Search
Saturday 21 April 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கை விவகாரத்தில் மேலும் தளர்வடையும் சர்வதேச சமூக நிலைப்பாடுகள்

இலங்கை விவகாரத்தில் மேலும் தளர்வடையும் சர்வதேச சமூக நிலைப்பாடுகள்

வீரகத்தி தனபாலசிங்கம் 

போர்க்­குற்­றங்­களை விசா­ரணை செய்­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்தின் பிர­காரம் அமைக்­கப்­ப­ட­வேண்­டி­யி­ருக்கும் நீதி விசா­ரணைப் பொறி­மு­றை­களில் வெளி­நாட்­ட­வர்­களின் பங்­கேற்பை தொடர்ச்­சி­யாக நிரா­க­ரித்­து­வரும் தனது செயலை இலங்கை அர­சாங்கம் ஜெனீ­வாவில் எவ்­வாறு நியா­யப்­ப­டுத்தப் போகி­றது?

தற்­போது ஜெனீ­வாவில் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 34ஆவது கூட்டத் தொடர் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்­ன­தாக இலங்­கையின் உள்­நாட்டுப் போரின் இறுதிக் கட்­டங்­களில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­ப­டு­கின்ற மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மானச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் இலங்­கைக்கு இருக்­கின்ற பொறுப்­புக்­கூறல் கடப்­பாட்­டுடன் தொடர்­பு­டைய விவ­கா­ரங்­களில் அக்­கறை கொண்­ட­வர்­க­ளிடம் இருந்து எழுந்த கேள்வி இது. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட சகல தீர்­மா­னங்­க­ளையும் நிரா­ க­ரித்த ராஜபக் ஷ அர­ சாங்கம் பத­வியில் தொடர்ந்தும் இருந்­தி­ருந்தால் இத்­த­கை­ய­தொரு கேள்வி எழுந்­தி­ருக்­காது. பொறுப்­புக்­கூறல் செயன்­மு­றைகள் தொடர்பில் அந்த அர­சாங்கம் ஐக்­கிய நாடு­க­ளுடன் ஒத்­து­ழைப்­ப­தற்கு ஒரு­போ­துமே தயா­ரா­யி­ருந்­த­தில்லை.

ஆனால், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­னதும் தலை­மை­யி­லான தற்­போ­தைய தேசிய ஐக்­கிய அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்­துடன் ஒத்­து­ழைக்­கின்ற ஒரு அணு­கு­மு­றையை கடைப்­பி­டிப்­பது மாத்­தி­ர­மல்ல, 2015 அக்­டோ­பரில் மனித உரி­மைகள் பேர­வையில் அமெ­ரிக்கா தலை­மையில் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ச­ர­ணை­யையும் வழங்­கி­யி­ருந்­தது. அதன் கார­ணத்­தி­னா­லேயே இந்தக் கேள்வி முக்­கி­ய­மான ஒன்­றாக தெரிந்­தது. ஆனால், கடந்த 18 மாதங்­க­ளாக அந்தத் தீர்­மா­னத்தின் ஏற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு பய­னு­று­தி­யு­டைய எந்தச் செயன்­மு­றை­யையும் முன்­னெ­டுக்­காமல் இருந்த கார­ணத்தால் தோன்­றக்­கூ­டி­யவை என்று எதிர்­பார்க்­கப்­பட்ட எந்தப் பிரச்­சி­னை­யையும் கையா­ளு­வதில் அர­சாங்­கத்­துக்கு எந்தச் சிக்­க­லுமே இல்லை என்ற சூழ்­நி­லையே இப்­போது தோன்­றி­யி­ருப்­பதை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

unhcr

ஜெனீ­வாவில் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்டத் தொடர் ஆரம்­ப­மா­ன­தற்கு மறுநாள் பெப்­ர­வரி 28 வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உரை­யாற்­றினார். போருக்குப் பின்­ன­ரான நீதி மற்றும் நல்­லி­ணக்கப் பொறி­மு­றை­களை ஏற்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம் பெரும் தடை­க­ளையும் சவால்­க­ளையும் எதிர்­நோக்க வேண்­டி­யி­ருக்­கி­றது என்ற தங்கள் தரப்பு ‘நியா­யத்தை’ சர்­வ­தேச சமூ­கத்துச் சொல்­வதே அவரின் உரையின் முக்­கிய நோக்­க­மாக இருந்­தது. 2015 அக்­டோபர் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தி­லான தாம­தங்­க­ளுக்கு இலங்­கையில் எதி­ரணி அர­சியல் சக்­தி­களின் ‘ஜன­ரஞ்­ச­க­வாத அர­சி­யலே’ (Populism) முக்­கிய காரணம் என்று அவர் கூறினார். நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தங்­களின் மூல­மாக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கும் அர­சாங்கம் முன்­னெ­டுக்­கின்ற முயற்­சி­க­ளுக்கு எதி­ராக சிங்­கள மக்கள் மத்­தியில் தேசிய வாத உணர்­வு­களைக் கிள­றி­வி­டு­கின்ற முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான ‘கூட்டு எதி­ர­ணியின்’ செயற்­பா­டு­க­ளையே வெளி­யு­றவு அமைச்சர் ஜன­ரஞ்­ச­க­வாத அர­சியல் என்று குறிப்­பி­டு­கிறார் என்­பதில் சந்­தே­க­மில்லை. இலங்­கையில் இனப்­பி­ரி­வி­னையின் இரு பக்­கங்­க­ளிலும் உள்ள தீவி­ர­வாத சக்­திகள் அர­சாங்­கத்தின் முன்­னோக்­கிய பய­ணத்­துக்கு முட்­டுக்­கட்­டை­களைப் போடு­வ­தாகக் குற்­றஞ்­சாட்­டிய அவர் ஜன­ரஞ்­ச­க­வாத அர­சியல் என்­பது இலங்­கைக்கு மாத்­திரம் பிரத்­தி­யே­க­மான ஒன்­றல்ல என்றும் குறிப்­பிட்டார்.

‘மனித உரி­மை­களின் அடிப்­ப­டை­களும் ஆதா­ரங்­களும் உலகம் பூரா­கவும் கேள்­விக்­குள்­ளாக்­கப்­ப­டு­கின்ற ஒரு நேரத்தில் நான் மனித உரி­மைகள் பேர­வையில் உரை­யாற்றிக் கொண்­டி­ருக்­கின்றேன். உல­க­ளா­விய ரீதியில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விழு­மி­யங்­களில் பல ஜன­ரஞ்­ச­க­வா­தத்தின் பெயரால் சவா­லுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றன. ஜன­ரஞ்­சக அர­சி­யல்­வா­திகள் அறி­யா­மை­யி­லி­ருந்தும் மட­மை­யி­லி­ருந்தும் நாரி­ழையை எடுத்து வலையை பின்­னு­கின்­றார்கள். இத்­த­கைய பின்­பு­லத்தில் மனித உரி­மைகள் பேர­வையின் பாத்­திரம் முன்­னெப்­போ­தையும் விட முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக மாறி­யி­ருக்­கி­றது’ என்று சம­ர­வீர தன­து­ரையில் கூறினார். அதா­வது, இலங்­கையில் நல்­லி­ணக்கச் செயன்­மு­றை­க­ளுக்கு எதி­ராக இருக்­கின்ற ஜன­ரஞ்­ச­க­வாத அர­சியல் என்­பது இன்று உலகின் பல பாகங்­க­ளிலும் வியா­பிக்­கின்ற பொது­வான அர­சியல் போக்­கொன்றின் அங்கம் என்று அர்த்­தப்­ப­டுத்த அவர் முயற்­சித்­தி­ருக்­கிறார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இருந்து பிரிட்டன் வெளி­யேற வேண்­டுமா இல்­லையா என்­பதைத் தீர்­மா­னிப்­ப­தற்­காக கடந்த வருடம் ஜூனில் பிரிட்­டனில் நடத்­தப்­பட்ட சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் வெளி­யே­று­வ­தற்கு ஆத­ர­வாக மக்கள் வாக்­க­ளித்­தமை (Brexit), கறுப்­பி­னத்­த­வர்கள் உட்­பட சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்கும் வெளி­நாட்டு குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கும் எதி­ரான உணர்­வு­களை கிளறிப் பிர­சாரம் செய்த டொனால்ட் ட்ரம்ப் அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் பெற்ற வெற்றி ஆகி­ய­வற்றை தொடர்ந்து இன்று இந்த ஜன­ரஞ்­ச­க­வாத அர­சியல் பெரும் விவாதப் பொரு­ளா­கி­யி­ருக்­கி­றது. ஆனால், இலங்­கையில் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்கு எதி­ரான உணர்­வு­களும் அவர்­களின் அர­சியல் அபி­லா­சை­களை ஓர­ள­வுக்­கேனும் நிறை­வு­செய்­யக்­கூ­டிய அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான எந்­த­வொரு முயற்­சி­யையும் மூர்க்­கத்­த­ன­மாக எதிர்க்­கின்ற போக்கும்  இந்த ஜன­ரஞ்­ச­க­வாத அர­சி­ய­லுக்குள் அடங்­குமா என்ற கேள்வி இயல்­பாவே எழு­கி­றது. ஏனென்றால், சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்கு எதி­ரான அர­சியல் இலங்­கையில் ‘பாரம்­ப­ரி­ய­மான’ ஒன்­றா­கவே இருந்து வந்­தி­ருக்­கி­றது. அது ஒரு புதிய தோற்­றப்­பா­டே­யல்ல. உல­க­ளா­விய ஒரு போக்­காக இப்­போது அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற ஜன­ரஞ்­ச­க­வாத அர­சி­ய­லுக்குள் தனது அர­சாங்­கத்தின் இய­லா­மை­க­ளையும் தவ­று­க­ளையும் மூடி­ம­றைத்து சர்­வ­தேச சமூ­கத்தின் மத்­தியில் அனு­தா­பத்தை தேட மங்­கள சம­ர­வீர மேற்­கொண்ட பிர­யத்­த­ன­மா­கவே அவரின் ஜெனீவா உரையை வர்­ணிக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது. அன்­றாட நடை­முறை யதார்த்த அர­சி­யலில்  (Real Politik) எதிர்­நோக்க வேண்­டி­யி­ருக்­கின்ற தடை­க­ளுக்கும் முட்­டுக்­கட்­டை­க­ளுக்கும் மத்­தியில் அவ்­வப்­போது சுற்­று­வ­ழி­களை நாட­வேண்­டி­யி­ருந்­தி­ருக்­கலாம். ஆனால், பயண இலக்கு ஒன்­றா­கவே இருக்­கி­றது. நிலை­மாறு கால நீதிச் செயன்­மு­றைகள் ( Transitional Justice)  மீதான அர­சாங்­கத்தின் உறு­திப்­பாடு குறைந்­து­வி­ட­வில்லை என்றும் அவர் கூறு­வதைக் காண முடிந்­தது.

வெளி­யு­றவு அமைச்சர் ஜெனீ­வாவில் உரை­யாற்றி இரு தினங்கள் கழித்து ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் இள­வ­ரசர் செய்த் ராட் அல் – ஹுசெய்ன் இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையை வெளி­யிட்டார். 2015 அக்­டோபர் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர­சாங்­கத்­தினால் இது­வ­ரையில் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்­பி­லான அவரின் விரி­வான அவ­தா­னிப்­பா­கவே அந்த அறிக்கை அமைந்­தது.

போர்க்­குற்­றங்­களை விசா­ரணை செய்­வ­தற்கு அமைக்­கப்­ப­ட­வேண்­டிய நீதி விசா­ரணைப் பொறி­மு­றை­களில் வெளி­நாட்­ட­வர்­களின் பங்­கேற்பு குறித்து இலங்கை அர­சாங்கத் தலை­வர்கள் இடை­ய­றாது காட்­டி­வரும் எதிர்ப்பின் கார­ண­மாக அல் ஹுசெய்ன் தனது முன்­னைய நிலைப்­பா­டு­களில் இருந்து தளர்ந்து விட­வில்லை என்­பதை அறிக்கை வெளி­காட்­டி­யது. வெளி­நாட்டு நீதி­ப­திகள், வழக்குத் தொடு­நர்கள், விசா­ர­ணை­யா­ளர்­களை உள்­ள­டக்­கிய கலப்பு முறை­யி­லான நீதி­மன்­றமே  (Hybrid Court ) அமைக்­கப்­ப­ட­வேண்­டு­மென்று மீண்டும் வலி­யு­றுத்­திய உயர்ஸ்­தா­னிகர் வெளி­நாட்­ட­வர்­களின் பங்­கேற்­புக்கு வச­தி­யாக இலங்கை சட்­ட­மொன்றை இயற்­ற­வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இலங்­கையின் நீதிச் செயன்­மு­றை­களில் வெளி­நாட்­ட­வர்கள் பங்­கேற்­ப­தற்கு அர­சி­ய­ல­மைப்பில் இட­மில்லை என்று அர­சாங்கத் தலை­வர்கள் கூறிக்­கொண்­டி­ருக்கும் நிலையில் அல் ஹுசெய்ன் இத்­த­கை­ய­தொரு கோரிக்­கையை முன்­வைத்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

UNHRC

17 பக்­கங்­களைக் கொண்ட அந்த அறிக்­கையில் உயர்ஸ்­தா­னிகர் இலங்­கையில் நிலை­மா­று­கால நீதிச் செயன்­மு­றைகள் மிகவும் தாம­த­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­மையும் கடந்­த­கால குற்­றங்­க­ளுக்கு பொறுப்­புக்­கூறல் தொடர்பில் விரி­வான தந்­தி­ரோ­பா­ய­மொன்று இல்­லா­தி­ருக்­கின்­ற­மையும் நிலை­யான சமா­தானம், நல்­லி­ணக்கம் மற்றும் ஸ்திரத்­தன்மை ஆகி­ய­வற்றை நோக்­கிய நகர்­வு­களைத் தடம்­பு­ரளச் செய்­து­விடக் கூடிய ஆபத்தைக் கொண்­டி­ருக்­கின்­றன என்று எச்­ச­ரிக்கை செய்­த­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. மனித உரி­மைகள் மற்றும் அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்தம் சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரங்­களில் சாத­க­மான முன்­னேற்­றங்கள் ஓர­ள­வுக்கு ஏற்­பட்­டி­ருப்­பதை ஒத்­துக்­கொண்­டி­ருக்கும் அல் ஹுசெய்ன் பொதுவில் இலங்­கையில் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­ற­லுடன் சம்­பந்­தப்­பட்ட செயன்­மு­றைகள் தொடர்பில் அதி­ருப்தி கொண்­டி­ருப்­பதை அறிக்கை தெளி­வாக உணர்த்­தி­யது. கலப்பு முறை­யி­லான நீதி­மன்­றத்தை அமைக்க வேண்­டு­மென்ற கோரிக்­கையில் அல் ஹுசெய்ன் உறு­தி­யாக நிற்­பது போர்க்­குற்­றங்கள் போன்ற பார­தூ­ர­மான குற்­றச்­செ­யல்­களை விசா­ரணை செய்­வ­தற்­கான நம்­பகத் தன்­மை­யையும் தகு­தி­யையும் இலங்­கையின் நீதித்­துறை அமைப்­புக்கள் கொண்­டி­ருக்­க­வில்லை என்ற அபிப்­பி­ரா­யத்தை அவர் மாற்­றிக்­கொள்­ள­வில்லை என்­பதைக் காட்­டு­கி­றது. முன்­னைய ஆட்­சியில் இருந்­ததைப் போலன்றி தற்­போ­தைய அர­சாங்­கத்தின் கீழ் இலங்­கையின் நீதித்­து­றையின் சுதந்­திரம் மீளவும் நிலை­நாட்­டப்­பட்­டு­விட்­டது என்ற அர­சாங்கத் தலை­வர்­களின் பேச்­சுக்கள் ஐ.நா.வின் முன் எடு­ப­ட­வில்லை. திரு­கோ­ண­ம­லையில் 5 மாண­வர்கள் கொலை, மூதூரில் பிரெஞ்சு தன்­னார்வ தொண்டு நிறு­வன ஊழி­யர்கள் கொலை, குமா­ர­புரம் படு­கொ­லைகள், வெலிக்­கடை சிறைக் கல­வரம், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் கொலை வழக்கு ஆகி­ய­வற்றை உதா­ர­ண­மாகச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்கும் அல் ஹுசெய்ன் பாது­காப்பு படைகள் சம்­பந்­தப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்ற  பார­தூ­ர­மான குற்­றச்­செ­யல்­க­ளுக்குப் பொறுப்­பா­ன­வர்­களை நீதியின் முன்­னி­றுத்­து­வ­தற்­கான விருப்­பமோ ஆற்­றலோ அர­சிடம் இல்­லாத நிலை தொட­ரவே செய்­கி­றது என்று குறிப்­பிட்­டி­ருக்­கிறார். நீதி மற்றும் நல்­லி­ணக்கச் செயன்­மு­றைகள் தொடர்­பி­லான அதன் கொள்­கை­களை மக்கள் மத்­தியில் எடுத்­துச்­செல்­வதில் அர­சாங்கம் அக்­கறை காட்­டா­தி­ருந்து வந்­த­தையும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

உயர்ஸ்­தா­னி­கரின் இந்த அறிக்கை வெளி­யான மறு­க­ணமே ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் வெளி­நாட்டு நீதி­ப­தி­களின் பங்­கேற்­புக்கு இட­மில்லை என்ற தங்­க­ளது நிலைப்­பாட்டை மீளவும் பிர­க­டனம் செய்­தனர். அர­சாங்­கத்தை எவ்­வாறு நடத்த வேண்­டு­மென்று அர­சாங்க சார்­பற்ற தொண்டர் நிறு­வ­னங்கள் எமக்குக் கூறு­வ­தற்கு நான் ஒரு­போதும் அனு­ம­திக்­க­மாட்டேன் என்று கூறிய ஜனா­தி­பதி சிறி­சேன, வடக்கில் பலா­லியில் இரா­ணு­வத்­தினர் மத்­தியில் உரை­யாற்­று­கையில், ‘படை­வீ­ரர்­க­ளுக்கு எதி­ராக குற்­றப்­பத்­திரம் தாக்கல் செய்­வ­தற்கு ஒரு­போதும் தனது அர­சாங்கம் அனு­ம­திக்­காது’ என்று சூளு­ரைத்தார்.

படை­வீ­ரர்­க­ளுக்கு எதி­ராக குற்­றப்­பத்­திரம் தாக்கல் செய்ய அனு­ம­திக்கப் போவ­தில்லை என்ற ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாட்டை மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் முற்­றிலும் உள்­நாட்டு அதி­கா­ரி­களைக் கொண்ட நீதி விசா­ரணைப் பொறி­மு­றையின் கீழ் கூட படை­வீ­ரர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­மாட்­டார்கள் என்­று­தானே அர்த்­தப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது.

இத்­த­கை­ய­தொரு பின்­பு­லத்தில் இப்­போது 2015 ஒக்­டோபர் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை மேலும் இரு­வ­ருட கால அவ­கா­சத்தைப் பெறக்­கூ­டிய சூழ்­நிலை தோன்­றி­யி­ருக்­கின்­றது. இந்த கால அவ­கா­சத்தை வழங்­கு­வது தொடர்­பான புதிய தீர்­மானம் அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் தலை­மையில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வி­ருப்­ப­தா­கவும் அதற்கு இலங்­கையும் இணை அனு­ச­ரணை வழங்கும் என்றும் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. தீர்­மா­னத்தின் முதல் நகல் வரைவு கடந்த வாரம் ஜெனீ­வாவில் மனித உரி­மைகள் பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள் மத்­தியில் விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

2015 அக்­டோபர் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்­கை­யினால் இனிமேல் முன்­னெ­டுக்­கப்­ப­டக்­கூ­டிய நட­வ­டிக்­கை­களின் முன்­னேற்றம் தொடர்பில் மனித உரி­மைகள் பேர­வையில் 2018 மார்ச்சில் 37ஆவது கூட்­டத்­தொ­டரில் ஐ.நா.மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் எழுத்து மூல அறிக்­கை­யொன்றைச் சமர்ப்­பிக்க வேண்டும். இலங்கை தொடர்­பான அடுத்த முக்­கி­ய­மான அறிக்கை 2019 மார்ச்சில் 40ஆவது கூட்டத்தொடரின் போதே உயர்ஸ்தானிகரினால் சமர்ப்பிக்கப்படும் என்பதை நகல் வரைவின் வாசகங்கள் மூலம் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

2015 அக்டோபர் தீர்மானத்தின் எந்தவொரு அம்சமும் புதிய நகல் தீர்மானத்தில் மாற்றியமைக்கப்படவில்லை என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது. நடைமுறைப்படுத்தல் தொடர்பில் பிரத்தியேகமான கால அட்டவணைக்கு இலங்கையை கட்டுப்படவைக்கும் ஏற்பாடு புதிய தீர்மானத்தில் இடம்பெறவேண்டுமென்று பல நாடுகளின் தூதுக்குழுக்கள் விரும்புவதாக ஜெனீவா தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

நீதி விசாரணைப்பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படவில்லை என்று இலங்கை  வியாக்கியானப்படுத்தக்கூடிய முறையில் அதற்கு வசதியாக புதிய தீர்மானத்தின் வாசகங்கள் அமையக்கூடுமென்றும் நம்பகமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்த நிகழ்வுப்போக்குகள் எல்லாமே இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு நெருக்குதல்களை கொடுப்பதில் சர்வதேச சமூகத்தின்  முன்னணி வல்லாதிக்க நாடுகளுக்கு இப்போது அக்கறையில்லை என்பதையே உணர்த்துகின்றன. கால அவகாசத்தைப் பெறப்போகின்ற இலங்கை நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் கடப்பாடு தொடர்பில் நிறைவேற்றவேண்டிய காரியங்களை செய்வதிலும் பார்க்க அவற்றை மேலும் தாமதிப்பதற்கான அல்லது தட்டிக்கழிப்பதற்கான தந்திரோபாயங்களையே கையாளும் என்பதே போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் கவலையாக இருக்கின்றது. இலங்கையின் மனித உரிமைகள் பிரச்சினை வெளிநாடுகளுக்கு சலிப்பைத் தருகின்ற ஒன்றாக மாறிவிட்டதாக இராஜதந்திரி ஒருவர் கூறியதாகவும் ஒரு செய்தியைப் பார்க்கக்கிடைத்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *