Search
Thursday 24 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எல்லாவற்றையும் செய்வதாக கூறிக்கொண்டு எதையுமே செய்யமுடியாததாக அரசாங்கம்

எல்லாவற்றையும் செய்வதாக கூறிக்கொண்டு எதையுமே செய்யமுடியாததாக அரசாங்கம்

வீரகத்தி தனபாலசிங்கம்

நல்லிணக்கப்பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணி (Consultation Task Force on Reconciliation Mechanisms)யின் உறுப்பினர்கள் தங்களின் அறிக்கையின் முக்கியத்துவம் கருதி அதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே கையளிக்க விரும்பியிருந்தார்களாம். இலங்கையின் முக்கிய சிவில் சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவரும் தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளருமான கலாநிதி ஜெகான் பெரேரா கடந்தவாரம் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதிய கட்டுரையில் இதைத் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி கலந்துகொள்ளக் கூடியதாக அவருக்கு வசதியான நேரம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதில் இருந்த பிரச்சினைகள் காரணமாக அந்த அறிக்கை கையளிப்பு பல வாரங்களாக தாமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இறுதியாக ஜனாதிபதி செயலகத்தில் ஜனவரி மூன்றாம் திகதி செவ்வாய்க்கிழமை வைபவம் இடம்பெற்றபோது ஜனாதிபதி பிரசன்னமாகியிருக்கவில்லை. சுகவீனமுற்றிருப்பதன் காரணத்தினால் அவரால் கலந்துகொள்ளமுடியவில்லை என்று இறுதி நேரத்தில் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக வைபவத்தில் கலந்துகொண்டவர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் அறிவிப்புச் செய்தனர்.

ஒரு வருடத்துக்கு முன்னர் கடந்த ஜனவரியில் இந்தச் செயலணியை நியமித்தவரே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான். அவரும் கூட அன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் அந்த வைபவத்தில் கலந்துகொள்ளவில்லை. அவருக்கும் சுகவீனம் என்று எவரும் பேசிக்கொண்டதாகத் தெரியவரவில்லை.

இறுதியில் முன்னாள் ஜனாதிபதி திருமதிசந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் செயலணியின் தலைவியான சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான திருமதி மனோரி முத்தெட்டுவேகம அறிக்கையைக் கையளித்ததை காணக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதியினதும் பிரதமரினதும் தரப்பில் கூறப்பட்டிருக்கக்கூடிய காரணங்கள் எவையாக இருந்தாலும், வைபவத்தில் அவர்களது பிரசன்னமின்மை நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பில் பொதுமக்களுடனான கலந்தாலோசனைச் செயன்முறைகளில் அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய பற்றுறுதி தொடர்பில் கேள்விகள் கிளம்புவதைத் தவிர்க்க முடியவில்லை.

அறிக்கையில் உள்ளடங்கியிருக்கும் விதப்புரைகள் தொடர்பில் அரசாங்க அமைச்சர்கள் உடனடியாகவே வெளிக்காட்டிய பிரதிபலிப்புகள் அந்தக் கேள்விகளை நியாயப்படுத்துபவையாகவே அமைந்திருந்தன. தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியாக திருமதி குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்ட பதவி சர்ச்சைக்குரியவை என்று தாங்கள் கருதுகின்ற அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஒருவரை வசதியாகப் பயன்படுத்துவதற்காவது உதவுகிறதே என்று அரசாங்கத் தலைவர்கள் திருப்திப்பட்டிருக்கக் கூடும்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டு 2015 அக்டோபரில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பில் நாடு பூராவும் பொதுமக்களின் (குறிப்பாக போரில் பாதிக்கப்பட்ட சமூகங்களின்) கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக 2016 ஜனவரி 26ஆம் திகதி பிரதமர்  விக்கிரமசிங்க நல்லிணக்கப்பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியை அமைத்தார். மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான இந்தச் செயலணியில் சிவில் சமூகத்தைச் சேர்ந்த 11 சுயாதீனமான நிபுணர்கள் அங்கம் வகிக்கிறார்கள். அதன் செயலாளராக இலங்கையின் இன்னொரு முக்கிய சிவில் சமூக செயற்பாட்டாளரும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து பணியாற்றுகிறார். உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணையை நடத்துவதற்கு அரசாங்கத்தினால் எத்தகைய நீதி விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் மக்களின் கருத்துக்களைப் பெறுவதே இந்தச் செயலணியின் பிரதான நோக்காக இருந்தது.

பொதுமக்களுடனான சந்திப்புக்களை நடத்திய செயலணி 2016  ஜூலைக்கும் செப்டெம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுத்துமூல சமர்ப்பணங்களையும் பெற்றுக்கொண்டது. அந்த கலந்தாலோசனைகளின்போது 7306 சமர்ப்பணங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக செயலணியின் வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைத்தது. கலந்தாலோசனைகள் எந்த முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை  திட்டமிட்டு வகுத்துக்கொடுத்து அவற்றை மேற்பார்வை செய்த 11 சுயாதீன நிபுணர்களுக்கும் சமூகமட்ட ஆலோசனைகள் நடத்துவதற்கு மாவட்டங்கள் அல்லது மாகாணங்களிலிருந்து பிரதிநிதிகளை உள்ளடக்கிய 15 வலய செயலணிகள் உதவிசெய்தன. அரசியலமைப்பு வரைபுச் செயன்முறைகள் தொடர்பில் நாடு பூராவும் மக்களின் அபிப்பிராயங்களை அறிந்துகொள்வதற்காக பிரதமரினால்  சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையில் அமைக்கப்பட்ட பொதுமக்கள் பிரதிநிதித்துவக் குழு (Public Representations Committee) வைப் போன்றதே திருமதி முத்தெட்டுவேகம தலைமையிலான இந்தச் செயலணியும்.

செயலணி அதன் அறிக்கையில் ஆயுதப் படைகளினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், இராணுவ மயமாக்கல் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் தேடுதல், காணாமல் போனோர் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தல், போரில் பாதிக்கப்பட்டு வழமை வாழ்வுக்கு திரும்புவதற்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு வாழ்வாதாரங்களைத் தேடிக்கொடுத்தல் போன்ற நல்லிணக்கச் செயன்முறைகளுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விதப்புரைகளைச் செய்திருக்கிறது. பிரதானமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை செய்வதற்கு உள்நாட்டு நீதிபதிகளையும் வெளிநாட்டு நீதிபதிகளையும் கொண்ட கலப்பு முறையிலான (Hybrid Court) நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென்றும் சர்ச்சைக்குரிய வழக்குகளில் விசாரணைகளைத் தொடங்குவதற்கு காலதாமதமின்றி விசேட வழக்குத் தொடுநரை நியமிக்க வேண்டும் என்றும் அது அரசாங்கத்துக்கு யோசனையை முன்வைத்திருக்கிறது. போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துகின்ற விசேட நீதிமன்றத்தின் ஒவ்வொரு அமர்விலும் குறைந்தபட்சம் ஒரு வெளிநாட்டு நீதிபதி பங்கேற்கவேண்டும் என்பது செயலணியின் பிரத்தியேகமான விதப்புரையாகும்.

உடனடியாகவே இந்த விதப்புரைகளுக்கு அரசாங்க அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு வெளிப்பட்டது. அமைக்கப்படக்கூடிய விசேட நீதிமன்றத்தில் ஒரு வெளிநாட்டு நீதிபதி கூட இருக்கமாட்டார் என்று கூறிய அமைச்சரவைப் பேச்சாளரான சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நிபுணத்துவ உதவிகளைப் பெறுவதற்காக சர்வதேச சட்ட நிபுணர்களை அழைக்க முடியும் என்று குறிப்பிட்டார். அந்த நீதிமன்றத்தில் உள்நாட்டு நீதிபதிகள் மாத்திரமே இருக்கவேண்டுமென்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஐக்கியநாடுகளும் ஏற்றுக்கொண்டதாகவும் சேனாரத்ன கூறினார். அதேவேளை, ஜனாதிபதி சிறிசேனவின் சார்பில் குரல்தர வல்லவராக கருதப்படுகின்ற நிதி இராஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபேவர்தன போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்ற ஜனாதிபதியின் திட்டவட்டமான நிலைப்பாட்டை மீளவும் உறுதிசெய்தார்.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ தற்போதைய தருணத்தில் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை தேவையற்ற ஒன்று என்று குறிப்பிட்டதுடன் அந்த செயலணியில் தனக்கு நம்பிக்கை எதுவும் இல்லை என்றும் கூறினார். அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் சமாதானச் செயன் முறைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை நீதித்துறையின் சுதந்திரம் பற்றி இப்போது யாரும் முறைப்பாடு செய்வதில்லை. அதனால் செயலணியின் விதப்புரைகளைப் பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை என்பதே ராஜபக் ஷவின் நிலைப்பாடாக இருக்கிறது. செயலணியில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று இப்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், கூறுகின்ற நீதியமைச்சர், அதே செயலணியை பிரதமர்  விக்கிரமசிங்க நியமித்தவேளையிலும் அது பிறகு பொதுமக்கள் மத்தியில் கலந்தாலோசனைகளை நடத்திய வேளையிலும் எங்கு போயிருந்தாரோ?  வெ ளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பு குறித்து செயலணி அறிக்கையில் குறிப்பிட்டிருக்கா விட்டால் ராஜபக் ஷவின் பிரதிபலிப்பு வித்தியாசமானதாக இருந்திருக்கவும்கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் பெரு நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சருமான பாட்டாளி சம்பிக்க ரணவக்க செயலணியின் அறிக்கை போக வேண்டிய இடம் குப்பைக்கூடை என்று சொன்னதையும் காணக்கூடியதாக இருந்தது.

Ranil-Maithri-Jan-25-2015-

அமைச்சர்களிடமிருந்து அறிக்கைக்கு கிளம்பிய எதிர்ப்பை கண்டதும் செயலணியின் முக்கியஸ்தர்கள் உடனடியாகவே செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி நிலைப்பாட்டை விளக்க வேண்டியதாயிற்று. தங்களது 500 பக்க அறிக்கையில் உள்ளடங்கியிருக்கும் விதப்புரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கு தங்களிடம் எந்த உத்தரவாதமும் இல்லை என்று கூறிய கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, உண்மை மற்றும் நீதி தொடர்பாக நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு சிவில் சமூகமும் ஊடகத்துறையும் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசாங்கம் தங்களது அறிக்கையை பரிசீலிக்கிறதோ இல்லையோ அது வேறு விடயம். ஆனால் நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பில் மக்கள் விரும்புகின்றவற்றைத் தெரிந்து கொள்வதற்கான ஒரு தகவல் தேட்டமாக (Reference Point) அது விளங்குகிறது. அரசாங்கம் எதை நிராகரிக்கிறது, எதை ஏற்றுக் கொள்கிறது என்பதைக் கூற வேண்டும். அது அரசாங்க தலைவர்களின் பொறுப்பு என்று சரவணமுத்து செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனிடையே அறிக்கையை பெற்றுக் கொண்ட திருமதி குமாரதுங்க செயலணியின் விதப்புரைகளை ஏற்றுக் கொள்வது என்பது கட்டாயமல்ல. ஆனால், அவை பொது விவாதத்திற்குரியவை என்று தனது அபிப்பிராயத்தை கடந்த வாரம் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. செயலணியின் அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகள் அல் – ஹுஸைன் வரவேற்றிருந்த அதேவேளை, விசேட நீதி மன்றம் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகளும் ஏற்றுக் கொண்டிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்ததை உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் திட்ட வட்டமாக மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு  கலப்பு முறையிலான நீதிமன்றமே அமைக்கப்பட வேண்டும் என்ற உயர்ஸ்தானிகரின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என்று அவர் மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்தார்.

ஜெனீவா தீர்மானத்தின் நிபந்தனைகளையும் ஏற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரையில் அதாவது, ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலகட்டத்தில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்கக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் தனது அவதானிப்புகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் எதிர்வரும் மார்ச்சில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரில் விரிவான அறிக்கையொன்றை வெளியிடவிருக்கும் நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கான உத்தேச நீதிப் பொறிமுறை குறித்து வாதப்பிரதிவாதங்களை செயலணியின்  அறிக்கை மீண்டும் மூளவைத்திருக்கிறது.

உள்நாட்டு நீதிபதிகளையும் வெளிநாட்டு குறிப்பாக பொதுநலவாய நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்களையும் உள்ளடக்கிய விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென்று கோருகின்ற ஜெனீவாத் தீர்மானத்துக்கு இலங்கையும் அனுசரணை வழங்கிய போதிலும் கூட வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்க இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி சிறிசேன திட்டவட்டமாக பல தடவைகள் கூறி வந்திருக்கிறார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட, ஜனாதிபதி கூறுகின்ற அளவுக்கு ஆக்ரோஷமாக இல்லாவிட்டாலும் வெளிநாட்டு நீதிபதிகள் உள்நாட்டு நீதி விசாரணைகளில் பங்கேற்பதற்கு அரசியலமைப்பு இடமளிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கடந்த புதன்கிழமை லண்டனில் சர்வதேச விவகாரங்களுக்கான றோயல் நிறுவனத்தில் இலங்கையில் நல்லிணக்கச் செயன்முறைகள்’ என்ற தலைப்பில் உரையொன்றை நிகழ்த்தினார். நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டமை குறித்து தனதுரையில் குறிப்பிட்ட அவர், உத்தேச நீதி விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பு தொடர்பில் அரசாங்கத்திற்குள் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுவதை சபையோருக்கு நினைவுபடுத்தினார். வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்ற போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம் சுயாதீனமானதும் நம்பகத்தன்மை கொண்டதுமான உள்நாட்டுப் பொறிமுறையொன்றுக்கான தேவை குறித்து தெளிவான கருத்தொருமிப்பு இருக்கிறது என்று  அவர் கூறினார்.  அத்துடன் சுயாதிபத்தியம் கொண்ட  ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் தாங்கள்  பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் ஆலோசனை கலந்து நீதிவிசாரணைப் பொறிமுறையின் கட்டமைப்பை தீர்மானிக்கவிருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் தனதுரையில் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பு குறித்து இலங்கையில் மீண்டும் வாதப்பிரதிவாதங்கள் மூண்டிருக்கும் நிலையில் சர்வதேச சமூகத்துக்கு அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான சந்தர்ப்பமாக அவர் தனது லண்டன் உரையைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் கூற முடியும்.

சர்வதேச சமூகத்தைப் பொருத்தவரை அதுவும் குறிப்பாக அச்சமூகத்தின் முன்னணி  வல்லாதிக்க நாடுகளைப் பொறுத்தவரை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தக்கூடிய அளவுக்கு இலங்கையில் நீதித்துறை நம்பகத்தன்மை கொண்டதாக விளங்கவில்லை என்ற நிலைப்பாட்டையே ஆரம்பத்தில் கொண்டிருந்தன. இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஏற்பட்ட புதிய சூழ்நிலைகளில் சர்வதேச சமூகத்தின் போக்கில் காணப்படக்கூடியதாக இருந்த நெகிழ்வுத்தன்மை நீதி விசாரணைப் பொறிமுறையில் முன்னைய நிலைப்பாட்டிலேயே  அச்சமூகம் இனிமேலும் இருக்காது என்ற நம்பிக்கையை அரசாங்கத்திற்கு கொடுத்திருக்கிறது போலும். அதன் காரணத்தினால்தான் ஜெனீவாத் தீர்மானத்தின்  ஏற்பாடுகளுக்கு முரணாக அரசாங்கத் தலைவர்களினால் பேசக் கூடியதாக இருக்கிறது.

போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை அது உள் நாட்டு நீதி விசாரணைகளில் கிஞ்சித்தும் நம்பிக்கை கொண்டதாக இல்லை. சர்வதேச விசாரணையையே தமிழ்ச் சமூகம் வலியுறுத்திவந்திருக்கிறது. ஆனால் , ஆட்சி மாற்றத்துக்குப்பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற சக்திகள் கடைபிடிக்க ஆரம்பித்த இணக்கப் போக்கு அரசியல் காரணமாக ஜெனீவாத் தீர்மானத்தில் கூறப்பட்ட கலப்புமுறையிலான நீதி விசாரணைப் பொறிமுறையில் தமிழ்ச் சமூகத்தின் அக்கறை ஓரளவுக்கேனும் திரும்பியது. இதைக் கவனத்தில் எடுத்ததன் காரணமாகவே நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணி ஆரம்பத்தில் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கியதாக விசாரணையைத் தொடங்கிவிட்டு, பிறகு இலங்கை நீதித்துறையின் மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்ததும் வெளிநாட்டு நீதிபதிகளை  படிப்படியாக விடுவிக்கலாம் என்ற விதப்புரையைச் செய்திருக்கிறது. இந்த அம்சங்களையெல்லாம் கணக்கில் எடுத்து அறிக்கை தொடர்பில் பரந்தளவிலான பொதுமக்கள் கருத்தாடலுக்கு வசதியான ஊக்குவில்லைச் கொடுப்பதற்ஙகுப் பதிலாக அரசாங்க தலைவர்கள் எடுத்த எடுப்பிலேயே எதிர்ப்பை தெரிவிப்பது விவேகமானதல்ல.

பொதுவில் நோக்குகையில், ராஜபக் ஷ அரசாங்கம் தானே நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வெறுப்புடன் பார்த்ததைப்போன்றே இன்றைய அரசாங்கமும் தான் நியமித்த இந்த செயலணியின் அறிக்கையை வெறுப்புடன் நோக்குகிறது.

ராஜபக்ஷ அரசாங்கம் நல்லிணக்கத்தை நோக்கிய செயற்பாடுகளில் அக்கறை காட்டவில்லை. கடந்தகால உரிமை மீறல்களுக்கான பதில் கூறும் கடப்பாட்டை வெ ளிக்காட்டுருச்சிவம் அக்கறை காட்டவில்லை.  அரசியல் தீர்வேக் காண்பதிகள்  காட்டயில்லை

ஆனால் தற்போதைய அரசாங்கம் நல்லிணக்க செயன்முறைகளில் அக்கறை காட்டுவதாகக் கூறுகிறது. பதில் கூறும் கடப்பாடு பற்றியும் பேசுகிறது. அரசியல் தீர்வு குறித்தும் பேசுகிறது.

ஆனால் எதையுமே செய்ய முடியாததாக  இருக்கிறது. முன்னைய அரசாங்கம் எதையும் செய்ய முடியாது என்று கூறியலண்ணமே எதையுமே செய்யாமல் இருந்தது. இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் செய்வதாகக் கூறிக் கொண்டே  எதையும் செய்ய  முடியாததாக இருக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *