Search
Tuesday 7 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

உயிருடன் உள்ளதாக கருதப்படும் ஊடகவியலாளனுக்கு உதயன் பத்திரிகை அஞ்சலி

உயிருடன் உள்ளதாக கருதப்படும் ஊடகவியலாளனுக்கு உதயன் பத்திரிகை அஞ்சலி

கவிமகன். இ

“ஊடக சுதந்திர தினம் 2016” கடந்த 2ஆம் நாள் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் “வேட்கை” என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை ஒரு நிகழ்வையும் நடாத்தி முடித்துள்ளது. இந்த நிகழ்வில் மறைந்த ஊடகவியலாளர்களின் உருவ படங்கள் வைக்கப்பட்டு வணக்கம் செய்யப்பட்டது. இது செய்தி.

இந்த செய்தியின் பின்னணியிலே இந்த பத்தி எழுத வேண்டிய தேவை எனக்கு எழுந்தது. இந்த உருவப்படங்களில் ஒருவனாக புன்னகைத்து கொண்டிருந்த அந்த முகத்தை பார்த்த பின்பே இந்த பத்தியை நான் எழுதுகிறேன். “தவபாலன்” இந்த பெயரை அறியாத ஈழத்து மக்கள் யாரும் இல்லை. எங்கள் வலிகளை உணர்வுகளை சர்வதேச அரங்கில் கொண்டு வந்து சேர்பதற்காக தனது வாழ்க்கையை ஊடகத்தினூடாக அர்ப்பணித்த ஒரு ஊடகவியலாளர்.

இறைவன் அல்லது தவபாலன் என்ற பெயரில் 2009 வைகாசி 15 ஆம் நாள் வரை தமிழ் தேசத்துக்காக சர்வதேசம் நோக்கி தன் குரலை கொண்டுவந்து சேர்த்தவர். இறுதி வரை உறுதியாக தனது பயணத்தை தொடந்து தேச விடுதலைக்காக அரும்பாடு பட்டவர். இதை எங்கள் மக்களும் அனைத்து ஊடகவியலாளர்களும் நிட்சயமாக அறிந்திருப்பர்.

2009. வைகாசி 15 ஆம் நாள் வரை ஒலித்துக் கொண்டிருந்த தவபாலனின் குரல் இறுதி யுத்தம் என்ற பெயரில் முடித்து வைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு பின் இல்லாது போனது. ஆனால் அவரது இருப்பு இன்றும் சந்தேகமாகவே இருக்கிறது. அவர் இறந்தாரா? அல்லது மடிந்தாரா என்பது யாராலும் உறுத்திப்படுத்த முடியாத ஒன்றாகவே இன்றும் உள்ளது. இந்த நிலையில் அவரது மனைவி பிள்ளைகள். அவர் இராணுவத்திடம் சரணடைந்ததை கண்ட உறவுகள் மூலம் அவர் உயிருடன் இராணுவத்திடம் உள்ளார் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள். என்றோ ஒருநாள் தனது கணவன் மீண்டு வருவார். எமது தந்தை வீட்டுக்கு வருவார் என்ற நம்பிக்கையோடு அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் நாங்கள் தான் யாழின் முன்னணி பத்திரிகை என்று பணத்தை மட்டும் கருத்தில் கொண்டு இயங்கும் இந்த உதயன் பத்திரிகை தனது “வேட்கை” நிகழ்வை நடாத்தி முடிந்துள்ளது. அதில் தவபாலனின் உருவப்படம் வைத்து அவருக்கு மாலை சூடி விளக்கும் ஏற்றப்பட்டிருக்கிறது.

உதயன் குழுமத்தின் உரிமையாளரே… பத்திரிகையின் ஆசிரியரே… செய்தியாளர்களே… உங்களிடம் இந்த இடத்தில் இந்த வினாக்களை விட்டு செல்கிறேன்…

* இறக்கவில்லை என்று கருதப்படும் ஒரு  ஊடகவியலாளனுக்கு எவ்வாறு நீங்கள் அஞ்சலி செய்ய முடியும்? அதற்கான அனுமதி யாரிடம் இருந்து கிடைத்தது?

* தவபாலன் என்ற உத்தம ஊடகவியலாளன் இறந்ததை உறுதிப்படுத்த உங்களால் முடியுமா?

* அதை எவ்வாறு நீங்கள் உறுதிப்படுத்தினீர்கள்?

* அவர் இறந்ததற்கான சான்றை உங்களால் உங்கள் பத்திரிகை மூலம் உறுதிப்படுத்த முடியுமா?

* நிகழ்வில் அவரது உருவப்படத்தை வைத்து வணக்கம் செய்ய முன் தமது குடும்பத்தலைவன் இறக்கவில்லை மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பில் வாழும் அவரின் துணைவி பிள்ளைகளிடம் அதற்கான முறையான அனுமதியை பெற்றீர்களா?

* நீங்கள் எதுவுமே செய்ய மாட்டீர்கள். ஆனால் கிளிசல்களுக்கு தையல் போட உறுதிப்படுத்தப்படாத
சாவுகளை உறுதிப்படுத்தியதாக நீங்கள் பயன்படுத்துவீர்கள். நீங்கள் ஒரு முன்னணி ஊடகம் என்றால் நான் மேலே குறித்த வினாக்களுக்கு உங்களால் பதிலிட முடியுமா?

* அல்லது இதன் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் தவபாலனின் துணைவியுடைய மடலுக்கு பதில் தர முடியுமா?

இந்த வினாக்களுக்கு உதயன் நிர்வாகத்தை சார்ந்தவர்கள் கட்டாயமாக பதில் கூற வேண்டிய கடப்பு இருக்கிறது. ஆனால் இவற்றை எல்லாம் அவர்கள் கருத்தில் எடுக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பார்வையில் தவபாலன் இறந்துவிட்டார் என்றால் அடுத்த வருடம் அவரது நினைவு நாளுக்காக அவரது வீட்டாரிடம் இருந்து ஒரு தொகை பணத்துக்கு நினைவு நாள் விளம்பரத்தை போட்டு வியாபாரம் செய்யலாம்.

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *