாதிகளுக்கும்” இடையிலான பிளவை தெளிவாக வெளிக்காட்டியிருப்பதாகக் கூறியிருக்கும் லீ பென் புதியதொரு அரசியல் சக்தியொன்று தோற்றம் பெறவேண்டுமென்ற அழைப்பை விடுத்திருக்கிறார். அதேவேளை தீவிரவாத அரசியல் நிலைப்பாடுகளுக்காக இனிமேலும் வாக்குகளை அளிக்கவேண்டிய தேவை இல்லாத சூழ்நிலையை உருவாக்கப்போவதாக மக்ரோன் பிரகடனம் செய்திருக்கிறார். லீ பென்னின் தேசிய முன்னணி மேற்கொண்டும் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள முடியாத வகையில் தனது அரசாங்கத்தை நடத்தவேண்டிய நிலையில் மக்ரோன் இருக்கிறார். ஐரோப்பாவில் பலம்பொருந்திய பதவிகளில் ஒன்றை அவர் பொறுப்பேற்றிருக்கிறார். அத்தகைய பதவிக்கு உரித்தான அடையாள பூர்வமான முக்கியத்துவங்களை மனதிற் கொண்டவராகவே அவர் செயற்படவேண்டியவராகவும் இருக்கிறார். தேர்தலில் ஏற்பட்டிருக்கக் கூடிய பின்னடைவுகளுக்கு மத்தியிலும் ஐரோப்பிய ஜனரஞ்சகவாத அரசியல் மேலும் வலிமையுடன் வளரக்கூடிய அறிகுறிகள் தாராளமாகத் தெரிகின்றன. மக்ரோனின் வெற்றி ஐரோப்பாவில் தீவிர வலதுசாரி/ ஜனரஞ்சகவாத  அலையை தடுத்து நிறுத்துமென்று நம்புவது கஷ்டம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *